வியாழன், 24 ஜூலை, 2014

வென்றபின் பகைவனுக்கு அருள்செய்

எது தமிழர் பண்பாடு என்பதை பண்டைத் தமிழ் நூல்கள் மிக்கத் தெளிவுடன் விளம்புகின்றன. "யாதும் ஊரே" என்பது புற நானூறு காட்டும் பண்பாடு.
போரில் பெருவெற்றி பெற்ற பெருஞ்சேரல் இரும்பொறையைப் புகழ்ந்து பாடிய புலவர்கோமான் அரிசில் கிழாரும் ஒரு தமிழன் பண்பாட்டு முத்தினை  எடுத்து அறிவுறுத்தினார். அது யாதென்பதை நாம் காண்போம்.

இரும்பொறைக்கும் அவனுடன் போர் நிகழ்த்திய மற்ற மன்னர்களுக்கும் அப்போர் நடைபெறுமுன்னரே கிழார்  சென்று தணிவுரைகள் பகர்ந்தார்.  யாரும் கேட்கவில்லை.சண்டையில் மற்றவர்கள் தோற்றனர். கிழார் இரும்பொறையைப் புகழ்ந்து பத்துப் பாடல்கள் பாடினார். "மன்னா! உன்னை எதிர்த்து  நின்ற மன்னர்களிடம் எவ்வளவோ சொன்னேனே!  என் சொல் கேளாது போகவே, சான்றோர் வாயிலாகவும் சொன்னேனே!  அதையும் கேட்கவில்லையே. தோற்று முகவரி இழந்தவர்கள் ஆகிவிட்டனர். அவர்கள் நிலைக்கு இரங்குகிறேன்.

போகட்டும் மன்னா! அவர்களிடம் அருள் கொண்டு,  கொடுக்கும் கப்பத்தைப் பெற்றுக்கொண்டு நாடுகளை அவர்களிடமே கொடுத்துவிடு!" என்றார். " அதுவன்றோ நெடுந்தகைமை!! அதற்கு உரிய  தகைமை உனக்கன்றோ இங்கு உள்ளது!  அருள்வாய்!"  என்றார்.


"இடப்0படும்  பலிப்பொருளைப் பெற்றுக்கொண்டு, வணங்கி நின்றோனை விட்டுச் செல்லும் தேவதை போல, அருள்செய்வாயா"  என்றார்.

எதிரிகளையும் மன்னிப்பதே தமிழர் பண்பாடும் அரசியல் நாகரிகமும் ஆகும்.

இந்த முத்துப் பொதிந்த அந்த வரிகளை  அடுத்த இடுகையில் தருவேன்.

புதன், 23 ஜூலை, 2014

The poetic excellence of Arisil KizAr


துறை: செந்தறைப் பாடாண்பாட்டு
செந்தூக்கு.continued from previous post (click)

http://sivamaalaa.blogspot.com/2014/07/blog-post_39.html


உரவோர்  எண்ணினும்  மடவோர்  எண்ணினும்
பிறர்க்கு நீ வாயின் அல்லது நினக்குப்
பிறருவமம் ஆகா ஒருபெரு வேந்தே!
(மூன்று வரிகள் விடப்பட்டுள்ளன,
 ஓர் அடி சிதைவு)
'''''''''''''''''''''
மருதம் சான்ற மலர்தலை விளைவயல்
செய்யுள் நாரை ஒய்யும் மகளிர்
இரவும் பகலும் பாசிழை களையார்

குறும்பல் யாணர்க் குரவை அயரும்
காவிரி மண்டிய சேய்விரி வனப்பின்
புகார்ச் செல்வ! பூழியர் மெய்ம்மறை!

கழைவிரிந்து எழுதரு மழைதவழ் நெடுங்கோட்டுக்
கொல்லிப் பொரு ந! கொடித்தேர்ப் பொறைய, நின்

வளனும் ஆண்மையும் கைவண்மையும்
மாந்தர் அளவு இறந்தன எனப் பல் நாள்
யான்சென் றுரைப்பவும் தேறார்;  பிறவும்

சான்றோர் உரைப்பத் தெளிகுவர் கொல்? என‌

ஆங்கும் மதி மருளக் காண்குவல்;

யாங்கு உரைப்பேன் என வருந்துவல் யானே!

அரும்பொருள் :  முன் எழுதிய விளக்கத்துடன் இணைத்துப் படிக்கவும் )


 உரவோர் = வலிமை பொருந்திய உள நிலையும் சிந்தனையும் உள்ள மேலோர்.
மடவோர் = பெண்டிர் ;
வாயின்   அல்லது   -  தேடி  வரும்    இடமல்லது '
\
மருதம் -  உழவு நிலப் பகுதி ;
மலர் தலை =  அழகிய இடம்
விளைவயல் =    விளையும் வயல்

செய் =  ஈர  நிலம் ;  உள் = (நிலத்து) உள்.
ஒய்யும் -  ஒலி   செய்து விரட்டும் 
பாசிழை -   அணிகலன்கள்;
குறும்பல் =  சிறு பற்கள் (புன்னகை)
யாணர்  =  அழகு;   -குரவை  : ஒரு கூத்து.
புன்னகை  அழகுடன்  ஆடும் குரவைக் கூத்து; அயரும்  =  முயன்று ஆடும். 

காவிரி  = (ஆறு.)  மண்டிய - நிறைந்த;
சேய் =  செம்மை ; விரி - விரிந்து காண்கின்ற.\\வனப்பு - அழகு;
புகா அர்ச் செல்வ  --  புகார் நகருடைய செல்வனே 

பூழியர் =  சேரர்   மெய்ம்  மறை =  இது நாள் வரை மறைவாய் இருந்து இப்போது தன்னைக் காட்டிக்கொண்டவனே !   (விஸ்வ ரூபனே  )  உண்மை மறைபொருளே 

கழை - மூங்கில்   எழுதரு மழை  -  எழும் மழை முகில்கள்.
நெடுங்கோடு =  நெடு மலை(த்  தொடர்)

கை வண்மை -  கொடை  தாராளம் ஆனது;

மாந்தர்  அளவு இறந்தன -  மனிதர்கள் அளவு அல்லது வரைகோட்டினைக் கடந்துவிட்டன '

தேறார்  =  தெளிய மாட்டார்.

தெளிகுவர் கொல் =  புரிந்து கொள்வரோ?

அடுத்த  இடுகையில் தொடர்கிறது.

Previous:
http://sivamaalaa.blogspot.com/2014/07/blog-post_39.html












சேரனிடம் மோதாதீர்!................

பெரிய அறிவாளிகள் ஆகட்டும், அரிய அழகுடைய அணங்குகளாகட்டும், யார்  உன்னை எண்ணினாலும்,   அவர்களுக்கு நீதான் இடமாகுவாய், அன்றி எக்காலத்தும் எவ்விடத்தும் அவர்களில்  எவருமே! உனக்கு உவமை ஆகமாட்டார்கள். அத்தகைய ஈடற்ற ஒரு பெருவேந்தனே....

பெருஞ்சேரல் இரும்பொறையை இவ்வாறு பாராட்டுகிறார் அரிசில் கிழார்.

மருத நிலத்திலே, பூத்துக் குலுங்கும் வயல்களில் தங்கி நிற்கும் நீரிலே, வந்திறங்கும் நாரைகளை ஒலி எழுப்பி விரட்டும் மகளிர் பகலும் இரவும் உனக்காகத் தங்கள் அணிகளைக் கழட்டாமல் காத்துக் கிடக்கிறார்கள். கண்டு காதலைத் தெரிவிக்க வேண்டுமென்றால், உன் போன்ற வெற்றி வீரனையல்லவோ எதிர்கொள்ள வேண்டும்?

மண்டிவரும் காவிரி நீரின் செவ்விய விரிப்புக்கு உடையோனாகிய புகார்ச் செல்வனே!

மழை தவழும் கொல்லி மலைப்  போர்வீரா!

கொடிகட்டிய தேரையுடைய பொறையனே.......

நீ மனிதனின் அளவுகளைக் கடந்துவிட்ட செயற்கரிய செய்தோன்.

அப்போதே அந்தப் பகை மன்னர்களிடம் சொன்னேனே!  அவர்களுக்குதாம் அறிவில் தெளிவு இல்லை.

பிற சான்றோர் சொன்னால் கேட்பார்கள் என்று நினைத்தேன். அங்கேயும் அவர்கள் மதி மருண்டுவிட்டனர்.

உன் கையில் தவிடுபொடி ஆவதை அவர்கள் தவிர்த்திருக்கலாம்.

எங்கே கேட்டார்கள்? அவர்கள் நிலைக்கு வருந்துகிறேன்,.........................

இனி அரிசில் கிழாரின் இரும்பொறை பற்றிய பாடல் வரிகளையும் பொருளையும் கண்டு மகிழ்வோம்.  தொடரும்.