ஞாயிறு, 1 ஜூலை, 2012

what poem is this? Just enjoy it!


முதுமை முடுகிவந் துங்கள் முனைப்பயர்த்திப்
பையப் பணிகளையே செய்யப் புகுத்திடினும்,
நோய்கள் நிலைமிகுந்து வாய்கண்கை நேர்தளர்ந்தும்
ஆய்வை எழுத்தையுமோர் பாவைச் புனைவதையும்
சூடு தளர்த்திச் சுடர்குறைத்த வேளையிலும்
தம்வேலை தம்குடும்பம் என்றசுமை மிக்குவந்து
இம்மியும் காலம் இசைந்துவராப் போதினிலும்
செந்தமிழ் யாண்டும் மறவாது வந்தவழி
எந்த நிலையிலும் பிறழாது இயங்கியவர்
சுந்தர ராசன் சோர்விலார்  வாழ்கவாழ்க!
அந்தர  அழகுக் கவிகள்  இவண்புனைக!
பொடிக்குத்தான்  போயிலையாய் பொற்கவிகள் ஈந்த
அடிக்கொரு பொன்னாய் அணிபெற்று நிற்கவே.
வெள்ளை அகவல் கலிவஞ்சி என்றுநூல்
உள்ள அனைத்துமே ஓங்க விளைத்திடுக.
தொல்லறி வாளர் திறம்பெற்றே
அல்லவை நீக்கியே பல்புகழ் நேர்படவே.

யாவும் நன்று. இந்த வரிகளைத் திரு சுந்தரராஜ் அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். என்ன பா என்று
இப்போது சொல்ல முடியவில்லை. கண்டபடி எழுதியது. சின்னக்கண்ணன் அவர்கள், இதைச் சுவைத்துக் கருத்துகளை வழங்க வேண்டிக்கொள்கிறேன்.

சனி, 30 ஜூன், 2012

பைக்குள் இருந்திடும் காசு கைக்குள் வயப்படல்


பைக்குள்  இருந்திடும் காசு -- நன்கு
பயன்பட வேண்டுமென் றெண்ணிடும் போதில்
கைக்குள் வயப்படல் இன்றி -- பிறர்
கண்களில் பட்டுக் கரைவதும் என்ன!


ஒன்றை நினைத்திங்கு வைக்க --மற்
றொன்றதன் முன்வந்து சென்றிட உய்க்க*
என்றுமெண் ணாததற் கெல்லாம் -- பணம்
ஏன்போகு தென்பதை இறைவனும் சொல்லான்.




*{சென்றிட உய்க்க,= செலவாகும்படி பணத்தை வேறு பாதையில் போகச்செய்ய}





இனிவரும் காலம்நற்  காலம் -- பணம்
இனிவரும் நின்றினி  ஏற்றமென் கின்றார்.
பனிவரும் ஞாயிறின் முன்போல் --அது
பறந்திடக் காண்பதில் மாற்றமொன் றில்லை.


இத்திங்கள் வேறில்லை போக்கு --- பணம்
இருக்கும் எனும்காலம் எண்பெறும்  நோக்கில்,
பத்தைந்து குரங்குகள் பாய்ந்து -- கூரைப்
பதிவினைப் பிய்த்தே எறிந்தன ஓடு.


கூரையை வேய்தொழி லாளர் -- தமைக்
கூப்பிட்டு மேல்சரி செய்கின்ற போதில்,
யாருக்கும் நேர்வதே என்றார்  -- இன்றேல்
யார்தாம் பிழைத்திடக் கூடுமென் கின்றார்.


யாரும் பிழைத்திட வேண்டும் -- பணம்
யாங்கும் உலாவி உழைத்திட வேண்டும்,
தீரும் பணச்சிக்கல் எல்லாம் -- இதே
தீர்க்க முடிவென்ற வார்ப்பினைக் கொள்வோம்.

வெள்ளி, 29 ஜூன், 2012

அதங்கோடு ஆசான்.









அரசவைகளில் அரசு போற்றும்  அறிஞர்கள் சிலர் இருந்தனர். இவர்கள் அறம் எது, அறம் அல்லாதது எது, செயற்பாலது எது, செய்யாது நீக்கத் தக்கது எது  என்று யாவருமறிய விளம்பினர். இவர்களில் நாவு,"அறம் கரை நாவு" என்று சொல்லப்பட்டது. இவர்கள் ஒரு வகையில் சொற்பொழிவுகள்  செய்து. கேள்விக்குப்  பதில்  எடுத்துரைத்திருக்கலாம்.
கரைதல் - எடுத்து உரைத்தல்.  கரைதல், ஒலித்தல் என்னும் கருத்து அடிப்படையை உடைய சொல்.


அறம் என்பது ஒன்று. மற்றபடி, பொருள், இன்பம், வீடு என்ற துறைகளும் உண்டு. அவற்றைப் பற்றியும் பேசுவதுண்டு. ஆனால், அறமே பெரிதும் பேசப்பட்டது என்று தெரிகிறது. அதுவே சிறப்பு உடையதாயிற்று.


அறங்கரை நாவினரே இந்த நான்கு துறைகளையும் கவனித்து ஆலோசனை வழங்கி வந்தனர்.
     
அத்தகைய ஒருவரே அதங்கோடு ஆசான்.


அறம், பொருள், இன்பம், வீடு என்பவற்றுள், அறம் முன்னுரைக்கப் பட்டதால், பொருள்,இன்பம், வீடு என்பன தொடர்வன ஆகும்.


இவற்றைக் கூறும் நூல்கள் மறைகள் எனப்பட்ட ன . பிற அரிய நூல்களும் மறைகளே. இசை நூல், இசை மறை ஆகும்.


தொல்காப்பியப் பாயிரம், அதங்கோடு  ஆசானைப் பற்றி நமக்குத் தெரிவிக்கின்றது.





அதங்கோடு  > திருவதங்கோடு > திருவாங்கூர் என்பர் சிலர். அன்று, அது வேறொன்று என்பாரும் உளர்.
இவ்வூர் கேரளாவில் உள்ளதென்பர்.