புதன், 25 பிப்ரவரி, 2026

ஆதிபத்தியம்

 இந்த இருசொற் புனைவை இப்போது அறிவோம்.

ஆதி என்ற சொல் திருக்குறளில் முதல் பாட்டிலே வந்துவிடுகிறது.  ஆதி என்பது ஒரு தமிழ்ச்சொல். அதனை வெளியாரியர் சொல் என்று இருபதாம் நூற்றாண்டின்  தமிழ்ப்புலவர் எவ்வாறு நம்பினர் என்று எண்ணிப்பார்க்கையில் விந்தையாக உள்ளது.  அந்நாட்களிலே,  புலவர்கள் சிலர் சற்றுத் தயக்கத்துடனே அது ஆதல் என்ற வினையிலிருந்து தி என்னும் விகுதி புணர்த்து எழுந்த சொல் என்று சுட்டிக்காட்டினர். இதற்கு முன்னரே இங்கு,  சொல்லாக்கத்தில் அல்லது புனைவின்போது, சொல்லின் பகவுகள் ( உள்ளுறுப்புகள்) தமிழ் அடிச்சொற்களாய் இருந்தால், அஃது தமிழ்ச்சொல்தான் என்று எழுதியிருந்தேம்.1

( அஸ்தி ,  ஆஸ்தி என்ற என்ற சொற்கள்  ஆதி என்பதனோடு தொடர்பு பட்டவைபோல் ஒலிப்பின் காரணமாகத் தோன்றினாலும்,  கருவில் அஸ்தி (எலும்பு)  முந்தித் தோன்றியதாய்  எண்ண ஆதாரமில்லை.  விந்து என்னும் நீர்ப்பொருளிலிருந்தே  தோற்றம் ஏற்படுகிறது.  )

ஆதி என்னும் சொல்  ஆதல் என்னும் வினையடியாய்த் தோன்றியது.  இச்சொல்லுக்கும் இந்தோ ஐரோப்பியத்துக்கும் தொடர்பு கிட்டவில்லை.

பத்தியம் என்ற சொல்லில், பற்றி இயலுதல் என்பதே பொருள். கூடுமானவரை, சொல்லிலுள்ள அடிகளை வைத்தே சொல்லை விளக்கவேண்டும் என்பது எமது கொள்கையாகும்.  ஆகவே ஆதிபத்தியம் என்பது உண்மையில் ஆதி பற்று இயமே ஆகும்.  இச்சொல் தமிழுடன் மிகுந்த தொடர்பு உடையதே  ஆகுமாறு உணர்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


---------------------------------------------------------------------------------------------------------

இருந்தேம் - இது இருந்தேன் என்பதன் தன்மைப் பன்மையாக இங்கு கையாளப்படுகிறது. 

செனக்ஸ்  என்ற இலத்தீன் சொல்,  பழைமை,  பயின்ற முதுமையுடையது என்பது சொல்லப்படுகிறது.   செந்தமிழ் என்ற சொல், இந்தச் சொல், தமிழ் என்பதனுடன் தொடர்பு பட்டபின் பழமை குறிக்கக்கூடும்.  சென்-, சென்றது என்பனவும் பழமை குறிக்கலாம்.  நீங்கள் எழுதி தெரிவிக்கவும்.

திங்கள், 23 பிப்ரவரி, 2026

கிழமை ( மற்றும் கிழவன், கிழவி என்பவும்)

 தலைப்பில் கண்ட சொற்களை இன்று சிறிது காண்போம்.

கிழங்கு என்ற சொல்லை  ஆய்ந்தால்,  அது கீழ் என்ற அடிச்சொல்லினின்று பிறந்தது எனற்பாலது நன்கு புலப்படும். கீழ் + அம்+ கு > கிழங்கு என்றாகும்.  கீழ் என்ற சொல்லில் கீழ் என்பது (கீ)  நெடிலில் தொடங்கினாலும்,  சொல்லாக்கத்தில் நெடிலான கீ,  குறிலாகிவிடுகிறது.(கி). இப்படிப் பெயர்ச்சொல் ஆனவுடன் முதலெழுத்து குறிலாகிவிடும் பல.

கிழங்கு என்பது கீழ் என்பதிலிருந்து தோன்றியது போலவே,  கிழமை என்ற சொல்லும் கீழ் என்பதிலிருந்து வருகிறது.  கிழங்கு என்பது வேர்.  கிழவி கிழவன் என்போரும் குடும்பத்தின் வேர் போன்றவர்களே. செடியின்  இலை, இணுக்கு என அனைத்தும் மண்ணுக்கு மேலிருப்பவை. இது மரம் கொடி அனைத்துக்கும் ஒக்கும்.  பிள்ளைகளும் பின் தோன்றல்களும் அப்படியே.  வேரானது செடிக்கு உரிமை, உரிமையும் அவ்வாறே. இதனால் கிழமை என்பது உரிமை குறித்தது.

கிழவன், கிழவி என்போரும் உரிமையானவர்கள் என்றே பொருள்தரும்.  பிற்காலத்து இதை மறந்து, இச்சொற்களுக்கு  முதியோன், முதியோள் என்ற பொருள் ஏற்பட்டுவிட்டன.

கிழத்தி என்பதும் உரிமை உடையாள் என்ற  பொருள் உடைய சொல்லே. இல்லக் கிழத்தி,  காதற்கிழத்தி  என்று வருவனவுக்கும் அவ்வாறே பொருள் கொள்க.

வெள்ளிக்கிழமை என்றால் வெள்ளிக்கு உரிய நாள்.  இவ்வாறே பிறவும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை.





புதன், 18 பிப்ரவரி, 2026

கானம் என்ற சொல்.

 கானம் என்ற சொல்லினை இங்கு ஆய்ந்து காண்போம்.

இந்தச் சொல் தமிழிலும் வழங்குகிறது,   சமஸ்கிருதத்திலும் வழங்குகிறது. கன்னல் என்ற சொல் கரும்பைக் குறிக்கிறது.  கன் என்பதே இதன் அடிச்சொல்.

கன் > கனி   ( விகுதி இ ).  பழம்,  இனிமையானது என்பது பொருள்.

கனைவரிவண்டு  என்பது  கேட்பதற்கு இனிய ஒலியினை எழுப்பிக்கொண்டு பறந்து திரியும் வண்டு. வரிகளும் உடையது.

கன் > கனி.

கன் > கனை.  இனிய ஒலி எழுப்பு.  ந ந என்பது இசை ஒலி,

கா என்றால் தொடர்வரவாதல். கா, மற்றும் ந இரண்டும் இசை ஒலிகளும் ஆம்..

கா-  காத்தல் என்றால்  தேவையான அளவில் இடர் இன்றிப் பாதுகாத்தல். இனிய ஒலி காக்கப்பட்டுத் தொடர்வரவாதலே  இசை.

கா -  நா >  கானம்  ( அம் விகுதி வந்து) கானம் ஆகிறது.  காத்து நாவில் வைக்கப்படுவது. நா என்பதற்குப் பதில் கா+ இன்+ அம் என்பன,  இன் குன்றி ன் என்றே நின்று,  கானம் என்று வரின்,  இன் என்பது  இனிமை என்று கொண்டு,  காத்து இனிமையினால் வைக்கப்பெறுவது என்று முடிக்கலாம்.  இதுவும் பொருத்தமே ஆகும்.

கனத்த இருள்,    கனை  இருள்.  இது முழுமை குறிக்கும்.  முழுமையும் இனிமையே.  திணிந்த இருள்.  திண்> திண்மை.

இனி குறில் நெடில்  பற்றிக் கூறின்,  வா என்ற ஏவல்,  குறுகி வந்தான் என்றாகிறது.    தா என்பது தந்தான் என்றாதல் காண்க. தாள் என்ற சொல்லிற் பிறந்த  சொல்  தளம் என்று குறுகும். குப்பை சேர்ந்திருத்தல் குள் > கூளம் ஆகிறது. தண்ணீர் சேர்ந்திருத்தல்  குள்> குளம் ஆகிறது. இது போதும்.  பழைய இடுகைகளையும் படிக்கவும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.

பகிர்வுரிமை