சனி, 13 செப்டம்பர், 2025

கச்சா ( எண்ணெய்) என்ற சொல்

 இன்று கச்சா என்ற சொல்லை ஆய்ந்தறிவோம்.

சில அரைத்த திரவப்பொருள்களில் அடர்த்தியான பாகம்,  மேலாக உறைந்து  அல்லது திணுங்கிப் படிந்திருக்கும்.  அதன் கீழ்  திணுக்கமற்ற நீர்ப்பொருள் இருக்கும்.  அரைத்துவைத்த நீர்ப்பொருள் மறந்து விடப்பட்ட நிலையிலும் திரவத்தில் ஏற்படும் மாற்றங்ளால் இத்தகைய கடிய படர்வு மேலெழுந்து நிற்பதுண்டு.  பாலைக் காய்ச்சி வைத்துச் சரியான முறையில் தயிருக்கு உறைவு பெறாத பொழுதும் இவ்வாறு மேற்படிவு காணப்படுவதுண்டு.

கல்லெண்ணெய் என்னும் பெட்ரோல்  எடுக்குமிடங்களில் முதலில் எடுக்கப்படும் எண்ணெய்  தூய்மை அற்றதாக இருக்கும்.  

கச்சா என்ற சொல்லில்  கச என்ற சொல் அடியாக இருக்கிறது. இது கச என்றும் மாறவல்லது. கச என்பது கய என்றும் மாறவல்லது.  கயக்கால் என்பது  ஊற்றுக்கண் என்னும் பொருளதாய் உள்ளது. கயம் என்ற சொல்  குளம் என்றும் பொருள்படுகிறது.

கச்சா என்பது  ஆ விகுதி பெற்று ஊற்று என்னும்  பொருளதாகிறது .  கசடு என்பது .  தூய்மை அற்ற நிலைக்குப் பொருத்தமான சொல்.  சரியானதன்று  என்று அறியக் கிடக்கின்றது.  

கசிதல் என்ற சொல்  சிற்றளவில் வடிதலைக் குறிக்கிறது.  கசி> கச்சி> கச்சா என்று மாறக்கூடிய சொல் இது. இவை எல்லாம்  தொடர்புடைய சொற்கள்.

கச்சா என்பது தூய்தாக்கத்திற்கு முந்திய நிலையைக் குறித்தது பொருத்தமே ஆகும்.

இனிக் கடு உச்சம் என்ற சொற்கள் இணைந்து கட்டுச்சம் என்று வந்தால் இது இடைக்குறைந்து  கடுச்சம்>  கச்சம்>  கச்சா என்றாகும். மிக்கத் திணுக்கமான மென்மையாக்க வேண்டிய எண்ணெய்,  கச்சம்>  கச்சா என்றாகும். இஃது இன்னோர்  அமைப்பு ஆகும்.  இச்சொல் பலபிறப்பு உடைத்து என்க.

கச்சா என்பது தமிழ்ச்சொல் ஆகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை உடையது



வெள்ளி, 12 செப்டம்பர், 2025

அதிருஷ்டம் என்பதன் தமிழ்மூலம்

 அதிருஷ்டம்  என்ற சொல் எப்படிப்  புனைவுண்டது என்று இன்று தெரிந்துகொள்வோம்.

திருஷ்டம் என்ற ''வடசொல்''  தெருள் என்று வழங்கிற்று.   இதன் அடி,  தெர் என்பதுதான். 

தெர் >  தெரி.

தெர் + உள் >  தெருள்.   உள் என்பது ஒரு விகுதி.  கடவுள் என்பதிற்போல   : ( கட + உள்).  இயவுள் என்பதிலும் உள் விகுதி இருக்கிறது.    ஆ + உள் >  ஆயுள் என்பதில் உள் விகுதி என்று பொருள்.  ''  ஆகிவிட்ட ( ஓடிவிட்ட)  காலம்'' என்பது பொருள். வேறு பொருண்மைகளும் பொருத்தப்படலாம்.  

தெருள் என்று சொல் அமைந்தபின்பு,  இது வினைச்சொல்லாய் ''  தெருளுதல்''  என்ற வடிவில் காட்டப்பெறுகிறது.  தன்வினை பிறவினை வடிவங்கள் எனின், தெருளுதல்.  தெருட்டுதல்  என்று  வரும்.  தெருள்வித்தல் என்பதும் ஏற்புடையதே ஆகும்.

இனி, தெருட்டு (வினைப்பகுதி), தெருட்டு+ அம் >  தெருட்டம்,   தெருட்டம்>  திருட்டம் >  திருஷ்டம்,  (திருஷ்டாந்தம்) என்பன காண்க.  திருட்டம் என்று  திரிந்தது  திருஷ்டம் என்று மாறாவிடில்  ஏற்புடைய வடிவமாகாமை காண்க.  இதுபோல்வதே கஷ்டம் என்ற சொல்லும்.  கட்டு+ அம் > கட்டம் என்பதனோடு கடு+ அம் > கஷ்டம்  என்பதை ஒப்பிட்டு அறிந்துகொள்க.  கண்ணால் பார்த்து வரும் ஊறு,  கண்திட்டி,  இதுவும் திருஷ்டி என்று மாறியது சொல்லிணக்கத்தின் பொருட்டு. திருட்டி என்பதில் ருகரம் நீக்கியது திருட்டு என்ற சொல்லினோடு அதற்கிருந்த அணிமையை விலக்குதற்பொருட்டு. ருகரத்தை வைத்துக்கொண்டு ட் என்னும் டகர ஒற்றை நீக்கி ஷ்  இட்டு வேறுவிதமாக வேறுபடுத்தினர்.   இதற்கு வடவொலி உதவியது என்னலாம்.  இதில் கருத்துவேற்றுமை இருக்கக்கூடும்.

அதிருஷ்டம் என்பதில்  அதி என்பது முன்னொட்டு.   திருஷ்டம் என்பது சொல். அதி திருஷ்டம்  வெகுவிளக்கமாக வந்த ஒரு இலாபம்  அல்லது  வரவு என்று  பொருளுரைக்க. நேரல் வழிகளில்  வாராதது என்று கூறினும் ஒக்கும்.  நேரல்வழி எனின் நேர்மை அல்லாத வழி.

தெருள் > தெருட்டம் என்பது இப்போது வழங்கவில்லை.  ( தெருட்டு+ அம்).  அம் விகுதி இணைக்க  தெருட்டம் என்பது  தானே போதரும் .  வேண்டின் மீளுருச்செய்க.

தெருள் என்ற சொல் பிற வட்டங்களில் வளம் சேர்த்தது காண்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது. 



செவ்வாய், 9 செப்டம்பர், 2025

சமரசம் - பல்நோக்குப் பொருண்மை

 சமரசம் என்ற சொல்லைத் தமிழிலிருந்து  ஆய்வு செய்வோம்.

சமரசம் என்பதற்குக் கூறப்படும் பொருள்களாவன:  1  ஒன்றிப்பு,  2 தொகையாக விருத்தல்  3  வேறுபடாமை  4  ஒற்றுமை 5 நடுநிலைமை  6 இணக்கப்போக்கு  என்று பலவாறு கூறலாம்.  இவற்றின்கண்  உள்ள சிறப்புப் பொருள் ஒவ்வொன்றும் இச்சொல்லைக் கையாள்கின்ற நுட்பமுறையால் வேறுபடக் கூடும்.

இதன் பகவுகள்  சமம் என்பதும்   இரசம் என்பதும்  என்றும்  சொல்வர்.  ஒரு பொருளிலிருந்து வெளிப்படும் சாறுதான்  ரசம் எனப்படுகிறது.  சுவை என்ற சொல்லைப் போலவே இரசம் என்னும் சொல்லும் திடப்பொருட் சுவை மட்டுமேயன்றி  மனம்சார் பண்பினால் ஏற்படும் சுவையையும்  காட்டற்கு அமையும் என்பதறிக.   

சமரசம் என்பதை  '' ஒத்த சாறுண்மை''  என்று  அல்லது  சாற்றொப்புமை என்று தனித்தமிழில் பெயர்த்துக் கூறலாம். இங்குத் திடப்பொருள்  சாராத மனப்பொருள் விளக்கத்திற்கு  சற்றொப்புமை என்பது பொருந்தவும் கூடும்.

இரசம் என்பது வடிகட்டி இறுத்து எடுக்கப்படும் நீர்ப்பொருள்  என்னலாம்.  இறுத்து அசைத்து எடுக்கப்படுவது என்பதே இதன் பொருள்.  இறு+ அசை+ அம்> இறசம் என்பதே  இரசம் என்றானது. இதனை அசைத்து இறுத்து என்று முறைமாற்றிக் கொள்க. றகரம் ரகரமாக மாற,  அசை என்பதிலுள்ள ஐகாரம் குறுகி  அகரமாகி,  சகர என்று நிற்க.  ச்+ அ > ச;  சொல்லானது  இற்+ அச் + அம் என்று புணர்ந்து,  இறசம்  ஆகி,  சொல்லாக்கத்தில் றகர வருக்கங்கள் ரகர வருக்கங்களாகி வருவன என்பதால்,  இரசம்  ஆனபின்  தலையிழந்து  ரசம் ஆயிற்று என்பதை  அறிந்துகொள்க.  இத்தலை இழப்பு,  அரங்கசாமி என்பது  ரங்கசாமி என்பதுபோல  ஆனதே ஆகும்.

சம இறசம்  என்பதே அன்றி  ,   சம அரசம் என்பதும்  இவ்வாறு கொள்ளத்தக்கது ஆகும்.  சமமான இரு அரசுகளின் ஒன்றுகூடுதலை  சமரசம் என்பதும் ஒக்குமென்க.  சம இரை, சம உரை என்பவற்றை எல்லாம்  இங்கனம்  பொருத்தலாம்.  இவற்றுக்கேற்ப விளக்கமும்  முன்வைக்கலாம்.

இரு அரசுகள் ஒத்த பலம் உடையவர்களாயின் இவ்விருவரிடையிலும் சண்டைகள் பெரும்பாலும் நிகழா என்பதை அறிக.  சண்டையிடுவது வெற்றிக்கு.  இல்லாமல் ஒழிவது திண்ணமாயின் அதற்குச் சண்டையிடாமல் ஒற்றுமை பேணுதலே சிறந்தது 

சமரசம் என்ற தமிழ்ச்சொல் பலநோக்குப் பொருண்மை உடைய சொல் என்பதை உணர்ந்து போற்றிக்கொள்க.

தமிழும் சமஸ்கிருதமும் இந்தியாவில் தோன்றி வளர்ந்த மொழிகள்  என்பதால் இவற்றில் இதை எதுவென்றாலும் ஒக்குமென்று முடிக்க.

இவற்றை வேறுபடுத்தியுரைப்பாரும் உளர்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை உடையது.