வெள்ளி, 6 ஜூன், 2014

ஆசை

இனி ஆசை என்னும் சொல்லைச் சற்று நோக்குவோம்.

அழகிய ஒரு பூவினைக் கண்டு மனம் அதன்பால் அசையாதிருக்குமாயின்  அதன்மேல் அம்மனிதருக்கு "ஆசை "  இல்லை என்போம்.  அழகிய பூவிற்கும்  அசைந்து கொடுக்கா மனம்.  அசையுமாயின்  அதுவே ஆசை ஆகும் .

இந்த அசைவைத்தான் "சலனம்"  என்றும் சொல்வார்கள்.

படு என்ற வினைச்சொல் நீண்டு "பாடு" என்று பெயர்ச்சொல் ஆகும்.  இது முதனிலை நீண்ட தொழிற்பெயர்   எனப்படும் .

 அதேபோல் அசை நீண்டு "ஆசை" ஆகும்.
  ஒன்றை நோக்கி மனம் அசைதல்.

இந்தச் சொல் கொஞ்சம் திரிந்து,  பின்பு தேசிய சேவையில் ஈடுபட்டுவிட்டது. இது ஒரு பேச்சு  வழக்குச் சொல். பிற்காலத்தில் நூல்களில் இடம்பெற்றதாகும்.

"இவர் எத்துணை அழகிய பெண்ணுக்கும் அசைந்துகொடுக்காத ஞானி " என்று பேசிக்   கேள்விப் பட்டதில்லையா?


    ஆசைக்கோ ரளவில்லை அகிலமெல் லாங்கட்டி
            ஆளினுங் கடல்மீதிலே
    ஆணைசெல வேநினைவர் அழகேசன் நிகராக
            அம்பொன்மிக வைத்தபேரும்
    நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்
            நெடுநா ளிருந்தபேரும்
     நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி
            நெஞ்சுபுண் ணாவர்எல்லாம்
    யோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும்
            உறங்குவது மாகமுடியும்
    உள்ளதே போதும்நான் நான்எனக் குளறியே
            ஒன்றைவிட் டொன்றுபற்றிப்
    பாசக் கடற்குளே வீழாமல் மனத்தற்ற
            பரிசுத்த நிலையை அருள்வாய்
    பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
            பரிபூர ணானந்தமே.  [ தாயுமானவர். பரிபூர.10]


தணிவு. தணிக்கை.

மொழி பெயர்ப்புச் சொற்கள்:

சமாதானம் -   தணிவு.
censor  -  தணிக்கை.

from :  இந்துமதமும் தமிழரும்.பக்.148.

இவற்றுள் தணிக்கை என்பது ஓரளவு வழக்கில் வந்துவிட்டது.

சாம்பிராணி

பழைய தாள்களை வீசுவதற்காக எடுத்துக்கொண்டிருக்கையில், 2008ல் எழுதிய எனது குறிப்பு ஒன்று கிடைத்தது. அது சம்பிராணி பற்றியது.
இதை முன் ஓர் இணையதள வலைப்பூவில்  எழுதியிருக்கிறேன்.

சாம்பான்  என்பவன் பிணம் எரிப்பவன்.  இதன் வினைச்சொல் "சாம்புதல்" என்பது. அதாவது எரியூட்டுவது, புகை எழுப்புவது.  சாம்பார் என்பதும் நன்கு  குழைய வேகவைத்த பருப்பு.  இனி  சாம்பு சாம்பு என்று சாம்பிவிட்டேன் என்று சொல்வதுண்டு.  குழைந்து வீழும்படி உதை அடி கொடுத்தேன்  என்று பொருள்படும்.  சாம்புதல் :  வேக வைத்தோ, எரித்தோ, தாக்கியோ செய்வதைக் குறிக்கிறது.

சாம்பு + அரண் + இ = சாம்பரணி , இது பின் சாம்பிராணி  ஆயிற்று. எரிக்கும் போது, அல்லது தணலில் குழைவித்துப் புகை கிளப்பும்போது ஈ, கொசு, எறும்பு முதலியனவும் பிறவும்  அண்டாமல், அரணாக விளங்குவது என்பதே பொருள்.

புகையிலை போயிலை என்று திரிந்தாற்போல சாம்பரணி சாம்பிராணி  ஆகிவிட்டது. சாம்பிராணியில் பிராணி எதுவும் இல்லை.

சாம்புதல் எரித்தலையும் குறிக்கும் என்பதை சில அகரவரிசைகள் தவறவிட்டுவிட்டன.  சாம்பல் என்ற சொல், இன்னும் நம்மிடை வழங்குதலை மறந்தனர். எரித்து வருவதே சாம்பல்.