சனி, 11 அக்டோபர், 2008

வெண்பாக்கள்

தேனூறும் வெண்பா தெளிந்த செழுந்தமிழில்
நானூறு தந்திடுவேன் நன்றாக --- காணூறும்
ஆன்பால் கறந்தே அதனோடு பாகுபருப்
பானயிவை யாவும் கலந்து!!

வருகவந் தென்னோடு வாகாய் வடித்துத்
தருக திரியிதனில் தண்மை --- பெருகிவரும்
நல்ல தமிழ்வெண்பா நாளும் மகிழ்ந்திடுவோம்
வெல்க உலகில் தமிழ்.

வெள்ளி, 10 அக்டோபர், 2008

"நீ"யில் முடிந்த பாடல்கள்.

நீயில் முடிய நிமிர்த்திய பாடல்கள்
நாவில் தவழ நலம்கண்டேன் --- நோவிலாது
ஆக்கி மனங்களை ஆள்கின்ற நற்றமிழ்
தேக்குவம் நீர்நிலை போல்.

மிதுலருக்கும் பாராட்டு

உள்ள உணர்வுகள் ஓரிரு சொற்களில்
குள்ள வடிவாகக் கோலமுடன் -- சொல்லவே
செல்ல உறுப்பினர் சீர்சான்ற நன்மிதுலர்
அல்லரேல் ஆரே பிறர்.