வியாழன், 25 செப்டம்பர், 2025

தேவடி(யார்) தாய் > தா என்பன

 தனக்குத் தெரியாத ஒன்று சரியாக நடைபெறுகிறது என்று முடிவு கொள்ளும் மனத்திடம் எளிதில் அமையாமையால்,  தேவர்கட்கு அடியார்களாக இருக்கும் பெண்டிர் சரியான நடப்பு உடையவர்கள் என்று முடிவு செய்யும் திடமனம்  ஒருவற்கு ஏற்படுவதில்லை. அதனால் தேவரடியார் என்ற சொற்கு நல்ல பொருண்மை ஏற்படவில்லை.

இதிலிருந்து தேவடியாள் என்ற சொல் ஏற்பட்டது.  அது இழிபொருளை சொல்லுக்கு ஏற்றியது,

தேவு என்ற சொல்லே தேய்வு என்பதன் இடைக்குறையிலிருந்து ஏற்பட்டது.  மரங்களின் உராய்வு தீப்பற்றுவதாலும் தீயானது பிற்காலத்து வணக்கம்  பெற்றமையாலும் தேய்வு> தேவு என்ற சொல் தெய்வத்தன்மை,  இறைவன் என்பவற்றைக் குறிக்க எழுந்தது.  தேவு என்ற சொல்லோ தமிழிற் றோன்றிய சொல்லே ஆகும்.

தேய்வு அடை என்ற சொல்  தேய்வடை> தேவடை என்று திரிந்தமையும் உணர்க. நாணய எழுத்துக்கள் தேய்ந்தபின் அந்நாணயங்கள் தேவடை என்று குறிக்கப்பட்டன.  சாய் என்ற வினை சா என்று யகர மெய் இழந்த இன்னொரு வினையாய் அமைந்தமையும் கண்டுகொள்க. தாய் என்ற சொல்லும் பெயர்களில் தா என்ற நிற்றல்,  தேவ(த்)தாய் >  தேவதா என்று குறைந்தமையும் கண்டுகொள்க. பெண்பெயர்களில் தாய் என்பது தா என்றே முடிந்து ,  வனிதைத் தாய் என்பது வனிதா என்று பெயராகும். புனிதத் தாய் >  புனிதத்தா> புனிதா என்றாகும். பல்திரிபு மொழிகள் தனிமொழிகளான பின் இவற்றின் தொடர்புகள் மறைந்தன.  

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிவுரிமை


திங்கள், 22 செப்டம்பர், 2025

ஆவிடை , ஆவுடை, தொடர்புடைய சொற்கள்

 ஆ தொடக்கச் சொற்கள் பற்றி கணினி  23000 மேற்பட்ட உள்ளீடுகளின்  இருப்பினைக் காட்டினும்  அவற்றின் வரிசையையும் பொருட்களையும்  தேடுபொறிகள் காட்டத் திணறுகின்றன. ஆ என்பதற்குப்  பசு என்பது பொருள்.  ஆவின்பால் என்றால் பசுவின் பால்.

ஆ வுடையார் என்பதுதான்  ஆவிடையார் என்று திரிந்துவிட்டது என்று தமிழாசிரியர் சொல்வர். இதுவே  ஆவடையார் என்று திரிந்தது என்றும் கூறுவர்.

மாடு என்பதற்குச் செல்வம் என்று பொருளிருப்பதுபோல,  ஆ என்பதும் ஆக்கம் என்று பொருள்தரும் என்ற விளக்கம் உள்ளது.  ஆக்கம்,  செல்வம் என்பன ஒரு பொருளன. ஆ என்பது முதனிலைப் பெயராகச் செல்வம் என்று பொருள்தர வல்லது.  ஆவுடையார் என்பது செல்வம்  உடையார் என்று,  பசுவினை உடையவர் என்றும் பொருள்தரும்.

ஆ அடையார் என்பது  ஆவடையார்  என்றாம்  எனின்,  ஆ என்ற செல்வம் அடையார் என்னும் செல்வம் அடையமாட்டார் என்று எதிர்மறைப் பொருள் தரும்  என்பது சொல்லப்படுவதில்லை.

விடை என்பது கோழி என்ற பொருளும் உடையது.  ஆனால் எருது என்ற பொருளும் உள்ளது இச்சொல்.  ஆவிடை என்னும் போது இவற்றை உட்படுத்துவது இல்லை.

இங்கு கவனிக்க வேண்டியது சொல்லின் திரிபுகளே. மூலம் தமிழே ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை

சனி, 20 செப்டம்பர், 2025

புத்தகம் - புஸ்தகம், பொத்தகம் > பொஸ்தகம் வடிவங்கள்

 இப்போது  எழுபத்தைந்து ஆண்டுகளின் முன் இந்தச் சொற்களை எப்படி உச்சரித்தார்கள் என்பது நினைவிலுள்ள படியினால்  இவற்றின் இன்றை வடிவங்களுடன் ஒப்பீடு செய்வது எளிதாக உள்ளது.  ஆகவே இந்நுகர்வின் பயனாக உணர்தல் எளிமையாகி  விடுகின்றது.

பொத்தகம் என்றால்  ஓர் ஒரத்தில் பொத்தலிட்டு  நூலை அல்லது கயிற்றைக் கொண்டு சேர்த்துக் கட்டி,  எழுதுவதற்குப் பயன்படுத்திய தாள்கட்டு அல்லது ஏட்டுக்கட்டு என்றுதான் பொருள். பொத்து அகம் என்றால்  பொத்துவிட்டு அகப்படுத்திய ஏட்டுக்கட்டு.  இது புலவர் புனைவான சொல் அன்று. இந்தச் சொல் பேச்சு வழக்கில் ஏற்பட்டதுதான்.  இது பின்பு  புஸ்தகம் என்று  மாறிற்று;  பொஸ்தகம் என்றும் பேசக் கேட்டுள்ளோம்.

எல்லாச் சொற்களுக்கும் சமஸ்கிருத்ததிலிருந்துதாம்  வந்திருத்தல் வேண்டும் என்னும் எண்ணத்தினால்  புஸ்தகம் அல்லது பொஸ்தகம் என்று சொல்வது சரியென்று எண்ணியதும் அறிகிறோம். எனினும் அதுவும் உள்நாட்டு மொழியே ஆதலினாலும்  சொல்லிலும் பொருளிலும் தமிழினோடு நெருங்கிய மொழி ஆதலினாலும்  சமஸ்கிருதம் எனிலும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை.  இங்கு அது தமிழென்றே கொள்ளப்படும்.

பொத்து அகம் அல்லது பொத்தகம் எனின்  பொத்தலினால் கட்டப்பெற்று அகப்படுத்தப்படும் ஏடுகள் என்பது சரியாகவே வரும்.  பொகரத்தில் தொடங்குவது ''நாகரிகம்'' அற்றது என்ற எண்ணத்தினால்  புத்தகம் என்று திருத்தி யிருந்தாலும்,   இத்திரிபு ஏற்புடைத்ததே,  ஒலியியல் முறையில்.  இதில் நாகரிகமின்மை ஒன்றும் இலது.

இவ்வெல்லா வடிவங்களும் அகரவரிசை உடையோர்க்கு எட்டியுள்ளன.

செருமானிய மொழியில் பொக் என்பதே  மூலமாகக் காட்டப்பெறுகிறது.   புக்கு என்பது பழந்தமிழில் ''புகுந்து''  என்று பொருள்படும்.  காகிதக் கட்டினுள்  நூல் புகுந்து அல்லது புக்கு. கட்டாகின்ற படியினால் இது தமிழினோடு ஒத்த வடிவமே ஆகும்.  பளிக்கறை புக்க காதை என்றால் பளிங்கு அறையினுள் புகுந்ததைச் சொல்கின்ற கதைப்பாட்டு என்று  பொருள்.

பொத்தகம்>  பொத்து :  துளையிடப்பட்டு;  அ -   அத்துளையிலே ;  கு -  இணைத்துச் சேர்க்கப்பட்டு;  அம் -    அமைவது அல்லது அமைக்கப்படுவது.  கு என்பதன் பொருள்  சேர்தல் என்பது.   சென்னைக்கு =  சென்னையை அடைதல் அல்லது சேர்தல் எனல் பொருளாதல் கண்டுகொள்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை