திங்கள், 13 ஜனவரி, 2025

பொங்கல் வாழ்த்துக்கள்

 நம் நேயர்கள் அனைவருக்கும்  எம் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். பொங்கல் உண்டு மகிழ்வாகச் செய்வன செய்து தவிர்வன தவிர்த்துச்  சிறப்புடன் வாழ்க.

இன்னிசைப் பஃறொடை வெண்பா.


செந்தமிழர் வாழ்வினிலே பொங்கல் புதுநாள்

சிறப்பாம்   இடனுடைய இன்பத் திருநாளே

உந்தி  அனைவருக்கும் ஊக்கம் தருநாள்

உலகுக் குணவூட்டும் உய்வோன் உழவனே.

வந்தனம் செய்வீர் வருந்தனப் புன்னகையே

வாழை  யிலையிலே வண்பொங்கல் சோறுண்டு

மந்தமிலா நன்னிலையால் மாண்பே அடைந்திடுவீர்

மாநில மக்களுடன்  ஆநிரைகள் தாம்வாழ்க

காணுறும் இன்பம் உலகு,


இது பொங்கல் பண்டிகைக்கு யாம் இன்று இயற்றியது.


இடன் -   இடம்.  தலம்.

உய்வோன் - முன்னேற்றம் உடையோன்

காணுறும் -  கண்டு தெளியக் கூடிய

உந்தி -  முன் செலுத்தி

இன்பம்  -  இன்பமுடையது

வந்தனம் -  இது தமிழில் வந்தோம் என்று பொருள் பெறும்.  தனம் என்னும் 

தன் செல்வம் வரும் என்பதும் இடைக்குறையாய்ப் பொருள்தரும்.

இதை விளக்குமுகத்தான் வரும் செல்வம் என்றும் பொருள்.

வண்பொங்கல் -  வளமான பொங்கல் உணவு.

வளத்தினால் சமைத்த (பல பட்சணங்களும் சேர்த்த) பொங்கல். தேன் சர்க்கரை எனப்பல.

ஆநிரைகள்  ஆடுமாடுகள்


இங்கு எதுகைகளை வேறு விதமாக அமைத்திருக்கிறோம்.


வணக்கம் வணக்கம்





சிமென்ட் என்பதற்குத் தமிழ்

 சிமென்ட் என்ற ஆங்கிலச் சொல்லே கட்டிடம் பற்றியவற்றைக் குறிப்பிடுங்காலை நினைவுக்கு வருகின்றது.  இதற்கு சுண்ணச்சாந்து என்ற பெயர் பழைய நூல்களில் காணப்படுவதாகும். உலோகங்களைக் கையாளச் சிறிது கற்றுக்கொண்டிருந்தாலும் கட்டிடங்களுக்கு காரைச்சாந்தினைப் பயன்படுத்து முறையைப் பிற்காலத்திலேதான் தமிழர் கற்றுக்கொண்டனர் என்று தெரிகிறது. மக்களின் வீடுகள் பெரும்பாலும் மரங்களைக் கொண்டு செய்யப்பட்டிருந்தன என்று அறிகிறோம். அவற்றை அறுத்துப் பலகைகள் செய்ய மக்கள் அறிந்திருந்தனர். மரவேலை செய்வோர் தச்சர் என்று அறியப்பட்டனர்.

தைத்தல் > தைத்து  ( வினை எச்சம்)  >  தச்சு  >  தச்சர் என்பதே இச்சொல்லின் அமைப்பு ஆகும். 

இது குறுக்கமானது என்று பொருள்படும் குச்சு என்ற குடிற்பெயர் போலும் அமைந்த ஒரு சொல்.  தை> த> தச்சு என்றும் அமைத்து விளக்கலாம்,  த என்பது தனிக்குறிலாதலின்  தை என்பது அடியாகக் கொண்டால் கேட்போருக்கு நன் கு புரியக்கூடியதாய் இருக்கும்,  

சுண்ணச்சாந்து என்பதினும் இறுகுசாந்து என்பது இன்னும் சிறப்பான புனைவாகலாம். எதனால் செய்யப்பட்டது என்பதினும் அதன் தன்மை என்ன என்பதைக் கொண்டு பெயரமைவதே சிறப்பானதாகும்.  காரைச் சாந்து என்பது பொருந்தலாம் எனினும் இப்போது சிமென்ட் மூன்று அல்லது நான் கு வண்ணங்களில் கிட்டுகிறது என்பதை நோக்க, இறுகுசாந்து என்பது பொருத்தமானதாகும்,  காரை என்பது கரு என்ற அடியில் தோன்றுவதால் கருப்பு நிறம் குறிப்பது ஆகும்,  கரு+ ஐ> காரை.  இது முதனிலை நீண்டு அமைந்த பெயர்.   இறுகுசாந்து என்பது வினைத்தொகை ஆதலின் வல்லெழுத்துத்  தோன்றாது என்பது அறிக.

அறிக மகிழ்க'

மெய்ப்பு பின்





வெள்ளி, 10 ஜனவரி, 2025

குறு என்னும் அடிச்சொல்லும் சிலுவையும்

 குரோதித்தல் என்ற வினைக்கு  வேறு பொருள் கூறப்பட்டாலும் அப்பொருள் வந்த விதத்தை யாம் முன்னர் எழுதியுள்ளோம்,  இப்போது குறு  ( குறுமை) என்ற சொல்லுடன் தொடர்புபடுத்தி அந்தப் பொருள் வராவிட்டாலும் பொருந்தும் ஒரு பொருள் வருகிறதா என்று ஆய்வு செய்வோம்,

குறு -  இது குறுமை, குறுக்கம், குறுக்கு முதலியவற்றின் அடிச்சொல்.  குறுதொழில்கள் என்பதில் அடையாக வரும் சொல்.

குறுக்கை என்றொரு சொல் தேவநேயனாரால் படைக்கப்பட்டது.  அது சிலுவை என்ற சொல்லுக்கு ஈடாக அவரால் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது. 

சிலுவை என்ற சொல் குறுக்குச் சட்டத்தில் தொங்கும் தண்டனையைக் குறிக்கமால்  சில் =  சிறிய,  உ= முன்,  வை = வைத்தல்,  ஆகவே சிறிய ஒரு மரத்தில் முன் வைத்தல் என்று பொருள்படுகிறது. மரத்தில் என்ற சொல் முன் வைத்தே  (கூட்டியே)  பொருள்கூறவேண்டும்.

சிலு என்பது பதனழிதல் என்பததைக் காட்டும் சொல்.  பெரும்பாணாற்றுப் படையின் உரையிலிருந்து இப்பொருளைக் காட்டுகிறார்கள்.  ஆனால் சில் முன் கூறியபடி சிறுமை குறுக்கும் அடிச்சொல்.