செவ்வாய், 26 நவம்பர், 2024

சோப்புளாங்கி என்னும் சொல்.

 இன்று சோப்புளாங்கி  என்னும் சொல்லை அறிவோம்.

இதின் உள்ள பகவுகள்:  சோம்பு  உள்  அங்கி என்பவை.

சோம்பு என்ற சொல்லில்  பு என்பது விகுதி.   ஆகவே அடிப் பகுதியாவது:  சோ அல்லது  சோம்  எனபதே.   சோம் + பு + அல் >  சோம்பல் என்றாகும்,  சோம் என்ற பகுதியுடன் மிக்க நெருக்கம் உடைய இன்னொரு சொல் :  சோர் என்பது.  அதாவது சோர்(தல்)  என்னும் வினையும் அதிலிருந்து வரும் தொழிற்பெயரும்.  தொழிற்பெயர் என்பது வினைதரு பெயர்.   வினையினின்று தோன்றும் பெயரென்றும் கூறல் கூடும்.

சோர்> சோ -  இது கடைக்குறை.  கடைக்குறை ஆனபின் பு என்னும் விகுதி பெற்று சோ> சோம்பு என்றாகும்.தேங்கித் தேங்கி அழுதல் என்பதற்கு தே> தேம்பு என்று சொல்  அமைந்தது காண்க.  தேங்கு, தேம்பு என்பவற்றில் கு, பு என்பன வினையாக்க விகுதிகள்.

சோம்பு, சோம்புதல் என்ற சொற்களின் அமைபு கண்டோம்.

சோப்புளாங்கி என்பவன் சோம்பல் உள்ள உடம்பு உடையவன்.

சோம்பு உள்ள அங்கம் இ என்பவை இதன் உள்ளுறைவுகள்.

இவை சோப்புள்  அங்கி என்றாகி சோப்புளாங்கி என்று மாறி,  இறுதியில் உகரம் அகரம் ஆகி,  சோப்பளாங்கி என்றானது.   சோம்பளாங்கி  என்பது சோப்பளாங்கி என்று வருவதை இலக்கணத்தில் வலித்தல் என்பர்.  வலித்தல் விகாரம். விகாரம் என்பது மிகு ஆர் அம்.  முன் இல்லாதது வந்தது, இதுவே இதில் மிகுதல்.  மிகுதல் - மேலும் திரிதல்.

உகரம் அகரமாவது பல சொற்களில் வரும். புணர்ச்சியிலும் வரும். பழைய இடுகளை இது பற்றிப் படித்து பட்டியலிட்டுக்  கொள்க. குதுகுலித்தல் - குதுகலித்தல் > குதூகலித்தல் என்ற திரிபுகளையும் அறிக.  குலி ( உ) பின் கலி ( அ)  ஆயிற்று,  அறு அம் > அறம் ஆனது.  அறு என்றால் வரையறுத்துச் சொல்லப்பட்டவை. புணர்ச்சித் திரிபு.

எப்போதும் சோர்ந்தே காணப்படும் அங்கமுள்ள்வன்.  அங்கம் என்பது உறுப்புகள் அணுக்கமாக அடுக்கப்பட்ட பெரிய பை என்று பொருள்.  அண்+ கு+ அம் திரிந்து அங்கம் ஆனது  அண் = அடுத்தடுத்து என்று பொருள். அங்கம் என்பதும் தமிழ்ச்சொல்.

சோம்பல் உள்ள அங்க முடையோன் > சோப்பலாங்கி.   சோம்பலங்கி > சோப்பலாங்கி> சோப்பளாங்கி என்றும் விளக்கலாம்.

இதழ் - உதடு என்ற சொற்களில்,  இது  உது என்ற சுட்டுகளுடன்,  அழ், அடு என்று ஈறுகள் வந்து சேர்ந்துள்ளன .கதழ்வு என்ற சொல்லுக்கு ஒப்பு, நீட்டமானது என்றபொருள்கள் உள.  ஒப்பாகவும் நீட்டமாகவும் சுவரில் உள்ள விடுபாட்டில் பொருந்துவது தான் கதவு  இதில் ழ் மறைந்தது. கதழ்வு என்ற பகுதியினோடு அழ் இணைந்திருப்பதைக் கண்டுகொள்க.  அள்> அழ்;  அள் - அடு என்று மூலங்கள் திரியும். இல் என்பதும் இழ் என்று திரியும்.  தமில் என்பதே தமிழ் என்று திரிந்ததாக கமில்சுவலபெல்லும் தேவநேயனாரும் கூறியதையும் கண்டுகொள்க.  இல்> இழ்; இள்> இழ் என்பவை எல்லாம் திரிபுகள். திரிபுகளை இவர்கள் விளக்கியது சரியென்பது நம் ஒத்துரை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்



கருத்துகள் இல்லை: