திங்கள், 17 நவம்பர், 2014

தொலைபெசி

தங்கையொரு தொலைபெசி வாங்கி வந்தாள்
தக்கபடி காப்பதாக எண்ணிக் கொண்டு,
என்கையே அன்றிப்பிற கைகள் எல்லாம்
இதைத்தொடுதல் ஆகாதே என்று  சொன்னாள்
பின், கையால் அதனையவள் தூக்குங் காலை
பெட்டென்ற ஒலியோடு வீழ்ந்த பேசி,
கண்களிலே நீர்தன்னை வீழச் செய்ய‌
கலங்கிவிட்டாள் கவலையவள் நெஞ்சைக் கவ்வ.

என்னதங்காய்!என்றேன் நான்; பாவம் அன்னாள்
என்செய்வாள் என்மனமோ இரங்கிற் றின்றே
சொன்னமருட் சொல்தன்னை மறக்க வேண்டி]
சோர்வுலகில் வீழாதே என்றல் போலென்
கண்னொளியைச்  செலுத்தினேன்  மற்றென் செய்வேன்;
கண்மணியே வாவென்றே அணைத்துக் கொண்டேன்;
தன்னொளியை மீள்பெற்ற நிலவோ பின்னாள்
தக்கனவே அறி நிறைவை அடைவாள் உண்மை.



திங்கள், 3 நவம்பர், 2014

The student மாணவனே,,,

படாமை நேர்ந்தால் வீணென்பான் விழுப்புண் வேண்டிடும் வீரமகன்;
தொடாமை நேரத் துயர்கொளும் காதலி தோள்விழை காதலனே;
இடாமை உண்டேல் இந்நாள் பாழென ஏற்பவன் அறவ‌ழியோன்;
விடாமை கொண்டு கல்வி தொடர்பவன் வெல்லும் மாணவனே.

ஞாயிறு, 2 நவம்பர், 2014

பிரகாசம்


பிரகாசம் என்ற பெயருள்ள ந(ண்)பர்கள் பலருள்ளனர். பிரகாசம் என்பது ஒளி என்று பொருள்படுமாதலின், இந்தச் சொல்லுக்குப் பால்பாகுபாடு இல்லை என்றாலும் இப்பெயர் தாங்கியோர் பெரும்பாலானவர்கள் ஆடவர்களே ஆவர் 
பிரகாசம் என்பதைச் சங்க நூல்களில் கண்டுபிடிக்க முடியவில்லை. நீங்கள் கண்டிருந்தால் தெரிவியுங்கள்
ஆகவே இது தமிழ்  அன்று எனபர்.

பண்டைக் காலத்தில் அரசர் அரண்மனைகள் பெரியனவாய் இருந்தன. ஆனால் பெரும்பாலான மக்கள் சிறு வீடுகளிலேதாம்  வாழ்ந்தனர். வீடுகளும் போதுமான  வெட்டம் (ஒளி) இல்லாமல் இருக்கும்.  வீட்டுக்கு வெளியிலேதான் வெளிச்சம்.

புறத்தே கதிரவன் அல்லது நிலா காயும்.

புற காயம் > புறகாசம் > பிரகாசம்.

யகரம் > சகரமானது.

புற காசம் என்பதில் வல்லெழுத்து மிகாது காக்கப்பட்டது.