வியாழன், 15 மே, 2014

மக்களாட்சி மலர் நாடு

மக்களாட்சி மலர் நாடு  என்றபெயர் வேண்டும்
மக்களிடம் அதிகாரம் தந்தபுகழ் வேண்டும்!
தக்கதொரு தலையமைச்சர் அவர்களுக்கு வேண்டும்
தமக்குரியர் மேலெவரும் கைவைத்தால் குற்றம்.
பக்கலொரு படைத்தலைவர் துணை நிற்றல் வேண்டும்
பணிகளிலே அவர் மூக்கை நுழைத்தாலோ கூச்சம்!
மிக்கவொரு முறைமன்றம் அதைச்செய்தல் வேண்டும்
மேலிறுதி அதிகாரம் அவர்களுக்கே வேண்டும்


மேலெவரும்   -   மேல்  எவரும்.   பக்கலொரு  --  பக்கல் ஒரு  :  பக்கத்தில்  ஒரு மிக்கவொரு -   அதிகாரம்  மிகுந்த .    .முறை மன்றம் -  நீதி  மன்றம் .   மேலிறுதி  -   supreme.  .



another council name

இனி, அம்பலம் என்பதை ஆய்வு செய்வோம்.

இந்தச் சொல்லில் இறுதியாய் நிற்பது "அம்" என்னும் விகுதி.  இதைப் பிரித்து எடுத்துவிட்டால், மீதமிருப்பது அம்பல் என்பது.

அம்பல் என்று ஒரு சொல் உண்டெனினும், அது மலரும் நிலையில் அல்லது அதற்குச் சற்று முந்திய நிலையில் உள்ள  மொட்டினைக் குறிக்கிறது.  அது வேறு சொல்.

இங்கு நாம் கருதும் சொல், அம்+ பல் என்று பிரியும்.

இவற்றுள் பல் என்பதைப் பார்ப்போம். பல் என்பது பன்மை அல்லது பலர் என்று பொருள்தரும் சொல்.

கூடுவோர்  பலர் என்பதே இதனால் பெறப்படுவது. ஆகவே ஊருக்குள் பலர் கூடும் இடமாயிற்று. அறையில் நடந்தது அம்பலத்துக்கு வருவதா என்று கேட்கப்படுவதிலிருந்தும்,  "அம்பலமாயிற்று" என்ற வழக்கிலிருந்தும் பலர் கூடி ஒன்றை அறியுமிடம் என்ற பொருள் அறியப்படும்.

முன் நிற்கும் அம் என்பதில்  "அ" என்ற சுட்டு உள்ளது. "அந்தப் பலர்கூடும் இடம்"  என்பது பொருள்.  அப் பல் என்று வல்லெழுத்தாக வரற்பாலது அம்பல்  என்று மெலிவுற்றது. சித்து> சித்தன், சித்து > சிந்தனை என்று மெலிதல்போன்றதே இது. இப்ப்டி மெலிந்து வரும் சொற்களின் பட்டியல் ஒன்றை வைத்துக்கொள்ளுங்கள் .

அன்றியும் முன் நிற்றல் உரிய  "அம்" என்பது அழகும் குறிக்குமாதலின், அம் இருபொருள் தருவதென்பதும்  ஆம்.

இறுதி அம், சொல்லாக்க விகுதி.

அவை என்பது சுட்டில் வளர்ந்த சொல்லாதல் போலும் இதுவும் சுட்டடிப் பிறப்புச் சொல்லே. 

இதற்குப் பிற பொருள் பின் வளர்ந்தவை.  அவற்றுள் "கோயில் " என்பதும் அடங்கும்.

புதன், 14 மே, 2014

pakkiri

பெரும்பாலும் முஸ்லீம் துறவியைக் குறிக்கும்  சொல்லாம் இது.

நபி நாதர் தம் பின்பற்றாளர்க்குத் துறவறம் போதிக்கவில்லை. அவர்கள் யாவரும் திருமணம் செய்துகொண்டு இல்லறம் நடத்தக் கடவர் என்றே அவர் விதித்தார்.  மண வயது எட்டிய ஒவ்வொரு முஸ்லீமும் அவர் வாழ்க்கையில் பக்கத்துணையாக ஒரு பெண்ணைப் போற்றிக்கொள்ள வேண்டும். 

இவ்வாறு கூறினாலும், ஒரு குறிப்ப்பிட்ட குழுவினர்  துறவறம் கொள்வாராய் உள்ளனர். அவர்கள்  "பக்கத்துணை இல்லாதவர்கள்"  என்பது உணரப்பட்ட போது,  பக்கு+இலி =  பக்கிலி  என்ற வரணிக்கப் பட்டனர்.

பக்கு என்பது பக்கம் என்பதன் முன் நிற்கும் வடிவச் சொல்.  பக்கு+ அம் = பக்கம்.

பக்கு + அம் = பக்கம்.
பக்கு+  இலி = பக்கிலி.

லகரம் ரகரமாய்த் திரியும்.

பக்கிலி >  பக்கிரி.>  பக்கிரிச் சாமி.  பக்கத் துணையாக ஒரு மங்கையை இல்லாதவராய் வாழ்வு நடத்தும் துறவி என்பதாகும்.

லகரம் ரகரமாய்ப் பல சொற்களில் திரிந்துள்ளன.  தமிழல்லாத வேறு மொழிகளிலும் இது காணலாம். இதை என் முன் இடுகைகளில் குறித்துள்ளேன்.

அம்பலம் > < அம்பரம்,  சிற்றம்பலம் >  சித்தம்பரம் > சிதம்பரம்.
சிதம்பரம் என்பதற்கு வேறு அழகிய பொருள் வருவித்துரைப்பதுமுண்டு.

இவை பின்பு  விவரிக்கப்படும்.

பக்கிரி என்பது  பின் வேறு மொழிகட்கும் தாவியது  அது மிக்கப் பொருத்தமான அமைப்புடையது என்பதையே தெரிவிக்கும்.