வியாழன், 3 அக்டோபர், 2013

சுபாரு வென்பதற் கெதுகை

என் தோழி ஒருத்தி, ஒரு மகிழுந்து வாங்கினாள். எனை உலவ அழைத்துச் சென்றதோடு, அவள் வாங்கிய வண்டியைப் பற்றி வாயாரப் புகழ் பாடிக்கொண்டே ஓட்டினாள். இப்போது எல்லா வண்டிகளும் நன்றாகவே ஓடுகின்றன என்று எண்ணிக்கொண்டிருந்த எனக்கு அவள் சொன்னவை, ஒரு மாறுதலாக இருந்தது. அவள் கருத்துகள், இங்கு கவிதையாக.....


சுபாரு வென்பதற் கெதுகை தேடினால்
அபார  மென்பதே அகத்துள் கூடிடும்!

மேலை உலகில் நீள்பயன் அறிந்தோர்
சாலை உலவிடச் சாற்றினர் நன்றென.

வழவழ‌ வென்று சுழலும் இயந்திரம்,
வாடிக்கை யாளர்க்கு வழங்கும் பயன் திறம்.

ஆடா அசையா அழகுத் தேரிது!
மேடும் பள்ளமும் ஏதெனக்  கூறிட.

சொர்க்கம் இலையெனத் தர்க்கம் புரிவோர்
வர்க்கம் சுபாரு வழங்கிட அறிவார்.

வானில வன்ன வண்ண மணமகள்
தேனில வுகந்து தேடுவள் தினமிதை.

வாங்க நினைப்பின் வண்தமிழ் மாலா
நீங்கா நினைப்பினில் வைத்திடு மேலாய்!




மறைந்து வாழ்வது,............

மறைவாம் வாழ்க்கை மாபெரும் வாழ்வென்
றுறைவோர் உலகிற் பலர்இது   நன்றே.

 கவிதையின் பொருள்:

மறைவாம் வாழ்க்கை = பிறர் அறியாமல்,விளம்பரமற்று, மறைந்து வாழ்வது, மாபெரும் = உன்னதமான, மிக உயரிய. உறைவோர் உலகிற் பலர் (இங்ஙனம் ) வாழ்வோர் உலகில் பலர்; இதுவும் நல்லதே எனபது பொருள்.


இப்பாடல் குறள் வெண்பா அல்ல. 



செவ்வாய், 1 அக்டோபர், 2013

kavimaNi on workers (poem)

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை poem on workers

ஆசிய ஜோதி, உமர்கய்யாம் பாடல்கள் முதலியன அளித்து தமிழிலக்கியத்தை மேலும் வளப்படுத்திய கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின் ஓர் அழகிய பாடல். ஏழை எளிய மக்களையும் தொழிலாள உடன்பிறப்புக்களையும் உள்ளத்தில் கொண்டு அவர் பாடியது:

பாடு படுவோர்க்கே--- இந்தப்
பாரிடம் சொந்தமையா;
காடு திருத்தி நல்ல--- நாடு
காண்பது அவரல்லவோ

மனம் திரியாமல்---காலை
மாலை எப்பொழுதும்
குனிந்து வேலை--- செய்வோர்
கும்பி கொதிக்கலாமோ

கோடி கோடியாக---நீங்கள்
குவித்திடும் லாபம்
வாடும் எம்மக்கள்---உண்ணா
வயிற்றுச் சோறல்லவோ

வாழ வேண்டுமெனில்---தொழில்கள்
வளர வேண்டுமையா
ஏழை என்றொருவன்---உலகில்
இருக்க லாகாதையா ( பாடுபடுவோர்க்கே)