செவ்வாய், 21 அக்டோபர், 2014

உழிஞைத் துறைகள்

உழிஞைத் திணையில் துறைகள்  முப்பத்து ஒன்றாம்,

அவற்றுள் சில  இப்போது அறிந்து மகிழ்வோம்.

எந்த முன்மையும் முதன்மையும் வாய்ந்த காரிய மாயினும் அதனை நல்ல நாள் பார்த்துச் செய்வது பண்டைத் தமிழர் வழக்கம். உழிஞை என்னும் பகையரண் மேற்கொள்ளக் கருதிச் செயலில் இறங்கியபோதும் நல்ல நாள் பார்த்துவிட்டு அங்ஙனம் இறங்கிய மகிழ்வுடன் செல்வதையே 
அந் நாளில் விரும்பினர். கொற்றக் குடையைச் செல்ல விடுதற்கும் நாள் பார்த்தனர். வாள் எடுத்துச் செல்லுதலுக்கும் அங்ஙனமே நாள்  பார்த்தனர்,

கொற்ற‌க்குடையை (அதனை ஏந்திய படைப்பிரிவை) புறப்படச் செய்யும் நிகழ்வு  "குடை நாட்கோள்" எனப்படும். இது குடை புறவீடு விடுதலெனவும்
படும். இந் நிகழ்வினைப்பாடிய பாடல், உழிஞைத்  திணையில் குடை நாட் கோள் என்னும் துறையைச் சேர்ந்ததென்று குறிக்கப்படும். புறவீடு என்னும் சொல்லில் வீடு என்பது "விடுதல்" : விடு> வீடு முதனிலை நீண்ட தொழிற்பெயர்.  அதாவது வினைச்சொல்லினின்று பிறந்த பெயர்ச்சொல்.


இரண்டும் ஒரே நேரத்தில் புறப்படுமா,  ஒன்றடுத்து ஒன்று புறப்படுமா என்றார்க்கு, இவை படை ஒருங்கிணைக்கும் மேற்பார்வையாளன் உரிய 
கட்டளைகளைப் பெற்று செயல்படுத்துவனவாகும். நாம் அறியற்பாலது, இவை பற்றி எழும் புலவர் பாடல்கள் எங்ஙனம் துறைப்படுத்தப்படுமென்பதே.

போர்முரசு தெய்வத்தன்மை வாய்ந்தது என்று கருதினர். அதற்குப் பொன்னால் ஆன உழிஞைப் பூமாலை போன்றது சூடப்பெற்று, ஆடு வெட்டப்பட்டு, பலிப்பூசை நடத்தப்பட்டது. இதைச் சொல்லும் பாடல் "முரச உழிஞை"த் துறை சார்ந்தது. இது பொன் புனை முரச உழிஞை என்று பாடல்களில் சிறப்பிக்கப்படும்.

இப்படியே உழிஞைத் துறையில் தெரிந்துகொள்ளவேண்டிய வரலாற்றுத் துணுக்குகள் பலவாகும்.

திங்கள், 20 அக்டோபர், 2014

மூக்குத்தி

இப்போது மூக்குத்தி என்ற சொல்லைப் பார்ப்போம்.

இது மக்கள் படைத்துப் பேச்சு வழக்கில் உலவவிட்ட சொல், பின்னர் அது எழுத்தில் புகுந்தது என்பதுதான் உண்மை.

மூக்கைக் குத்தி அணிந்த சிறு அணிகலனே மூக்குத்தி.

மூக்கு+ குத்தி = மூக்குக்குத்தி.

இது பின் மூக்குத்தி ஆயிற்று. "குக்குத்" என்பது நாவொலிக்க, வல்லின ஒலிகள் மிகுந்து தட்டுத் தடையாவதுபோலிருந்ததனால், அது மருவி ஒரு
கடின ஒலியையாவது விலக்கி, சற்று எளிதாகிச் சொல்
 அமைந்தது.

குத்தித் துளையிடும் ஊசியே அணியின் ஒருபால் அமைந்து, ஒரு கடிப்பையும் (ஹோல்டிங் கிளிப் )மாட்டி மூக்கினுள் அணியை நிறுத்துதற்குப்

பயன்படுவதாயிற்று. பிற்காலத்தில் இவை மேம்படுத்தப்பட்டு, வேறுவகையாகவும்  செய்யப்படிருக்கலாம்.

குக்குத் என்ற இடையில் வரும் ஒலியில், வல்லினம் இரட்டித்தது. இப்படி இரட்டிக்குமிடங்களில் இரட்டித்தல் விலக்கப்பட்டு ஒலித்தல்
எளிமையாக்கப் படுவது முன் என் இடுகைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து படித்து வருவோர்க்கு இது புரியும்.

திரிபு  விதிகளின் பட்டியலொன்றைப் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.

இவை போன்றவற்றுக்கு இரவல் வாங்காமல், சொந்தச் சொல்லை ஆக்கிக்கொண்ட தமிழ் மக்கள் பராட்டுக்குரியவர்கள்.

மூக்குத்தி என்பதில், மூக்கு ‍‍‍ பகுதி; தி  விகுதி என்றால் பெரும் பிழை ஒன்றுமில்லை. அதுவும் ஒரு விளக்கம் என்று விட்டுவிடலாம்.  குத்தும்
ஊசி குறித்த சொல்  அணியையும் குறித்தது ஆகு பெயர் என்றால், அதிலும்
உண்மை காணல் தவறில்லை.

சனி, 18 அக்டோபர், 2014

"உழிஞைத் திணை"

புறப்பொருள் இலக்கணம் பற்றிச் சிலவற்றை முன் இடுகைகளில் கண்டோம். தொடர்ந்து "உழிஞைத் திணை" என்பதை இப்போது கண்டு இன்புறுவோம்.

தமிழ் அரசர்கள் ஆண்ட காலம் போய்விட்டது. பெரிதும் போர்பற்றிப் பேசும் புறப்பொருள் இலக்கணத்தின் இத்தகைய உள்ளீடுகள், அறிதற்குப் பயன்படுமன்றிப் புரிதற்குப் பயன்படாதவை.  புரிதல் = செய்தல்.  செயல்.


முடிமிசை உழிஞை சூடி ஒன்னார்
கொடி நுடங்கு ஆர் எயில் கொளக்கருதின்று.

என்பது கொளு.

 முடி ‍ : மகுடம். மிசை: மேல். உழிஞை : ஒரு பூ; அதனாலான மாலை.  சூடி ‍-- புனைந்து.  ஒன்னார் - ‍ பகைவர்.  கொடி-  ‍ அரசின்கொடி.  நுடங்கு : அசைதல்.* ஆர்  :   நிறைவு. ( நிறைந்த) .    எயில் ‍--  அரண்.   கொள : கைப்பற்ற.

பகை அரசனின் கோட்டையைக் கைப்பற்ற நினைத்து முயற்சியில் இறங்கிய ஒரு வேந்தன்,  உழிஞைப் பூமாலையைச் சூடிக் கொள்வான்.

இம்முயற்சியைப் பாடும் பாடல், உழிஞைத் திணையைச் சேர்ந்தது.

உழிஞை ஒரு வகைக் கொடி. (படரும் கொடி வகை).  இதற்குச் சிற்றூர்களில் கொற்றான் கொடி என்று சொல்வர் என்று தெரிகிறது.


இத்தகைய மரபுகளெல்லாம் தோன்றித்  தமிழர் வாழ்வில் நிலைத்துத் திகழ்ந்ததற்கு,  தமிழரும் தமிழும் மிக்க நெடுங்காலம் தொடர்ந்து நின்றதே காரணம்.  தமிழின் தொன்மை அறிக.

--------------

* நுடங்கெரி  -  அசைந்தபடி எரியும் நெருப்பு


1uzijnai1. balloon vine, , cardiospermum halicacabum ; 2. a common wayside weed, aerua lanata ; 3. chaplet, balloon vine garland worn by soldiers when storming a fort
.