சனி, 10 மே, 2014

தூவானம்

பல சொற்கள் தம் அமைப்பில் முன் பின்னாக அமைக்கப்பட்டுள்ள என்பதைக் கண்டறிந்து முன்பு கூறியுள்ளேன்.  சரியான ஆய்வின்மையால் அவை பெரும்பாலும் கண்டறியப்  படாமல் இருந்தன. அல்லது  கண்டவர்  விண்டதில்லை என்று அடைபட்டுக் கிடந்தன.
இத்தகையவற்றில் ரவிக்கை என்பதொன்று என்பதை முன்பு வெளியிட்டுள்ளேன் .

இரு+அவிழ் +கை  =  இரு+ அவிக்கை = இரவிக்கை >  ரவிக்கை.

நடுவில் நெஞ்சுப் பகுதியில் அவிழ்க்கவும் பக்கங்களில் இரு கைகளும்  உடைய ஒரு "பெண்கள்" சட்டை.  இது  நன்றாகப் புனையப் பட்ட ஒரு சொல்.இத்தகு  புனைதிறன் இக்காலத்துப் புலவர்க்கு உண்டாவென்பது ஐயத்துக்குரியது.

இல்லத்தின் வாய்,   இல்வாய் என்று வழங்காமல், வாய்+இல் = வாயில் என்று அமைந்ததும் அது பின் வாசல் என்று திரிந்ததும் கண்டீரோ? இல்லத்து  நுழைவு என்று சொல்லலாம். இங்கு நுழைவு என்பது ஆகு பெயராய் நுழைவிடம் குறிக்கும்.

தூவானம் என்பதும் இங்ஙனம் முறைமாற்றாக அமைந்ததே. வானம் தூவல் எனின் அது வாக்கியமாய் நிற்கத் தகுவதன்றி ஒரு சொன்னீர்மைப் படுவதன்று.  அதை முன்பின்னாக்கி, தூவானம்,  தூவானை என்றெல்லாம் சொல்வதே சொல்லாக்கத் திறன்.

இந்த உத்திகளையெல்லாம் கையாளாமல்  இருந்திருந்தால், தமிழ் காலத்துக்கேற்பச் சொற்களைப் புனைந்துகொள்ள இயலாமல் தமிழர் ஒரு கடன்படு கூட்டமாக அன்றோ வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும்?

சீனம் மலாய் முதலியவையும் சொந்தச் சொற்களை  வேண்டுங்கால் படைத்துக் கொள்கின்றன.

பொன்மொழி:

தெரிந்ததைத் தெரியும் என்று சொல். தெரியாததைத் தெரியாது என்று சொல்.
அதுவே உண்மையான அறிவு என்றார் சீன அறிஞர்  கன்பூஷியஸ் 


edit reserved

மக்கள் அரசு வீழ்ச்சி

"அந்த அம்மை செய்வதெலாம்
அண்ணன் வாழ்வு  உய்வதற்கே!"
இந்த எண்ணம் எதிர்ப்போர்பால்
கொந்த ளித்தே உதிர்ப்புறவே,
வெந்து வீசும் அன‌ற்கலகத்(து)
உந்து  வேகம் தெருக்களிலே!
குந்தி  வேலைக்கு இடமின்றிக்
குத்திக் கிடந்த‌ பணிமன்றே!


வேறு சந்தம்

மக்கள் தேர்தலில் கண்டெடுத்த‌
மாபெரும் தலைவி அவளெனினும்
தக்க மனங்கள் இலர்பலராய்
தடைகள் பலவாய் தளர்வுறவும்
ஒக்க நிலவா நீதிமன்றம்
ஓய்வு விளைத்துப் பாதிகுன்ற
தெற்கில் ஆசியம் கவலைஉறத்
தேய்ந்தது மக்கள் அரசதுவே.

இது தாய்லாந்து நிலவரம் பற்றிய பாடல்.

உதிர்ப்புற --  வெளிப்பட ;    பணிமன்று  -  அலுவலகங்கள்.
ஒக்க  நிலவா --  ஒத்த நிலையிலும் பார்வையிலும் செயல்படாத ;
 பாதி குன்ற -  தேர்தெடுத்த  கால அளவு பாதியாய்க் குறையுமாறு.
ஓய்வு விளைத்து  -  பதவியிலிருந்து விலகுமாறு ஒரு கட்டாய ஒய்வு கொடுத்து .  ஆசியம் - ஆசிய நாடுகள்

.uk/news/world/asia/turmoil-in-thailand-as-supporters-of-ousted-prime-minister-yingluck-shinawatra-warn-that-installing-an-unelected-leader-could-lead-to-civil-war-9349952.htm


வாக்குகள் எண்ணினாலே

ஒரு மந்திரி சொல்கிறார்:
"வரு நாளில் அரசமைப்போம் நாங்கள்!"
ஒரு பேரெதிர்த் தலைவர் சொல்கிறார்
"நிறுவிடுவோம் அரசை நாங்கள்!"
இருக்கும் பெட்டிகள் அகத்தே.
இரு -அக -சி - அம் எனும் இரகசியம்!
வாக்குகள் எண்ணினாலே
தேக்குபோல் திண்ணிய  தலைவர் யார்?
நோக்கக் கிடைப்பார் மக்களுக்கு!
அதுவரை எதிர்பார்த்து  அமைதியாய்
நதிபோல் ஓடிக்கொண்டிருப்பர் மக்கள்.

(புதுக்கவிதை )