புதன், 30 அக்டோபர், 2019

மாரன் சுகுமாரன் மாறன் என்பவை

தமிழில் மாரன், மாறன் என்று இரு ஒலியணுக்கமுடைய  சொற்கள் உள்ளன..

இதில் மாறன் என்பது பாண்டியனைக் குறிக்கும் சொல்.  சுருக்கமாகச் சொன்னால் :

மறு +  அன் = மாறன்:   அதாவது எதிரிகளை மோலோங்க விடாமல் போரில் மறுத்து நின்று வெற்றியை ஈட்டிக்கொள்பவன் என்று பொருள்.  முதனிலை  மகரம்  மா என்று நெடிலாக நீண்டது. வீரம் என்று பொருள்படும் மறம் என்பது முதனிலை நீளவில்லை. முதனிலை  நீண்ட சொற்கள் பல. அவற்றைப் பழைய இடுகைகளில் கண்டு மகிழ்க.

மாரன் என்ற சொல்  மரு+ அன் எனற்பாலது முதனிலை நீண்டு அமைந்தது ஆகும்.

மரு > மருவு:   தழுவுதல் குறிக்கும் வினைச்சொல்.

மரு +  அன்  =  மாரன்
பொருள்:  தழுவி நிற்போன். கணவன்,   காதலன்,  என்றெலாம் விரித்துக்கொள்க.

சுகுமாரன் என்பதன் முந்துவடிவம்  உகு மாரன் என்றிருந்தது தெளிவு.  உகுதலாவது  இலைபோல் வீழ்தல்.  காதலினால் வீழ்தல்.  மாரன் என்பது மேற்சொன்னதே  ஆகும்.

உகுமாரன் > சுகுமாரன்.

இது அமண் >  சமண் என்பதுபோலும் திரிபு. இவ்வரிசையில் பல காட்டியுள்ளேம்.
பழைய இடுகைகள் காண்க.

தட்டச்சுப் பிழை - திருத்தம் பின்.




சனி, 26 அக்டோபர், 2019

தீபாவளி வாழ்த்துகள்

 தீபத்  திருநாளின் வாழ்த்தனை வர்க்குமே
சீர்பதி   னாறுமே  சேர்ந்திணைந்தே----- நேர்படுக
ஆபத்  துலகில் அகன்றவனி மேம்படும்நம்.
நாபுத் துணவும் நயந்து

புதன், 23 அக்டோபர், 2019

அயல் அந்நியன் ஒருதாய்ப் பிள்ளைகள்.

"வடசொல் என்று கருதப்பட்ட " அந்நியன்" என்ற சொல்லுக்கும் "அயல்" என்பதற்கும் ஒரே அம்மா என்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள்.

இது உண்மையா என்று ஆய்வோம்.

அந்நியன் என்பது  " அல் நீ  அன்" என்று திறமையாகத் திரிக்கப்பெற்ற சொல்.

இதன் பொருள்:  நீ அல்லாத பிறன்"  என்பது.  பிறன்  என்ற சொல்லை உள்ளே கொணராமல்,   " நீ அல்லாத ஒருவன்" என்றால் கூறியது கூறலை விலக்கிவிடலாம்.

அல் என்பதோ  அ+இல் என்பதன் சுருக்கம்.

அ இல் :  என்றால்  அங்கு  இல்லாதது.  இதில்  அங்கு என்பதே சுட்டு.

அயல்  எனில்  அ+ அல் என்பதன் புணர்வு.  யகர ஒற்று உடம்படுமெய்.  அவ்விடம் அல்லாத இன்னோர்  இடம்.

இரண்டு சொற்களிலும் அகரச் சுட்டு இருப்பதால் இவை சுட்டடிச் சொற்களே.

அல்லுக்கும் இல்லுக்கும் உண்டான நுண்பொருள் வேறுபாடு பின் விளைந்தது.

மற்றவை பின்னொருநாள் வரும்.

மேலும் வாசிக்க:

https://sivamaalaa.blogspot.com/2017/12/blog-post_21.html

https://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_29.html