ஞாயிறு, 4 மே, 2014

வித்தியாசம்

வித்தியாசம் என்பது  வேறுபடுதல் என்னும் பொருளில் வழங்குகிறது .
சமஸ்கிருத அடிச்சொல் "வித் " ( " வித்யா" ) மற்றும் தொடர்புள்ளவை  வேறுபடுதலைக் குறிக்கும்   சொற்கள் அல்ல.  இவற்றில் சில பின் காண்போம்.

வேற்று நாடு. வேற்று ஆள் என்பவவை வேத்து நாடு , வேத்து  ஆள் எனப்படும் இயல்பான  பேச்சு வழக்கில் .

வேத்தியாசம் என்பதே வித்தியாசம் என்று மாறியுள்ளது.

ஆய(து) >  ஆய(ம்)  >  ஆசம்.  (ய > ச.)

வேத்து >  வேத்தி >  வித்தி.

உயிரெழுத்துக்கள் இங்னம்  திரிதலும் உண்டு.   வே> வி .  இதைத்  தனியே  விளக்குவோம்.  வித் என்பதிலிருந்து வேதம் எனும்  சொல் பிறந்தது என்று பல பண்டிதர்கள் கூறுதலின்   வி>வே  , வே> வி புதிது அன்று.



     

வெள்ளி, 2 மே, 2014

குருணை நொய்

கடைகாரர் குருணை  என்றே  எழுதுகிறார். இந்தக் குருணைக்கும் குருவுக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

நொய் என்பது சிறு சிறு துகள்களாய் உடைந்த அரிசி.   குருணை  என்பது உண்மையில் "குறு நொய் "  ஆகும்.

குறுநொய் :   நொய்யினும்  சிறியனவான துகள்களாய் உடைந்த அரிசி. " எப்படிக் கணக்கு எடுப்பது? எல்லாம் ஒன்றுதான் என்கிறார் கடைகாரர். 

குறுமை -  சிறுமை.குறிப்பது.

பேச்சு வழக்கில் வேறு  பதத்துடன் இணைந்த சொற்கள் -- நெய் என்பதும் நொய் என்பதும் "ணை "  என்றே திரிகிறது.

எண்ணெய் -   எண்ணை ;
குறு நொய்  -  குருணை.

இன்னொரு தனி இடுகையில் சில தொடர்புடைய விடயங்களை ஆய்வு செய்யலாம்.

தேர்தல் களமும் மக்களாட்சியும்

தேர்தலென்றால் தேசத்தின் சேவைக்குத் தான்தன்னைத்
 தந்துவிடல் என்பதாகும்;
தேர்தலிலே வெற்றியெனின் சேவைசெய் வாவென்று 
தேசமக்கள் வேண்டலாகும்;
ஊர்களிலே தேர்தலின்முன் போடுகின்ற சண்டைகளை 
உற்றுப்பார்க் கின்றபோது,
பார்தனிலே இப்பொருளை யாருணர்ந்தார் என்றுளத்தே 
கேள்வியொன்று பற்றிநிற்கும். 


என்றாலும் எண்ணிக்கை நோக்கிற்பின் இத்தகுஓர்  
நேர்ச்சியினால் குற்றமில்லை;
வென்றாலும் தோற்றாலும் பல்லாயி ரத்தவர்கள் 
நின்றதனால் மக்களாட்சி
என்றென்றும்  நின்றிடுமே எழில்சேவைக் கித்தனைபேர்  
 உண்டென்று கூறுங்காலை
நன்றெனவே நல்லறிஞர்  நாடிடும்நேர் ஞயம்காண்பர் 
ஞாலமிதைப் போற்றிப்பாடும்.