செவ்வாய், 10 டிசம்பர், 2013

riots in Singapore Island

சட்டமும் ஒழுங்கும் தலைமேற் கொள்ளும் சிங்கப்  பூரரசு
சாலைகள் சந்துகள் எல்லாம் தூய்மை உலகில் இதுஅரிது
கொட்டம டக்கிக் குறும்பரை வைக்கும் கொள்கை அதுபெரிது
குற்றம் அரிதெனக் கூறும் தீவினில் கலகம் ஒருவியப்பே!

அறிகுழு அமைத்தும் அதன்கா ரணம்தரும் நாளை எதிர்பார்ப்போம்
பிறிதொரு காரணம் உண்டிது பிறந்த திகதி நாள்  நட் சத்திரம்
அறிவது யாதெனின் ஆகுநே ரம்குன்றி ஆகா ததுவிரிந்தால்
பெறுவது தீமையே என்பதும் உண்மையே பேசும் இதுதெளிவே.


சூடு கிளப்பிச்  சூறாவளி தோன்றாமல்
பாடு தவிர்த்த‌பண் பட்டகா வல்துறை.

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

ஏகலைவன்

ஏகலைவன் என்ற மகாபாரதச் சொல்லை இப்போது ஆய்வுசெய்வோம்.

எய் =  அம்பு எய்தல்.
எய் ‍> ஏ  இது முதனிலை திரிந்த பெயர்ச்சொல். இங்ஙனம் நீட்சி அடைகையில் யகர ஒற்று, கெட்டது. (அதாவது, மறைந்தது). இப்படி மறையவில்லை என்றால், ஏய் என்று ஆகி, விளிச்சொல்லுடன் மயங்கும்.

அடுத்து, கலை என்ற சொல்.  அம்பு எய்வது ஒரு கலை.

வன் என்பதில், வ்+அன் ஆகவே வகர உடம்படு மெய்யும் அன் என்னும் ஆண்பால் விகுதியும்.

வல் > வன் என்றும் திரிந்து, வல்லவன் என்பதையும் குறிக்கும்.

ஆக இது தமிழ் மூலங்களையுடைய ஒரு பெயர்

Ekalavya:  Notes

ஏகலைவன் என்பது தமிழ் வடிவம். சங்கதத்தில் "ஏகலவ்யா". ஏகலைவன் என்று நேர்புனைவாக  இல்லாமல் ஏகலைவ்+ய்+அ(ன்)  என்று மாற்றம்பெற்றுள்ளது. வகர உடம்படு மெய்யும் யகர உடம்படு மெய்யும் உள்பொதியப்பட்டு, ஆண்பால் னகர ஒற்று களையப்பட்டுச் சொல்லாக்கம்  பொற்றுள்ளது. ஏகலைவன் கரு நிறத்தோன் என்பதும் கவனிக்கத் தக்கது.


வட  பெரு நிலப்பகுதியில் கருப்பு  இனத்தோர் ஆட்சி செய்த  பாகங்களும்  இருந்தன  என்பதும்  அவர்கள் ப‌ற்பல கலைகளையும் அறிந்திருந்தனர் என்பதும்  இதனால் பெறப்பட்டது.




வெள்ளி, 6 டிசம்பர், 2013

நீ வேறு நான் வேறு...

நமக்குள் உள்ள‌
ஒற்றுமைகள் என்ன வென்று
உரைகல்லில் உரசிப் பார்ப்பதைவிட‌
வேற்றுமைகள் யாவை என்று
விரித்துப் பார்ப்பதே
உலக மக்களிடையே ஒரு
கலையாகி விட்டதென்பேன்!

இதனால்
உன்னுடன் நானில்லை,
என்னுடன் நீயில்லை,
நீ வேறு நான் வேறு...

ஒரே மாநிலத்து மக்களேகூட‌
வேறுபாடுகளை விரித்தறிந்து
விலகிவிட வேண்டுகின்றனர்.

நல்லதோ கெட்டதோ  இது!
நானும் நீங்களும் சொல்லமுடியுமோ?

காலமே முடிவினைக் கழறும்.

எது எப்படி ஆனாலும்
எல்லோர்க்கும் எல்லாம் இனிதாய் முடிந்து
இன்பமே பெருக வேண்டும்
இவ்வெண்ணமே
என்னில் தோன்றி
விண்ணைத் தாண்டும்.