வெள்ளி, 26 டிசம்பர், 2025

சிப்பந்தி

 பலர் உண்ணும்  அமர்வூட்டு முறையை,  பந்தி என்று சொல்கிறோம்.  இந்தப்  பந்தி என்ற சொல்லினை,  நம் பவணந்தியாரின் முறையைக் கையாண்டு பிரித்துப் பார்த்தால்,  எளிதிற் பொருள்கண்டு மகிழ்வினை எய்தலாம்.  சொல்லினை ஆய்வுசெய்கையில் மகிழ்வு அடைந்துகொள்வது,  மனப்பதிவு ஆய்வு முறைக்கு வித்திடும் என்று எதிர்க்கலாகாது.. எதைச் செய்தாலும் செய்வதில் மகிழ்வு கொள்ளுதல் என்பது ஒரு பங்காற்று முறையாகும்.  

பன்மை+ தி >  பன்+தி >  பந்தி என்று எளிதாக அமைத்துக் காண்க.  மைவிகுதி இணைத்து விலக்கிப் புணர்த்துவது பவணந்தியார் பண்புப்பெயர்கள் அமைவதற்குச் சொன்ன முறை.  இங்கு எளிதிலுணர்தல் என்ற பெறுதல்முறைக்காக இதைப் பரிந்துரை செய்கிறோம்.

பல வேலைத் தலங்களில் ஊழியர் பலர் இந்நாளில் வேலையிலிருப்பர்.  இவர்கள் பெரும்பாலும் பலராயிருக்கும் சிறிய வேலைக்காரர்கள் தாம். சிறு வேலைக்காரர்கள் என்பது தோன்றும் வண்ணம் சிறு என்பதை முன்னில் இட்டு,  சிறுப்பந்தி என்று இணைத்தால் சிறுவேலைப் பலர் என்று பொருந்தும். சிறுப்பந்தி என்பதற்கு  சிற்பந்தி என்று போட்டு,  இன்னும் எளிமையாக்கி, சிப்பந்தி என்று ஆக்கிவிட்டால் என்ன?  வேலை எளிதில் முடிந்து ஒரு புதுச்சொல்லும் கிட்டிவிட்டது.

இயற்றமிழின் இனிமை கண்ட புலவர்-- இதனை ---பகுதிச் சொல்லை மிக்கக் கடிய முறையில் வெட்டி எடுத்துச் சொல்லை இயற்றுவதை,-------  இயற்றமிழ்ப் புலவர்கள் விரும்பார். அவர்களுக்கும் எரிச்சலின்றிச் சொல்லாக்குதல் கடனாகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை












செவ்வாய், 23 டிசம்பர், 2025

தனயன் என்பதும் மற்றும் சமஸ்கிருத மொழிப்பண்பும்

 ஐகாரம் இடையில் வந்த சொற்கள் சில,  அந்த ஐகாரம் அகரமாக மாறிவரும். இது ஒரு குறுக்கம்.   சொல்லாக்கத்தில் மட்டுமன்று,  கவிதையிலும் இத்தகு குறுக்கங்கள் வரும்.  இன்னும் பேச்சு வழக்கிலும் ஐகாரம் இடையில் நிற்கும் சொற்கள் அந்த ஐகாரம் அகரமாகத் திரியும்.  வடையில் எண்ணெய் அதிகம் என்பது வடயில் எண்ணெய் என்பதுபோல் ஒலிக்கும்.  டை என்பது ட ஆயினும்  கெடுதல் இல்லாமல் தோன்றும்.

தனையன் என்ற சொல்  தன் ஐயன் என்ற இருசொற்கள் புணர்ந்து ஏற்பட்டிருந்தாலும்  தனயன் என்பதுபோல் ஒலித்து.  சம ஒலியாகத் திகழும். தனையன் என்ற சொல்லும் தனயன் என்று திரித்து எழுதப்பெறுவதும் நடைபெறும்.

தனயன் என்பது சமஸ்கிருதமா என்றால்,  ஆம் என்று சொல்லலாம்.  ஏன் என்றால் இவ்விரண்டு வடிவங்களும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லாதவையாகவே  தோன்றுகின்றன.  பேச்சில் இவ்வாறு  திரிந்து ஒலித்தால் கண்டுபிடிக்கவே முடிவதில்லை.  பேசுகிறவன் ஐகாரத்துக்கு உள்ளது ஒலிக்கும் நேரத்தில் குறுக்கம் விளைந்ததை அறியாமலேகூடப் பேசுகிறான்.  நெடுங்காலமாக் இப்படித் திரிந்து வழங்குவதால் தனயன் என்பதே சரி,  தனையன் அதன் திரிபு என்றுகூடத் துணிந்துவிடுகிறான்.

சங்கதம் என்பது சமஸ்கிருதத்துக்கு மற்றொரு பெயர்.   கதம் என்ற இரண்டாவது பகவு,  கத்து என்பதிலிருந்து வருகிறது.  கத்துதல்  என்றால் ஒலி செய்தல். கத்து என்ற பகுதி  கது என்று ஆனபின்,  அம் விகுதி பெற்றுக் கதம் ஆகிறது. சங்கதம் என்றால்  சமமான ஒலி என்று பொருள்.  இப்போது இந்தப் பொருள் மிகச் சரியானதாக உள்ளது என்பதை நீங்கள் அறிந்து இன்புறலாம். இம்மொழிக்குச் சரியாகவே பெயர் வைத்திருக்கிறார்கள். ''சமஸ்`¬ கிருதம்'' என்பதற்கும் அதுவே பொருள். ஆனால் வெள்ளைக்கர ஆய்வாளன் '' நன்றாகச் செய்யப்பட்டது'' என்று பொருள் கூறினான்.

தன் ஐயன் என்பதே தனயன் ஆகிவிட்டது. மகனை அப்பா என்று அழைக்கிறவர்களும் உள்ளனர். அப்பாகவே இல்லாத ஒருவனை '' அட என்னப்பா இது''  என்று குறித்துப் பேசுவதும் காணலாம். பல மலைகள் ஏறித் தவமிருந்து பெற்ற மகனை மிக்க அன்புடன்  ஐயன் என்று சொல்வோரும் உளர்.  அண்ணனை ஐயன் என்போரும் உள்ளனர். தனையன் என்பது அன்பினால் அமைந்த சொல் ஆகும்.  ஐயன் என்றால் தலைவன் என்பதே பொருள் ஆகும். ஐயா என்பது இன்று பெரியோரைக் குறித்த போதும்  அது ஐயன் என்ற சொல்லின் விளிவடிவம்தான்.

சமஸ்கிருதம் என்பது வெளிநாட்டிலிருந்து வந்த மொழியன்று.  உள்நாட்டில் தோன்றிச் செறிந்து வழங்கிய மொழிதான். ஆதலால் தனயன் என்பது தமிழ்தான்.  சமஸ்கிருதமும்  ஆகலாம். சம ஒலி மொழிச் சொல். நாளடைவில் சமஸ்கிருதம் என்ற பொருள் மறையும்படி  விரிந்து வளமடைந்தது.  பலசொற்கள் இன்று சம ஒலி  அல்லாதனவாய்த் தோன்றலாம்.  அஃது பிற்பாடு விளைந்த மாயை ஆகும். இந்தோ ஐரோப்பியம் என்பது வெள்ளைக்காரன் பிற்பாடு ஏற்படுத்திய இன்னொரு மாயை.  

தன் + ஐயன் >  தன்னையன் >  தனையன் > தனயன்> தநயன்.

இன்னொரு வகையில்:

தன் + நயம்>  தன் நயன்> தநயன்> தனயன்

அப்பன் பெரிதும் விரும்புவதால் மகன் நயமுடையவனாகிறான்.

தனக்கு நயம் சேர்ப்பவன் மகன்.

மகனை உயரியோனாய் அப்பன் போற்றுவான் என்பதும் காண்க.

துவட்டா ஈன்ற தனயன் ( திருவிளையாடற்புராணம். இந்திரன்பழி.8)

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது











வெள்ளி, 19 டிசம்பர், 2025

கணம் (சொல்), வெகுளி என்பவை

 இதனை வாருங்கள் ஆராய்வோம்..

''குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி 

கணமேயும் காத்தல் அரிது''  

என்பது குறள். வெகுளி என்ற சொல்,  சொல்லாய்வில் ஓர் ஆய்வுக்கு அருமையான சொல்லுமாகும்.  இதன் மூல வினைச்சொல்  வேகுதல் என்பது.  வேகு> வெகு> வெகுள்>  வெகுளி என்று அமைந்துற்ற சொல்லாகும். உள் என்ற விகுதி வினையாக்கத்திலும் வருமென்பதை இதனால் அறிந்துகொள்ளலாம். கடத்தல் (தாண்டிச்செல்லுதல் என்று பொருள்படும் வினை) என்பதிலிருந்து,  கடவுள் என்ற சொல் உள் விகுதிபெற்று அமைந்துள்ளதைக் காணலாம். வெகுள் என்பது ஒரு வினையிலிருந்து இன்னொரு வினை உண்டாக உதவுகிறது. இது வெகு+ உள்> வெகுள் என்று அமைந்தது.  சுரு என்ற அடிச்சொல்லிலிருந்து  சுருங்கு,  சுருள் என்ற வினைகள் உண்டாயின.  இவற்றில் சுரு+ உள் > சுருள் ஆகும். சுர்> சுரு.  சுர் என்பதே மூல அடி ஆகும்.  சுரிதல் என்ற வினையும் உள்ளது. சுரிதலாவது சுருங்கி உள்வாங்குதல் என்று விளக்கலாம். சுரிந்தோடும் நாகம் என்று ஒரு கவிதையில் எழுதியது நினைவுக்கு வருகிறது.

வெகுளி என்பது கோபம் ஆகும். வெகுளிக்காரன், வெகுளிப்பெண் என்ற சொற்பயன்பாடுகளும் உள.  கள்ளம் கபடு இல்லாத குணத்தினர் என்ற பொருளில் இவை வரும்.

கணம் என்ற சொல் கண்ணிமைக்கும் பெழுது அல்லது நேரம் என்று பொருள்படும்.  கண்ணிமைப் பொழுது ஆதலால்,  கண்+ அம் > கணம் என்றானது இந்தச் சொல்.  கண் இமைத்தலால் அமையும் நேரம் ஆதலின்  கண் அம் என்பவற்றால் ஆயிற்று இச்சொல்.  அம் என்பது அமைத்தல் என்பதன்  அடிச்சொல். இங்கு இது விகுதியாக வந்து  அமைத்தலை உணர்த்துகிறது.

சிலவிடத்து, விகுதி பொருளோடு இலங்குதலும் உளது.  பொருளில்லாத விகுதிகளும் உள.

ககரத் தொடக்கத்துச் சொல்,  சகரத் தொடக்கமாகவும் வரும். கணம்>  சணம் ஆனது ககர சகரத் திரிபு.   சேரல்>  சேரலம் > கேரளம் என்பதில் இவ்வாறே  ஆனது.

கணம்> சணம் என்பது பின்னும் முன்னேறி,  க்ஷணம் என்றுமானது. கணமென்பது மூலத் தமிழ்ச்சொல்  ஆகும்.  

சமஸ்கிருதம் என்பதன் பொருள்.

(க்ஷணம் என்னும் சமஸ்கிருதம்)

சமஸ்கிருதம் என்ற சொல்லில் சமம், கதம் என்ற சொற்பகவுகள் உள்ளன.  கதம் என்பது ஒலி.  கத்> கதம். கத்> கத்து என்பதில் ஒலி எழுப்புதல் பொருள். கத்> கதறு என்பதிலும் ஒலியே முன்மை அல்லது முதன்மை பெற்றது. கத்> கது> காது என்று முதனிலை திரிந்து சொல்லமையும்.  காதால் கேட்டறியும் நிகழ்வு கூறுதல் கதை ஆனது.  இது பின் முதல் நீண்டு காதை ஆனது.  காதை என்பது கீதை ஆனது  செவிக்கதை என்று பொருள்தரும்.  இது சொல்லாக்க மூலப் பொருள். கதம் என்பது கிருதம் என்று திரியும்..  சமஸ்கிருதம் என்றால் மூலத்துடன் சமமான ஒலி உடையதாகிய மொழி என்று பொருள். இதற்கு வெள்ளைக்காரன் ''நன்றாகப் புனையப்பட்டது'' என்று பொருள் சொல்லுவான்.  எதுவும் கெடுதலாகப் புனையப்படவில்லை,  எல்லாம் நன்றாகவே செய்யப்பட்டுள்ளது.  கணம் என்பது க்ஷணம் ஆனதில் ஒலிமேம்பாடு,  பிற தேயத்தாருக்கு உரியபடி செய்யப்பட்டுள்ளது. ஒலி மேம்பாட்டினால் சமஸ்கிருதமான சொல் க்ஷணம் என்ற சொல் ஆகுமென உணர்க.  இதனால் கண் என்ற மூலச்சொல்லுக்கு எந்தக் குறைவும் இல்லை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை உடையது.




https://r.search.yahoo.com/_ylt=Awr1Te0riUZpJgIAFisj4gt.;_ylu=Y29sbwNzZzMEcG9zAzQEdnRpZAMEc2VjA3Ny/RV=2/RE=1767439916/RO=10/RU=https%3a%2f%2fwww.lexilogos.com%2fenglish%2fsanskrit_dictionary.htm/RK=2/RS=R8a0L2BoRel.nB5KCNvPw811C0s-