ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

Reserved

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

செல்வத்துப் பயனே....


தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய  ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே.

புறநானூறு 189

இது, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
பாடியது.

இதன் பொருளை  அறிந்துகொள்ள உள்ளோம். ஈதல்  (தருமம்) செய்தல்பற்றிய பாடலென்பது படிக்கும்போதே அறிந்துகொள்ளலாம்,

தெண்கடல் வளாகம் = கடலால் சூழப்பெற்ற இவ்வுலகின்  பல நிலப்பகுதிகள்,

பொதுமை இன்றி =பிறருக்கு உரிமையுடையதல்ல, எமது தனியுரிமையே என்று,

வெண்குடை  நிழற்றிய     = அரசு ஓச்சிய,

ஒருமை யோர்க்கும் =  பேரரசர்களுக்கும்,

நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் = இரவிலும் பகலிலும் உறங்காமல்,

கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும் = குதிரையைப்
பார்த்துக்கொள்ளும் கல்வியறிவில்லாத ஒருவனுக்கும்,

உண்பது நாழி =  உண்பதற்கு வேண்டியது, ஒரு நாழியே;

  உடுப்பவை இரண்டே = உடுக்க வேண்டியது மேலாடையும் இடுப்புத்  துணியும் ஆகிய இரண்டே;

பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே = பிற எல்லாமும்
எல்லார்க்கும் சமமே;

செல்வத்துப் பயனே ஈதல் =  சேர்த்தவற்றின் பயன் யாதென்றால், தருமம் செய்வதே;

துய்ப்பேம் எனினே தப்புந பலவே.= எல்லாம் யாமே அனுபவிப்போம் என்றால், இப்படி எண்ணி பிழைபட்டு நினைத்தது நடவாமல்போனவர்கள்,  துயர்வலையில் வீழ்ந்து கழிந்தோர் பலராவர்  என்றபடி.

ஈதல், இசைபட வாழ்தல், அதுவல்லது ஊதியமில்லை உயிர்க்கு என்றார் பெருநாவலரும்.



ஒரு நாழி என்பது, 8 உழக்கு ஆகிய முழுமையில் நாலில் ஒரு பகுதி, எனவே இரண்டு உழக்கு அளவு என்பர்.   நால் > நாழி என்று சொல்லமைந்தது என்
று தெளியலாம். தமில் > தமிழ் என்று அமைந்தது என்று கமில் சுவலபெல்லும் தேவநேயப் பாவாணரும் கூறியுள்ளதனால், நால் > நாழி என்பது பொருத்தம் என்று தோன்றுகிறது. ல்>ழ் திரிபு.


 நடு நாள்:   ஒரு பகலோன் உதயத்திற்கும் அதற்கடுத்த உதயத்திற்கும்  நடுவானதால், நடு நாள் - நள்ளிரவையும் குறிக்கும்.  யாமம் - ஆழ்ந்த  உறக்கத்தில் உயிர்களைப் பிணிக்கும் நேரம். யாத்தல் -கட்டுதல். யாமம் : உறக்கம் கட்டும் நேரம்.
நடு நாள் யாமம் - நள்ளிரவு யாமம் என்றறிக.இக்காலத்தில் இவ்வழக்கு இல்லை.

"ஒருமையோர்" -   பன்னாடுகளையும் பிடித்து ஒரு குடைக்கீழ் ஆளும் பேரரசரை "ஒருமையோர்" என்றது இனிய சொல்லாட்சி. Emperors, empire builders.

will continue in the next post


வியாழன், 2 ஆகஸ்ட், 2012

பல்சுவைத் துணுக்குகள்


இவை சென்ற ஆண்டில் எழுதப்பட்டவை. இங்கு மறு வெளியீடு காண்கின்றன

Date of composition is given as well.

(ஒரு கதை சொல்லத் தொடங்கிய இணையக் கவி யொருவருக்கு, அவர் சற்று விரைவு குறைந்தபோது  சிவமாலா சொல்லிய குறள்:- )

எல்லாம் அழகென் றெடுத்தகதை செல்லுகமேல்!
உள்ளாரே கேட்கப் பலர்!

18th September 2011, 08:59 PM

நடிகை தேவிகா ஓவியப் பாவை,  நடிகை  காஞ்சனா தீஞ்சுவை என்றவர்க்கு யாம் சொல்லியது :


மழுக்கட்டில் தந்த மயக்கிதுவோ நும்கண்
விழக்கட் டழகியர்தம் வேடு.

மஸ்கட் என்னும் நகரை "மழுக்கட்டு" என்று திரிபு செய்துள்ளேன் .

(மஸ்கட்டில் உள்ள கட்டழகியர் முக்காடிட்டு மறைத்துக் கொள்வதால், அந்தக் குழப்பத்தில், வேறு சிலரைப் பாராட்டுகிறீர்களோ? )
vEdu = veil.

மழுக்கட்டில் = in the city of Muscat.

திரைக்காதல் ஒப்பதோர் தேம்பாயும் தன்மை
உரைத்திட்ட உங்கள்பா ஒண்மை -- அரைத்திட்ட
சந்தனம்போல் வீசும் சலிக்கா எழுத்து நடை
வந்திணைவோர் வாய்போற்று வார்.


14th September 2011, 04:37 PM

துணுக்குக் கதைத்திறன் தோய்த்துவெண் பாவில்
இணக்கி இன்புறுத்து முறையும் --- இனிக்கிறதே
பாணி தனிச்சுவையில் பளிச்சிடவே மேற்சென்றீர்
ஏணிப் படிகளிலே நீர்.

இன்னும் எழுதி இவணுலவு நேயரைப்
பின்னும் மனமகிழச் செய்வீரே -- பன்னும்
கவிதை சிறக்க; கருத்தாழம் காணும்
நவைதீர் பயணம் செல.

10th September 2011, 02:51 AM

வயதாகிவிட்டது, முன்போல் எழுத இயலவில்லை, என் வயது எட்டு தாண்டி ஒன்பது ஆகிவிட்டது என்றார்க்கு இப்படிப் பதில் எழுதினேன் :  


எட்டு ஒன்பது என்பவை என்னவென்று தெரியவில்லை. ஒரு வேளை  40 அல்லது 50 இருக்கலாம் என்பது என் கணிப்பு:  8 x 5 =40,  9x5=45 !!

எட்டகவை வெண்பா புனைகலை எட்டித்தேன்
சொட்டுவபோல் பாக்கள் சொரிந்திடலாம்!-- எட்டுடன்
ஒட்டினால் ஒன்றினைக் கொட்டிக் கவிமழையால்
முட்டும் சுனாமி முனை.

அருஞ்சொற்பொருள்::  எட்டகவை  = எட்டு வயதில் ' எட்டி  = அடைந்து , எட்டுடன்  ஒட்டினால் ஒன்றினை  -  ஒன்ப,து வயதில்.  புனை  கலை  -  புனையும் அல்லது பாட்டுக்கட்டும் கலை. கவி மழை கொட்டி நில முனையில் சுனாமி போல் வந்து கரையை முட்டும் என்பது பொருள்

12th September 2011, 06:01 PM

வருடம் பலமுன் வருடிவழி வெண்பா
நெருடேதும் இன்றி நிகழ -- மருள்தீரத்
தந்தவர்க்கு நன்றி தருகவே பல்சுவையால்
இந்தநாள் முன்போல் இனி.
8th September 2011, 07:23 AM

வருடம் பலமுன் வருடிவழி -=   பல ஆண்டுகளைக் கடந்தபின் வந்து இங்கு  தோன்றிய  ( வெண்பா )

 இது ஒரு காலமாகிவிட்ட  சிற்பியைப்  பற்றியது :  
இவர் வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவர்  சிலை முதலியவை அமைத்தவர்.என்று அறிகிறேன்

செயற்கரிய நற்சிலைகள் செய்தார் அவர்க்குச்
செயற்குரிய நன்றி செயல்.


கலைவடிவம் காட்டி நலமே நயந்தார்,
நிலைபெறுக அன்னார் புகழ்.


உற்றார் உறவினர் உற்றார் துயரவரால்
உற்றிலரோ வற்றாப் புகழ்.


இரங்கும் மனமே இறப்பறிந்து நோவற்க
பிறங்கும் உலகில் புகழ்
8th September 2011, 07:34 AM

உரையாடிய கவிக்குப்  பாராட்டு :


தத்தித் தொடரும் தமிழ்க்கதைப் பாடலில்
குத்திய கூலத்துக் கோதகற்றி --- வைத்தாற்போல்
கொஞ்சமாய்க் கொஞ்சமாய்க் கூர்ந்தெண்ணி நன்கெழுதி
விஞ்சுதன் ஆர்வம் வெளிப்படவே -- அஞ்சா
திடுகின்ற உங்கள் இடரணையாச் செய்கை
எழுகின்ற வெண்ணிலவு போல வளர்க
ஒழுகுசீ ரோடே உடன்

28th September 2011, 10:01 PM

கூ ல ம்  -  தானியம் ;   கோதகற்றி = உமி  அகற்றி .