வியாழன், 7 அக்டோபர், 2021

கோவிட்டைப் பரப்பியவன்

 கோவிட்டைப் பரப்பியவன்  யாரோ  யாரோ

கோலத்தால் கலத்தினிலே மிதக்கின்  றானோ?

ஆவட்டில் கறந்தபாலைக் குடிக்கின்  றானோ!

ஆலகாலம் தந்துவிட்டான் யார்க்கும் பாரில்.

மேவிற்றே அறிந்தாலும்  என்செய் வோம்நாம்

மேல்பற்றும்  தொற்றதனால் வீழ்தல் அன்றி?

நாவிற்றும் பிழைக்கின்ற நாயன் தன்னால்

நானிலமே நாவறியா நலிவிற் போச்சே!


கலத்தில் -  கப்பலில்

கோலத்தால்  -  அழகினால் ( /அலங்கோலத்தால்)

அலங்கோலத்தால் என்ற பொருள் கொள்ள.  அலங்கோலம் என்பதை

 கோலம்  என்ற " முதற்குறைக் கோலம் " ஆக்கிப் பொருள்

கொள்ளவேண்டும்.

ஆ = பசு.

வட்டில் கறந்த  - வட்டிலில் கறந்த.

ஆ வட்டில் -  அந்த வட்டில் என்றும் பொருள்.

ஆவு அட்டில் :  ஆவட்டில்:  விரும்பிய அடுக்களையில்  .ஆவு

என்பதிலிருந்து ஆவல்  என்ற சொல் வருகிறது.

ஆவு அட்டில் - விரும்பிச் செல்கின்ற அட்டில்.  வினைத்தொகை

கறந்த பாலை என்று இணைக்க. இது இன்னொரு பொருள்.

ஆலகாலம் -  விடம்

மேவிற்றே =  எங்கும்  தொற்றிவிட்டதே

மேல் - நம் மேல்

நா விற்றும் -  வார்த்தைகளால் தன்னைக் காத்துக்கொண்டு

நாவால் விற்றும் -  ஆல் உருபு தொக்கது.

நாயன் -  மேலானவன்

நாவறியா -  சொல்லி அறியாத 

நலிவு - அழிநிலை 


மெய்ப்பு செய்த நாள்:  08102021  1411

சில சரிசெய்யப்பட்டன.


அட்சரலட்சமும் அண்ணல் போஜராஜனும்.

 இலக்கியமுதல் வட இந்தியாவில் பல கலைகளையும் அவாவி ஆண்டு சிறப்பெய்திய மன்னன்  போஜராஜன்.  இராஜேந்திர சோழனோடும்  கூட்டாகச் சில காலம் இயங்கி,  அரச ஒற்றுமையின் நற்பலன்களை அறிந்து ஆண்ட மன்னனே ராஜபோஜன். 

வரலாற்றில் படிப்பறிவுடன் பாராண்டவர்களும்  அஃதின்றி ஆண்டு சிறந்தவர்களும்  உள்ளனர்.  படிப்பில்லாதவன் ஆண்டால் நாடு நல்லபடி வளர்ச்சிபெறாது என்பதும் உண்மையன்று.  படிப்பாளி ஆண்டால் யாவும் துடிப்புடனே நடைபெற்றுவிடும் என்ற கருத்தும் உண்மையன்று.  அசோகன் படிப்பில்லாமல் பல நறுஞ்செயல்களும் புரிந்து பேரரசன் என மாண்புற்றான். போஜன் பலகற்று, பன்னூல்கள் வரைந்து,   நன்மைபல புரிந்து  புகழ்பெற்றான்.

இவன் அட்சரலட்சம் என்ற பரிசை அளித்ததாகத் தெரிகிறது.  இது இம்மன்னன் எழுதிய நூலா அல்லது நூலெழுதியவர்களுக்கு இவன் தந்த பரிசா என்று தெரியவில்லை.  இவன் வரலாற்றில் அகழ்வில் கிட்டியதுபோக, பிற பலவும் வழிவழிச் செய்திகளாக உள்ளன.  ஆனால் எழுத்துகள் 100ஆயிரம்  என்பதே அட்சர லட்சம் என்பதன் பொருளாகத் தெரிகிறது. இவன் காளிதாசன் என்ற கவியின் நெருங்கிய நண்பனும் அவனை ஆதரித்தவனும் ஆவான்.

உங்களிடமுள்ள நூல்களில் அட்சரலட்சம் என்பதன் விளக்கம் கிட்டுமானால் பின்னூட்டமிட்டுத் தெரிவியுங்கள்.

இவன் அமைத்த நகரமே போஜ்பால்  ஆகும்.  இச்சொல் பின்னர் திரிந்து போபால் ஆகிவிட்டது.  இடையில் நிற்கும் ஜகர ஒற்று மறையும் என்பது தெளிவு.  ஜகர ஒற்று யகர ஒற்றாகும். அல்லது அவ்வருக்கம் இவ்வருக்கமாகும். எ-டு:  ஜூலியஸ் -  யூலியஸ்,  ஜப்பான் -  யப்பான்.  இடையில் வரும்  யகர ஒற்று மறையும்.   வாய்த்தி > வாத்தி> வாத்தியார்.  பெயர்த்தி >  பெயத்தி ( ரகர ஒற்று மறைவு)  > பேத்தி ( முதனிலை நீட்சி). பெயர் > பேர் > பேர்த்தி எனினுமாம். பல திரிபுகள் தமிழில் மட்டுமின்றிப் பிற மொழிகளிலும் வரும். திரிபுகளைத் தனியியல்திரிபு,  பொதுவியல் திரிபு எனக் காண்க.  எ-டு:  அறம் - அறன் (தமிழ்),  குவான் இன் -  குவான் இம் ( சீனமொழி). 

தனியியல்,-   ஒரு மொழியில் மட்டும் காணக்கூடியது. 

பொதுவியல். ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் காணப்படும் திரிபுவகை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்   

கோவிட்19ல் தேறிய பின் இனிப்புநீர் நோய் வந்துவிடும்! ஆய்வு

 

இங்கு சென்று இதைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்:  


சொடுக்கவும்  ( Please click the liink)


https://theindependent.sg/after-covid-19-infection-patients-developing-diabetes-experts-unsure-why/


பிழைத்துவிட்டாலும் கிருமி சும்மா விடாதுபோல் இருக்கிறது.


என்ன ஒரு துன்பம்.