உஷா தேவகி இரண்டு சொற்களையும் ஆய்வு செய்வோம். இரண்டும் நன்கு குமுகாயத்தில் பயின்று வழங்கும் சொற்களாகும். மனிதர்களின் இயற்பெயர்களாக இலங்குபவை. இவற்றுள் இங்கு உஷா முதலில் தரப்படும்.
உஷா என்ற சொல் வேதத்தில் ( ரிக் ) உள்ளது. வேதமென்பது ஆசிரியர் அறியப்படாத சொற்கோவை என்னலாம். ஆசிரியர் அறியப்பட்ட காலையும் நாம் அங்கிருந்து அறிந்துகொள்ளும் பெயர்கள் இயற்பெயர்களா, பொதுச்சொற்களா என்று வகைசெய்வது கடினமே. யார்யார் பாடினார்கள் என்று திட்டம்செய்வது இயலாத காரியமாகலாம்.
பழங்காலத்தில் பாடித் திரிந்தவர்களுக்குப் பாணர்கள் என்று பெயர். வீடுவீடாகச் சென்று பாடி, பரிசில் பெற்றுக்கொண்டு சென்றனர். இது தமிழில் உள்ள சங்க இலக்கியங்களுக்கு உரிய நெறிகளில் இயற்றப்படாதவை. சங்கத்து நூல்கள் என்பவை பெரிதும் அரசவையில் அல்லது அரசர் முன்னிலைகளில் புனைந்து பாடப்பட்டவை. வேதப்பாடல்கள் யார்முன் பாடப்பட்டவை என்று அறியக்கூடாமையினால், பற்றர் பெருமக்கட்காகப் பாடப்பெற்றவை என்று அமைதி கொள்ளுதலே மதிநுட்பம் ஆகும். எழுத்து வடிவங்களும் பயன்பாட்டில் இல்லாத நிலையில், வாய்மொழிப் பாடல்களே இவை. மனித மூளைச் சேமிப்பிலிருந்து பின்னர் எழுத்துருப் பெற்று வெளிச்சத்திற்கு வந்தவை வேதப்பாடல்கள்.
வேதங்களில் உஷா என்ற சொல் பெருவழக்கு உடையதென்று தெளியலாம். உஷா எனில் விடியல், விடிவு, பகலோன் தோற்றம் , ஒளியின் பரவல் என்றெல்லாம் மனத்தினிமை பயக்கும் வண்ணமாக பெருட்படுத்திக் கொள்ளலாம்.
உஷா என்பது தமிழ்ச் சுட்டடியில் எழுந்த சொல். உது என்பதே மூலம். உது என்றால் முன் தோன்றுவது என்று பொருளாதலால், உஷா என்பது வெறும் ஒலிமெருகே ஆகும். வல்லொலியை மென்மைப் படுத்தும் நோக்கில் உதா என்ற அடிச்சொல்லை உஷா என்று பாணர்கள் சொல்லி மகிழ்ந்தனர். ஷா என்பதை விலக்கி அதற்கு து, தா என்பனவில் ஒன்றை இட, உட்புதைவான தமிழ் வந்துவிடுகிறது.. தமிழைக் கெடுக்கும் நோக்கில் தா என்பதை ஷா என்று ஒலித்தனர் என்று அயிர்த்துரை செய்தல் தேவையற்றது ஆகும். ஷா என்பது போலும் ஒலிகள் மந்திர மொழிகட்கு மக்களிடை ஒரு செல்வாக்கினை உண்டாக்கத் தக்கவை என்று இந்தப் பாணர்கள் கருதினர் என்பது தெளிவு. அதற்குத் தொல்காப்பியர் தந்த மாற்று, ஷா வை எடுத்துவிட்ட தா என்பதைப் போட்டுக்கொள்ளுதல். " வடவெழுத்து ஒரீஇ " என்ற தொல்காப்பிய நூற்பாவைக் கண்டு தெளிக.
உஷா என்பது வெளிச்சம், தேவதை என எவ்வாறு கூறினாலும் அது பொருளாய்ச் சென்றடைவது சூடியனாகிய ( சூடு+ இ + அன் ) சூரியனையே. இதில், டகரம் ரகரமாகும். வந்திடுவார் என்பது வந்திருவாரு என்று பேச்சில் வருவதற்கொப்ப, டகரம் ரகமாகிய தமிழே சூரியன் என்ற சொல். தமிழின் நீங்கிய பிறமொழிகளில் அன் விகுதி இல்லை. அங்கு , சூரிய, சூரியா எனற் பால வடிவங்கள் தவிர பிற இல. வால்போன வடிவங்கள் கண்டு மயக்கம் கொள்ளற்க. சூடியன் எனல் பிசகு என்று எண்ணினால், சூட்டியன் , இடைக்குறைந்து சூடியன், பின் சூரியன் ஆகிவிடுமாதலின் இத்தகு மறுப்புகள் பசை ஒன்றும் இல்லாதவை ஆகும். மடி ( இற ) என்பது மரி ( இற) என்று பிறழ்தல் அறிக. உடு என்பதே உரு என்றும் திரியும். உடு எனில் மேற்போர்த்திக்கொள்ளுதல். அதன் பின் தோற்றம் மாறுமாதலின் உரு மாறும். ஆகவே உடு> உரு என்பதன் தொடர்பு அறிக. இதை வெள்ளைக்கார ஆய்வாளர்கள் சொல்லியிருக்கின்றனரா என்பது நினைவில் இல்லை.
தனி என்பது சனி என்ற சொல்லுக்கு முதலானது போல, உதா என்பது உசா என்பதும் ஆகும். உசா என்பது உஷா என்பதன் வடிவத்துக்கு நெருங்கியதாகும், இதையும் அறிக. உதித்தல் குறிக்கும் உசவு என்பது கருத்துத் தோன்றுதலைக் குறிப்பது பொருத்தமே. உது > உதி என்ற சொல்லமைவும் கண்டுகொள்க.
இந்தச் சுட்டடிச் சொல்லை இந்தோ ஐரோப்பிய ஆய்வாளர்கள் தங்களுடையது என்று எடுத்துக்கொண்டது மேற்கொள்ளுதலே. குட்டிகள் தாயைப் பெற்றதாக நினைத்தலும் ஓர் உறவறியும் முறைதான். இது மீள்திரிவு ஆகும்.
இடுகை இன்னொன்றில் தேவகி என்ற சொல் ஆய்வோம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக