சனி, 20 செப்டம்பர், 2025

புத்தகம் - புஸ்தகம், பொத்தகம் > பொஸ்தகம் வடிவங்கள்

 இப்போது  எழுபத்தைந்து ஆண்டுகளின் முன் இந்தச் சொற்களை எப்படி உச்சரித்தார்கள் என்பது நினைவிலுள்ள படியினால்  இவற்றின் இன்றை வடிவங்களுடன் ஒப்பீடு செய்வது எளிதாக உள்ளது.  ஆகவே இந்நுகர்வின் பயனாக உணர்தல் எளிமையாகி  விடுகின்றது.

பொத்தகம் என்றால்  ஓர் ஒரத்தில் பொத்தலிட்டு  நூலை அல்லது கயிற்றைக் கொண்டு சேர்த்துக் கட்டி,  எழுதுவதற்குப் பயன்படுத்திய தாள்கட்டு அல்லது ஏட்டுக்கட்டு என்றுதான் பொருள். பொத்து அகம் என்றால்  பொத்துவிட்டு அகப்படுத்திய ஏட்டுக்கட்டு.  இது புலவர் புனைவான சொல் அன்று. இந்தச் சொல் பேச்சு வழக்கில் ஏற்பட்டதுதான்.  இது பின்பு  புஸ்தகம் என்று  மாறிற்று;  பொஸ்தகம் என்றும் பேசக் கேட்டுள்ளோம்.

எல்லாச் சொற்களுக்கும் சமஸ்கிருத்ததிலிருந்துதாம்  வந்திருத்தல் வேண்டும் என்னும் எண்ணத்தினால்  புஸ்தகம் அல்லது பொஸ்தகம் என்று சொல்வது சரியென்று எண்ணியதும் அறிகிறோம். எனினும் அதுவும் உள்நாட்டு மொழியே ஆதலினாலும்  சொல்லிலும் பொருளிலும் தமிழினோடு நெருங்கிய மொழி ஆதலினாலும்  சமஸ்கிருதம் எனிலும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை.  இங்கு அது தமிழென்றே கொள்ளப்படும்.

பொத்து அகம் அல்லது பொத்தகம் எனின்  பொத்தலினால் கட்டப்பெற்று அகப்படுத்தப்படும் ஏடுகள் என்பது சரியாகவே வரும்.  பொகரத்தில் தொடங்குவது ''நாகரிகம்'' அற்றது என்ற எண்ணத்தினால்  புத்தகம் என்று திருத்தி யிருந்தாலும்,   இத்திரிபு ஏற்புடைத்ததே,  ஒலியியல் முறையில்.  இதில் நாகரிகமின்மை ஒன்றும் இலது.

இவ்வெல்லா வடிவங்களும் அகரவரிசை உடையோர்க்கு எட்டியுள்ளன.

செருமானிய மொழியில் பொக் என்பதே  மூலமாகக் காட்டப்பெறுகிறது.   புக்கு என்பது பழந்தமிழில் ''புகுந்து''  என்று பொருள்படும்.  காகிதக் கட்டினுள்  நூல் புகுந்து அல்லது புக்கு. கட்டாகின்ற படியினால் இது தமிழினோடு ஒத்த வடிவமே ஆகும்.  பளிக்கறை புக்க காதை என்றால் பளிங்கு அறையினுள் புகுந்ததைச் சொல்கின்ற கதைப்பாட்டு என்று  பொருள்.

பொத்தகம்>  பொத்து :  துளையிடப்பட்டு;  அ -   அத்துளையிலே ;  கு -  இணைத்துச் சேர்க்கப்பட்டு;  அம் -    அமைவது அல்லது அமைக்கப்படுவது.  கு என்பதன் பொருள்  சேர்தல் என்பது.   சென்னைக்கு =  சென்னையை அடைதல் அல்லது சேர்தல் எனல் பொருளாதல் கண்டுகொள்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

கருத்துகள் இல்லை: