சனி, 7 பிப்ரவரி, 2009

மருத்துவமனையின்மேல் தாக்குதல்.

நோய்ப்பட்ட மக்கள் நுடங்கு மில்லத்தை
நாய்ப்படை குண்டெறிந்து தாக்கிப் படுகொலை
செய்த மனிதநேயச் சீரழிவைக் கண்டித்து
வைத உலகையும் ஒட்டி ஒழுகா
அரசியல் மேலாண்மை ஆமோ அரசு?
அறிவுடையார் பின்னதற்குத் தந்தார் பரிசு!!
கொலைக்குற்றக் கூண்டிலே ஏற்றினார் என்றால்
நிலைப்படும் இவ்வுலகம்! இன்றேல் நெடுநாட்கள்
இத்தகு போர்கள் இனியும் பலநேர்ந்து
மெத்தப் பலதுன்பம் மேலோங்கும்!! ஐநாவே!
ஏதேனும் செய்யீரோ!! காதேனும் கேட்குமோ?
ஓதிப் பயனுண்டா மோ?

போர்வேண்டாம்!

போர்வேண்டாம் போரினையே நிறுத்தி விட்டு
புத்துரிமை தருந்தீர்வு காணல் நன்று;

மார்தன்னைத் தட்டுவதில் மாட்சி இல்லை
மக்களுக்கே துன்பமத னாலே கண்டீர்;

யார்வந்து தடுத்தாலும் யாம்போர் செய்வோம்
யார்மீதும் குண்டுமழை என்ப தெல்லாம்

சீர்கெட்ட சிந்தனையால் விளைந்த கூச்சல்
செம்மையான அரசியலே இல்லாப் பேச்சு.

வெள்ளி, 30 ஜனவரி, 2009

புசி > போஷி> போஷாக்கு

புசித்தல் என்ற சொல்லின் அடிப்படையில் தோன்றியதே போஷி, போஷாக்கு என்பன.

போஷி என்பது, இருக்கு வேதம், அதர்வண வேதம் முதலிய நூல்களிலும் உள்ளது.

புசி > போசி > போஷி.
போஷி > போஷாக்கு.

போஷி + ஆக்கு = போஷாக்கு.

புசி+ஆக்கு > போஷாக்கு எனினும் அதுவே.