கடம்பர் யாரென்று தெரிந்துகொள்வோம்.
கடம்பர் என்போர் சங்க காலத்தில் வாழ்ந்த பழந்தமிழ்க் குடியினர். இதைத் தமிழ் இலக்கியங்களின் வாயிலாகத் தெரிந்துகொள்கிறோம். கடம்ப மரத்தின் பழங்களும் கடினமானவை. ஆனால் பழுத்தபின் உண்ணப்படுபவை ஆகும்.
கடு> கடம் > கடம்பு > கடம்பர் என்று வந்து இதைக் காவல்மரமாகப் பராமரித்து வந்த அந்த மக்களைக் குறிக்கும்.
அம். பு, அர் என்பன விகுதிகள்.
இம்மக்கள் தங்கள் வாழ்நாளில் கடினமான செயல்பாடுகளுடன் கடினமான பொருள்களையும் கையாண்டனர் என்பது கடம் என்ற முதற் பகவிலிருந்து நாம் அறிந்துகொள்வதாகும், கடம் என்பது கடந்து செயல்படும் கடின வாழ்வு என்று பொருள்படுகிறது. கடம் என்னும் சொல் வேங்கடம் என்ற சொல்லிலும் உள்ளது. வெப்ப மிகுதியும் நடந்து கடப்பதற்கும் கடுமை உடைய இடம் என்றும் அதற்குப் பொருள். இன்னும் இதுபோல் பல உள. சங்கடம் என்பது தாம் தாண்டிச் செல்லக் கடினமான நிலை என்று பொருள்படும்.. தங்கடம்> சங்கடம் என, இது திரிபு ஆகும். கடம்ப மரங்களைக் காவல் மரங்களாக வைத்திருந்தமையால் இம்மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள நாடொறும் முயற்சி மேற்கொள்ளவேண்டி யிருந்ததை பு என்ற விகுதி குறிப்பால் உணர்த்தும். வேறு சில சொற்களில் இவ்விகுதி வெறும் பொருளற்ற விகுதியாகவும் இருத்தலுண்டு, அர் என்பது பலர்பால் விகுதி.\
இம்மக்கள் பழங்காலத்தில் விளக்கவேண்டாத நிலையில் அவர்கள் வாழ்வு எத்தகையது என்று பிறமக்கள் அறிந்திருந்த ஒன்றாக இருந்திருக்கும். ஆனால் இற்றை நிலையில் நாம் அவர்களின் வாழ்வைச் சொல்லாய்வின் மூலம் சிறிது அறிந்துகொள்ளலாம். நாளடைவில் இவர்கள் வாழ்வு மாறியிருத்தல் இயல்பே. இப்பெயரும் புழக்கத்திலிருந்து குறைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை
பிற்காலத்து, மண்ணை இறுக்கிக் காயவைத்துப் பாத்திரங்கள் செய்வோரும் கடம்பர் எனப்பட்டனர் என்று முடித்தல் உண்மையோடு படுவதாகும்.
கடு அம்பு அர் என்று பிரிப்பின், பெரிதும் அம்பு விடுதல் முதலிய வேட்டைகளில் ஈடுபட்டிருந்தனர் என்றும் அறியலாம். அவர்களுக்குக் காவல் மரங்கள் பயன்பாட்டிலிருந்து கொடிய விலங்குகளை வீழ்த்திப் பிழைத்தனர் என்பதும் அறிக.
கடம்பு என்பது ஓர் இருபிறப்பிச் சொல்.( இருவேறு (வேறுபட்ட) சூழல்களுக்கும் சொல்லாக்கத்திற்கும் ஒப்ப இயலும் சொல் இருபிறப்பி ( அல்லது பல்பிறப்பி.)
இவர்கள் தமிழ் மன்னர்களின் குடிகளாக வாழ்ந்தவர்கள்.
கடம்பு என்பது கதம்பு என்றும் திரியும். கலவை குறிக்கும் கலம்பு என்பதும் இதிற் கலந்து, கதம்பம் என்பது கலவையைக் குறிக்கும். ( பூக்களின் கலவை)
கதம்பம் என்பது பல்பொருளொரு சொல்.
அம்மன் கடம்பவனப் பிரிய வாசினை எனப்படுவதால் ஆதியில் தேவியை வைத்து வணங்கியவர்கள் கடம்பவனத்தினரான கடம்பர்களே என்பது புலப்படும். தங்களைக் காப்பதற்கு அம்மனும் கடம்ப மரத்திற் தங்கினாள் என்று அவர்கள் பாராட்டினர், அது இன்றளவும் பாடப்படுகிறது.
துர்க்கா என்றால் எத்தடைகளையும் கடந்து துருவிச் சென்று - கா என்றால் காக்கும் அன்னை என்பதாம். துருவுதல்:: துரு = துர், கா - காப்பவள். என்று தமிழிற் பொருள்தரும். பிற மொழிகளில் வேறு விதமாகவும் பொருள்வரும்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.