திங்கள், 8 செப்டம்பர், 2014

மலேசியா தேர்ந்த நாடே!

அரசினரின் தொல்லைகளோ ஒன்றும் இல்லை;
அழகான நல்லமைதி ஆர்க்கும் நாடே!
வெறுசினத்துக் கொள்ளைஎனில் ஒன்றி ரண்டு!
வீணர்சிலர் நிகழ்த்துவன  எங்கே இல்லை?
தருகனத்த ஊர்க்காவல் தாக்கம் கட்டும்!
தக்கபடி மக்களாட்சி ஊக்கிச் சுட்டும்;
திருகனத்த மலேசியா தேர்ந்த நாடே!
தேடினிது  போல்சிலவே ஞால மீதில்.

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

" பாதுகையே துணையாகும்"

இனி பாதுகை என்னும் சொல்லைக் காண்போம், இச்சொல் இப்போது பொதுப்புழக்கத்தில் இல்லை.

கோவிலுக்குள் போய் சாமி கும்பிட்டுவிட்டுத் திரும்புகிறவள், வெளியில் கிடக்கும் செருப்புக் கடலில் தன்னுடையதைத் தேடும்போது, "செருப்பை எங்கு போட்டேன் என்று தெரியவில்லை" என்கிறாள். "பாதுகையைத் தேடிக்கொண்டிருக்கிறேன்" என்பதில்லை.  ஆனால் இராமர் பற்றிக் கூறுகையில்,  " பாதுகையே துணையாகும்" என்கிறோம்.  சிலவிடங்களில் மட்டுமே இதைப் பயன்படுத்த  முடிகிறது.

பாதுகை என்பதில் முன் நிற்பது பாதம் என்பது, பாதம் காலணியை உகக்கிறது.
அதாவது காலணியை அணிய விரும்புகிறது,  அணிகிறது.

பாத(ம்) + உக + ஐ = பாத் + உக + ஐ  ‍= பாத் +  உக் + ஐ  = பாதுகை.

மகர ஒற்று, அகர ஈறு, மீண்டும் அகர ஈறு முதலிய கெட்டன.  

ஐ விகுதி .

பாதமென்பது கால் தரையில் பதியும் பகுதி என்பது.  பதி + அம் = பாதம்,  எனின் முதல் நிலை திரிந்தது  அம் விகுதி பெற்றது. 

ஈரல்

நெஞ்சுக் கூட்டுக்குள் இருக்கும் உள்ளுறுப்புகள் பல, அவற்றுள் ஒன்று ஈரல் ‍மூச்சை உள்ளிழுக்கும் செயலைச் செய்கின்றது; இன்னொன்று அரத்தத்தை உள்ளிழுக்கும் (இழுத்து வெளியில் இருக்கும் குழாய்களில் செலுத்தும் ) வேலையச் செய்கிறது.

ஈரல் என்ற பெயர் ஏற்படக் காரணம் உள்ளிழுக்கும் செயல்தான். ஈர்த்தல் -  உள்ளிழுத்தல்.ஈருள் 

ஈர் >  ஈர்த்தல்;
ஈர் >  ஈரல்  (அல் விகுதி}
ஈருள்  :  ஈர்  + உள் (உள் விகுதி)


தமிழில் வழங்கும் இருதயம், இதயம் என்பனவும் இவ்வடியினின்றே தோன்றியனவாம்.

ஈர் > ஈர்+ து + அ + அம்=  ஈர்தயம் >  இருதயம்  > இதயம்.
ஈர் என்பது இர் என்று குறுக்கம் பெற்றது.
து என்ற அஃறிணை விகுதிச்சொல் இங்கு சொல்லாக்க இடைநிலையாய் இடப்பட்டுள்ளது.
அ என்ற சொல்லாக்கச் சாரியை இடப்பட்டுள்ளது.
அகரத்துக்கும் இறுதி அம் விகுதிக்குமிடையே உடம்படுமெய் யகரம் முளைப்பது இயல்பு.

இஃது திறம்பட அமைக்கப்பட்டுள்ளது.
இதயம் என்பது இருதயமென்பதன் இடைக்குறை.

அறிந்து ஆனந்தமடையுங்கள்.