புதன், 26 மார்ச், 2014

நாய் வால்

நாய் வால் நிமிர்த்திவிட்டு
நல்லபடி நோக்கியே
ஒயாது முற்படினும்
ஒக்குமோ ?
பேயாய்ப்    பிதற்றித் திரிவாரின்
பேதைமையைப் போக்க
எதைச் செய்தும் ஞாலத்தில் என்?

இதை எழுதிச் சில  ஆண்டுகள் ஆகியிருக்கும்,  ஆனால் எழுதியதன் பின்புலம் இப்போது ஞாபகத்தில் இல்லை.  நாய் வால் நிமிர்த்துதல் என்பது   பலரும் அறிந்ததுதான். இங்குள்ள  சீனர்  மலாய்க்காரரும்கூட சில வேளைகளில் சொல்வதுண்டு. கவிதையிலோ ஒரு புதுமை வேண்டும். பழம்பொருளாயினும் ஒரு புது நோக்கு  வேண்டுமே ! அது  கவிதை.  இதில் இருக்கிறதா என்பதை  நீங்கள் தாம் சொல்லவேண்டும்.....


ஒக்குமோ   -   வேறு  உயிரிகளின்  நேரான வாலுடன்  அது  சமமாகுமா ?  ஒ - (ஒத்தல் ) வினைச்சொல்  ,  ஒவ்வுதல்   எதிர்மறையில்  ஒவ்வாது  என வரும்.  ஒக்குமோ  (மலையாள வழக்கு )  முடியுமோ? எனப்  பொருள்.

ஒ  -  ஒப்பு   என்ற பழந்தமிழ் வினைச்சொல்லை  .. opt   என்ற  ஆங்கிலச்   சொல்லுடன்  ஒப்பிட்டு  ஓர் ஆய்வு   செய்யுங்களேன்........

யாருடைய  பேதைமையையும்  போக்குவது  நம் வேலையல்ல  (  வேலையன்று )  என்று  அறி ஞர்  சிலர்  கூறுவர்   இது  எப்படி ? ..




Condolences to MH370 passengers and crew

ஆறாத் துயரில் அனைவரையும்  ஆழ்த்திவிட்டு
மீளா உலகிற்கு மேல்சென்ற வான்பயணி
எம் எச்சு முன்னூற்று எழுபதை எண்கொண்டு
தம்முயிர் ஈந்தார்மற்    றுற்றார் உறவினர்
யார்க்கும் உளம் நொந்து, இரங்கலில் ஆழ்ந்தோம்  
இது போது கண்ணீர்  இணைத்ததுவே  நெஞ்சம்!
மறவாது செல்வோம் இனி.

edited 27.3.14 6.45am
The editing software sometimes does not accept edit.   Only after  a few tries does the editor work. Preview is also not available. As frequent loading and reloading increase the data charges,  I am constrained to wait until a safe time when the edits can go through.  /Crave the readers'  patience and understanding.

திங்கள், 24 மார்ச், 2014

வாத்தியம்

சாத்தியம் என்பதை அறிந்துகொண்ட நமக்கு, அதற்கு எதுகையாகத் தகும் இன்னொரு சொல்லையும்  அறிந்துகொள்ள ஆவலெழும்.  அச்சொல்தான் "வாத்தியம்" என்பது.

வாத்தியம் என்பது இனிய எளிய தமிழ். இப்போதெல்லாம்  "ஆர்கெஸ்ட்ரா" என்னும் ஆங்கிலம் அதனிடத்தை வேகமாகக் கவர்ந்துவருகின்றது.

இயம் என்றாலே  வாத்தியம் என்றுதான்  பொருள்.  ஆனால் பண்டைக் காலத்தில் இயம் என்பது பொதுப்பொருளிலும்  வாத்தியம் என்பதொரு  சிறப்புப் பொருளிலும் வழங்கிற்று என்று  தெரிகின்றது.

அது ஏனென்று இப்போது புரிந்துவிடும்.

வாழ்த்து + இயம் =  வாழ்த்தியம்  >  வாத்தியம்.  இங்கு ழகர ஒற்று  மறைந்தது.

சிறப்பான காலங்களில்  அதாவது, திருமணம்,  விழாக்கள் முதலானவற்றில்  பெரும்பாலும் வாழ்த்திசை வழங்கும் குழுவினர்க்கு வாழ்த்தியம்  ‍>  வாத்தியம் என்றனர்.

சாத்தியம் என்ப‌தில் ய‌கர ஒற்று  மறைந்தது போன்றே இங்கு ழகர ஒற்று மறைந்தது.

இப்போது வாத்தியம்  என்பது பொதுப்பொருளில்  வழங்குவது  மட்டுமின்றி,   இயம் என்பது அன்றாட வாழ்வில் கேட்கக்  கிட்டாத சொல்லாய்விட்டது.

--------------------------------------------------------------------------------------------------

Thanks to Devaneyap Pavanar  for the exposition. Retold by B.I.S.