சனி, 22 நவம்பர், 2025

இமாலய வெற்றி - இமாலயம்

 இமாலய வெற்றி என்று கூறுவதுண்டு.

இதை இவ்வாறு பிரித்தறிக.

இ -  இது;  மா - பெரிய;  ஆல்  ( அகல் என்பதன் திரிபு) - அகன்ற; அய - அடைந்த அல்லது அருகிலான.

இந்த அய என்பது  இரண்டு மூலச்சொற்களின் இணைப்பு.  அ என்பது அருகில் அல்லது அயலில் என்பதற்கும் மூலம்.  அங்கு என்பதற்கும் மூலமாகும்.  அ அ என்பது அய என்று வந்ததில் யகர உடம்படுமெய் வந்தது.  

மா+ அகல்+ அ+ அ ,  அகல்> ஆல் என்று திரியும்.

மா+ ஆல் > மால் என்று,  ஆ கெட்டது அல்லது வீழ்ந்தது.  இது மக+ அன் > மகன் என்று அ வீழ்ந்தது போலுமே. வகர உடம்படு மெய் வரவில்லை.  மக அன்> மான் என்றுமாகும். பகு> பகுதி> பாதி, காண்க. ககர வருக்கம் வர முதல் நீளுதல். அதியமான், புத்திமான். பெருமகன் > பெருமான். தொகு+ஐ>  தோகை. தொகை என்றுமாகும். பகு+ ஐ>  பாகை.

சொல்லாக்கப் புணர்ச்சி வேறு.  முழுச்சொற்கள் புணர்ச்சி வேறு. இவ்விரண்டிலும் ஒற்றுமைகளும் உண்டு,  வேறுபாடுகளும் உண்டு.

இமைய ஆலய என்ற சொற்களின் இணைப்பு எனினும் ஒன்றே.  இதை விரிவாக மேலே கூறியுள்ளோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை


வியாழன், 20 நவம்பர், 2025

சகோதரம், சகோதரன், சகோதரி தமிழ்மூலம்.

 தலைப்பில் கண்ட சொற்களை இன்று ஆய்ந்து அறிந்து கொள்வோம்.

அகர வருக்க முதலாயின சொற்கள் சகர வருக்க முதலாய்  ஆகித் திரியும் என்பதைச் சொற்களை ஆய்வோன்  அறிந்திருக்க வேண்டும்.  இக்கருத்துக்கு ஆசிரியர்கள் பெரும்பாலும் காட்டும் உதாரணம் :  அமணர்> சமணர்  என்ற சொல்தான்.  அடுத்தடுத்து மண் குழைத்து இறுக்கமாகச் செய்யப்படுவது  அடு> சடு> சட்டு>  சட்டி   என்போம்.   அடு> சடு>  சடு+ இ>  சட்டி என்று சுருங்கக் கூறிவிடலாம்.  பொருள்விளக்கம் தானும் முன்செய்தபடியே  செய்தல் கூடும்.

அகம் என்பது உள் என்று பொருள்தருவது.  மேற்கூறிய விதியின்படியே,  அகம் என்பது சகம்  ஆகும்.  சகோதரர்கள் தமக்குள் ஒத்தவர்கள்.  ஒருதாய் உடைமையால் பிள்ளைப்  பருவத்திலிருந்து வளர்ந்தவர்கள்.  ஒரு வீட்டில் வாழ்ந்து வளர்ந்தவர்கள் என்றும் விளக்கினும் இழுக்கில்லை.  அக > சக என்றாகிறது.   சக + ஒ >  சகொ >  சகோ என்று திரித்தாலும்  சகோ என்றாகும்.  ஒ+இயம் > ஓவியம் என்ற இன் தமிழ்ச் சொல்லையும் கண்டுகொள்க.  உண்மைப் பொருளை  ஒத்து இருப்பதுதான் ஓவியம்.   ஓ+ அம் > ஓவம் என்றுமாகும் என்றறிக.

அக+ ஓ .>  அகோ>  சகோ.   தரு + அன் >  தரன். தரப்பட்டவன்,  அதாவது தாயினால் தரப்பட்டவன். பிள்ளைகளைத் தருவதனால்தான்,  தா> தாய் என்ற சொல்லும் பொருள் சிறக்கிறது.

சகோதரி என்பது பெண்பால் எனல் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இவ்வாறு சுருங்கச் சொல்வதால் அறிக.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை உடையது.


 

புதன், 19 நவம்பர், 2025

வயிறு - சொல்லும் பொருளும்.

 வயிறு என்றால் இறுதியில் வைக்கப்பட்டது என்று பொருள்.  முன் காலத்திலே இச்சொல் அமைந்து நெடுங்காலமாக வழங்கி வருகிறது.  

வை  -    வைக்கப்பட்டது. இந்தப் பகவு,  வ்+ ஐ என்ற ஈரெழுத்துக்களால்  ஆனதாம். இங்கு வை என்பது நெடில்.  குறுகி  வ என்று நின்றது.

இறு  என்பது இறுதி என்ற பொருளது.   இறுதல் என்ற வினை, விகுதி பெறாமல் பகுதி மட்டுமே பகவாக நின்றது.  இறு என்றபடி.

வ+ இறு >  வயிறு  ஆனது.   யகர ஒற்று,  இரு பகவுகளையும் உடம்படுத்துகிறது,  அதாவது இணைக்கின்றது.

உதரம்  என்பது வயிற்றுக்கு இன்னொரு பெயர்.  இது உது + அரு+ அம் என்ற மூன்று பகவுகளைக் கொண்டு ஆன சொல்.

உ - என்றால் முன்.  து என்ற விகுதி இணைந்து உது -  முன்னிருப்பது என்ற பொருளில் வரும்.  நீ > உன் என்ற சொல்லில் உன் என்பது முன்னிருப்பவனுக்குப் பதிற்பெயர் ( pronoun).[ in the possessive case]. இது  ஊன்> உன் என்று குறுகிற்று என்று இலக்கணியர் உரைப்பர். நீ என்ற சொல், நீங்கற் பொருளது ஆகும்.  தன்னின் நீங்கி நிற்பவன் என்று பொருள்.'' உன்னில்'' முதுகுக்கு அருகில் இருப்பதால்  '' அரு'' என்ற  பகவு வந்தது.  ஆகவே உன்னில் முதுகுக்கு அருகில்  அமைந்தது   அரிய பல உள்ளுறுப்புகளைக் கொண்டிருக்கும் இடம் என்று பொருளுரைத்தல் கூடும்.  இவ் வுதரம் என்ற சொல் ஒரு காலத்தில் வழக்கில் இருந்து பின் வழக்குக் குன்றியிருக்கலாம்.

'' உன் உதரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடினும்''  என்ற மனோன்மணீயம் வழக்கினைக் கண்டுகொள்க.  உது அரு என்னாமல் உ+ தரு என்றும் விளக்கலாம்.  இஃது '' முன் வைக்கப்பட்டது''  என்று பொருள்படும். 

ஆகவே ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகளை உடைய சொல் என்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.