வெள்ளி, 20 ஜூன், 2014

"காரர்கள்" : வேலைக்காரன், வண்டிக்காரன், etc etc

வேலைக்காரன், வண்டிக்காரன், சண்டைக்காரன், குடும்பக்காரன் என்று "காரர்கள்" பலருளர்.  காரன் என்பதென்ன?

காரன் என்றொரு சொல், அகரவரிசைகளில் காண்பதரிது.   அது ஒரு தனிச்சொல் அன்று.

கருத்தல் = செய்தல் என்னும் பொருளில் ஒரு பழங்கால் வினைச்சொல் இருந்ததென்றும் அதனின்று கருவி, காரியம், காரணம் முதலிய தோன்றினவென்றும், பின் அது வழக்கொழிந்தது என்றும் மொழிஞாயிறு  தேவ நேயப் பாவாணர் மீட்டுருவாக்கம் செய்து  கூறியுள்ளார். எனவே காரன் என்பதும் கரு என்னும் சொல்லினின்று பிறந்து செய்வோன் என்னும் பொருளில் வழங்கி வந்துள்ளது என்று கூறலும் கொள்ளற்குரித்தே.

ஆயினும், நாம் வேறு வழியில் இஃது அமைந்திருக்குமா என்று  பார்க்கலாம்.

வேலைக்காரன் <  வேலை+ கு+  ஆர் + அன்.
இதில் அன் என்னும் ஆண்பால் விகுதியை எடுத்துவிட்டுப் பார்த்தால்:

வேலை + கு + ஆர்.

வேலைக்கார் என்றாகிறது.  ஆர் என்ற பலர்பால் விகுதி,  அவர் என்பது அதன்  பொருள்.  அர், ஆர் இரண்டும் அத்தகையனவாகும்.

ஒரு வாக்கியத்தின் சுருக்கமே அது.  உண்மையில், வேலைக்கு அவர், சண்டைக்கு அவர் என்று சொல்வதே அதுவன்றி மற்றில்லை.

பின் ஆர் என்பது பன்மை எனல்  மறந்து, மீண்டும் அதன்பின் ஓர் ஆண்பால் அல்லது பெண்பால் ஒருமை விகுதியைச் சேர்த்தனர். அது ஒருமை‍பன்மை ஒருவித "மயக்கம்". வழு எனினும் அமைந்துவிட்டபடியால், இலக்கணம் ஏற்கும் ‍ அது வழுவமைதி எனப்படும்.

தகப்பன் என்ற ஒருமையில், ஆர் விகுதி சேர்த்து தகப்பனார் என்று மரியாதைப் பன்மையில் கூறுவதும் வழுவமைதியே.

கு என்ற உருபு பற்றித் தனியே எழுதவேண்டும். இங்கு வேண்டாம்.

ஆக, காரன் என்பது பிறழ்பிரிப்பினால்  metanalysis.  விளைந்த சொல். 

வியாழன், 19 ஜூன், 2014

தை மாதம்.



 இம்மாதத்துக்கு ஏன் இப்பெயர் வந்ததென்று இங்கு ஆய்வோம். மார்கழியும் தையும் முன்பனிக்காலம். தைத்தல் ‍ இணைப்பு என்று பொருள்படும சொல் என்பது முன் பதிந்த இடுகைகளிற் கூறப்பட்டது. முன்பனிக் காலத்தில் மார்கழி தையுடன் இணைந்து வரும் மாதமாகையால்,  இணை  வரும் மாதம் என்னும் பொருளில் தையென்றனர்.

"முன்பனியாகிய மார்கழியும் தையும் தொடர்ந்தாற்போல..." என்பது நச்சினார்கினியர் உரை.  (தொல். அகத்திணையியல் )

"பின்பனிதானும் உரித்தென மொழிப" (தொல்,40. அகத்தினையியல்.)


இனி பூக்கள் பூத்துக்குலுங்கி  மனத்தினில் ஓர் இணைப்பினை ஏற்படுத்தும் மாதம் எனினும் ஆம்.

முருகனுக்கு உகந்த மாதமாய்   பற்றாளனோடு இறைவன் ஓர் இணைப்புக் கொண்டு அருள்புரியும் மாதமெனினும் ஆம். பொங்கல் பண்டிகை குதூகலம் தரும் நாட்கள் கொண்ட மாதமெனினும் ஆம்.

இவற்றுள் ஒவ்வொன்றுக்காகவும் ஒருசேர அனைத்துக்காகவும் இணைப்பினைத் தரும் நன்மாதம்  என்றும் கூறுதலும் பொருத்தமே.

மொத்தத்தில் தை எனின்  இணைப்பு ஆகும். அதுவே சொல்லாக்கத்து அடிப்படைக் கருத்து.

தொடர்புடைய இடுகைகள்:

thairiyam

http://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_27.html

thairiyachAli


 thaivaruthal

பக்கணம் பட்சணம்

பட்சணம் என்பது  காண்போம்.  இலையில் சோறு, குழம்பு முதலானவற்றுக்குப் பக்கத்தில் வைக்கப்படுவது பக்கணம் >  பட்சணம்.

பகு+ அம் = பக்கம்.
பகு+ அணம் = பக்கணம்.

பின் பக்கணம் > பச்சணம் > பட்சணம் ஆயிற்று.

அணம் என்பது ஒரு விகுதி.  கட்டு+ அணம் ‍  =  கட்டணம் போல அணம் என்னும் விகுதி பெற்றது பக்கணம்.

அணம் என்னும் விகுதி அண் என்னும் அடியிற்றோன்றியது.

அண் >  அண்மு(தல்.)
அண் >  அண்மை.
அண் >  அணிமை.
அண்  >  அண்டுதல்,  அண்டை.
அண்  > அணு
அண்  >  அணுகு(தல்)
அண் > அண்டி (பழத்தை அடுத்திருப்பதாகிய முந்திரிக் கொட்டை)

எனப்பல


அண்டா:    ‍ ஆக்கியவற்றை  கொட்டிவைக்க  அடுப்புக்கு அண்டையில் வைக்கப்படும் பெரிய பாத்திரம்.  பின்  அண்டாவும் ஆக்கப் பயன்பட்டது,

விகுதிகள் ஆதியிற் பொருளுடன் நின்றவை எனினும் பின்  தம் பொருளிழந்து வெறும் சொல்லாக்கத்துக்குப்  பயன்பட்டுள்ளன, அதனால் சொற்கள் பல்கிட வழியேற்படலாயிற்று.

பச்சை  என்பது இங்கு காய்கறிகளைக்  குறிக்கும் என்றும்  "அணம்" பின்னொட்டுப் பெற்று பச்சணம் ஆகி, பின் பட்சணம் ஆயிற்று  என்பாரும் உளர்.

இப்போது  பச்சணம்  (பட்சணம்)  பலவகை உணவுகளையும் குறிப்பதாக விரிந்துள்ளது.  எ-டு :  கேரளீய பட்சணம்  .Here   they meant Kerala Cuisine or kinds of kerala food.