புதன், 24 டிசம்பர், 2008

இந்தி படிப்பதா வேண்டாமா?

(இன்னிசை வெண்பா)

விரும்பின் எதையும் படிக்கலாம் இன்றேல்
வெறும்பூவைச் சூட மறுக்கலாம் அஃதொப்ப,
உள்ளம் விழையாத எம்மொழியும் வேண்டாமே,
கொள்ளவே தக்கதைக் கொள்.

ஒரு கருத்துக்கள நண்பருக்கு எழுதியது:

(நேரிசை வெண்பா.)

ஆரூர்ப் பெயர்மாண்பீர் அண்மித்தீர் இத்திரியை
வேறூரில் வேலைமிக் கென்னவோ --- நேரிழப்பு?
மீண்டுமோர் சுற்று மிகக்கூர்ந்து கற்றுயர்ந்து்
தாண்டித் தடைதகர்ப் போம்.

எழுதித் தொடருங்கள் எம்மால் இயன்ற
பொழுதெல்லாம் இங்கு புகுந்து --- பழுதின்றிப்
பூக்கள் மணமொக்கப் பொன்பொலியச் சீர்செய்தே
ஆக்கிடப் பாவின் பணி.

சனி, 20 டிசம்பர், 2008

நிகழ்வுகளும் கருத்துக்களும்

(வெண்டுறைகள்.)

காவலனே முன்நின்று கடந்திடுக என்றாலும்
கோவலன்போல் முன்சென்றால் குழப்பமே உனதாகும்.

வேண்டாமே என்பவளை விட்டகல வொட்டாமல்
ஆண்டாள நினைப்பானேல் அறிவிலியும் அவனாமே.

விழைவில்லாள் அன்னவளை விரும்பிப் போய்க்கண்டு
நுழைந்தில்லில் கொன்றுதற் கொலைப்பட்டான் ஒருபேதை.

These were based on recent events in Mumbai and Andra Predesh.

இயற்கை தந்த கவி செயற்கையில் பதிவு பெற்றது.

மெல்லிய பூங்காற்றிலே --- என்
மேனி சிலிர்த்திடுதே!
அல்லி மலர்திடுதே ! -- நில
வழகொளி வீசிடுதே,

அணிபெறு வண்டினங்கள் -- சேர்ந்து
அருகே முரல்பொழுதில்,
இனிமை தவழ்கவிதை -- என்
நெஞ்சில் முகிழ்க்கிறதே.

மங்கிய தண்மதியில்் -- இங்ஙன்்
மாந்திக் கிடக்கையிலே,
தங்கிடும் கோலெழுத்தை -- வரை
தந்திடத் தருணமுண்டோ?

உள்ளில் ஊறியதை -- அங்கே
உள்ளப் பலகையிலே,
தெள்ளத் தெளிவுறவே -- வைக்கத்்்
தேங்கின எண்ணங்களே.்

மகிழ்வினை என்சொல்லுவேன் -- என்
மனைக்குள் புகுந்ததுமே,
அகழ்ந்துடன் ஆய்ந்துமனம் -- கண்டு
அக்கவி தான் தொடுத்தேன்.

இயற்கைக்கு நன்றிசொல்வேன் - கவி
இயன்றதோர் ஊற்றதனால்!
செயற்கை மறப்பதுண்டோ --- புனை
செய்த மனைவளர்க!