சனி, 21 செப்டம்பர், 2024

சம்பல் சம்போ என்னும் சொற்கள்.

 இது ஒருவகைத் துவையலைக் குறிப்பதாகத் தற்கால அகராதிகள் சொல்கின்றன. சம் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களை அரைத்துச் சேர்த்துக் குழப்புதல். இது தம் என்ற பன்மைச் சொல்லின் வெளிப்பாடு. தம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட மனிதரைக் குறிக்கும். இது திரிந்து சம் ஆகி ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்சேர்க்கையைக் குறித்தது. பல் என்பது பல்பொருள் குறிப்பதாகவே இருத்தலால்,  சம் என்பது சேர்த்தல் என்று கொள்ளவேண்டும்.

இதன் ஆய்வினை மூலச்சொல்லிலிருந்து தொடர்ந்தால் இன்னும் பொருள் சிறக்கும்,  மூலச்சொல் ஆவது அண் என்பது,  அடுத்திருத்தல் என்பது அண் என்பதன் பொருள். அண் > சண் ,  எனவே  அடுத்தடுத்துச் சேர்த்தல் என்ற பொருள் வருகிறது.  பல் என்பது பல்பொருள் என்பதால் சண்பல் > சம்பல் என்று சொல்லும் பொருளும் பொருந்திவிடுகின்றன. சம்பல் என்பது திரிசொல் ஆகிறது.

சண்பு > சம்பு - இது இயல்பான திரிபே ஆகும்,

சம்பல் என்பது விலைமலிவையும் குறிப்பதாகச் சொல்வர்.  இப்பொருளில் இச்சொல் இதுகாலை வழங்கவில்லை,  ஆனால் இதை நாம் எளிதில் உணர முடிகிறது.  அதே பொருள் அடுத்தடுத்துச் சந்தைக்கு வருமானால் விலை வீழ்ந்து விடும், இதற்கும் பொருள் சரியாகவே உள்ளது.

சம்பு என்பது  அடுத்தடுத்து மக்கள் வணங்கும் தேவர்களாய் இருத்தலால், அவர்களுக்கும் இச்சொல் பொருந்துகிறது. ஒன்றன்பின் இன்னொரு தேவரை வணங்கத் தடை எதுவும் இருந்ததில்லை.  சிவன், விட்ணு, பிரமன் (பெருமான்), அருகன், சூரியன் ஆகியோர் இவ்வாறு வணங்கப் படும் தேவர்கள்  ஆவர்.

அண் என்ற மூலம்,  மக்கள் அடுத்துச் சென்று வணங்குதலையும் மற்றும் மக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வணங்குதலையும் ஒருங்கே குறிக்கவல்லது ஆகும்.  ஆகவே சம்போ (மகாதேவா) என்பது  மக்கள் அண்மிச்சென்று வணக்கம் செய்தற் குரிய தேவன் என்று பொருள்படும் சொல்லாகிறது.

இதுவே சொல்லலமைப்புப் பொருளாகும்.

அறிக மகிழ்க

மெய்ப்புபின்னர்.

Edited on 22092024 0559


வியாழன், 19 செப்டம்பர், 2024

விலைகள் விழ என்ன மார்க்கம்?

 கோடியிலே இருபத்தி ரெண்டுகோடி  யின்மிக்கார்

கோவிட்டின் வேலையின்றித் தவித்த  மக்கள்,

ஓடியோடித் தேடினாலும் வேலையொன்றும் எங்குமில்லை

உனைவேண்டாப் பூமியிதோ என்ன துன்பம்! 

கூடிநண்பர் தம்மோடு களித்திருப்போம் எனச்சென்றால்

நாடுமிடம் எங்கெனினும் நோயின் தொல்லை,

மாடுகட்கு வேலையுண்டு, மனிதனுக்கோ வேலையில்லை

மந்தநிலை பலருக்கும் ; ஓய்ந்த பூமி!


அந்தநிலை இந்தநேரம் இல்லைஎன்ற  போதினிலும்

அதன் தாக்கம் அங்குமிங்கும் இன்னும் உண்டு,

 வெந்தஉண   வின்விலைகள் ஏறியவை இறங்கிடுமோ

வீழ்ந்துமுன்னர் உலகமது போலும்  வருமோ?

எந்தஒரு காரணமோ சிந்திக்கும் போதினிலே

இருக்கிறவை அங்குமிங்கும் கிறுக்குப் போர்கள்!

சிந்தனையில் ஒன்றாகிச்  சேர்ந்துவாழ நாம்மனிதர்

சீர்பெறுவோம் என்றெண்ணில் துன்பம் ஏது?


திரம்பின்கா  லத்தில்போர் இல்லைஇப்  போது 

வரம்பிகந்து   செல்கின்  றது! 


பொருள்:

உலகில் 2 கோடிக்கு வேலை இல்லை என் கின்றது ஒரு கணக்கு.

 வரம்பிகந்து -  நிறுத்தும் எல்லை கடந்து

இதில் எளிய சொற்களையே பயன்படுத்தியுள்ளோம்.


அறிக மகிழக

மெய்ப்பு பின்னர்

Edited 22092024 0520

மோடியின் உதவிகள் - வாழ்த்து

 தேடியே   போய்உதவும் சீர்த்தகவர் மோடிவிசு

வாமித்தி ரர்வாழ்க நீடு.

இது மோடிஜி அவர்களுக்கு வாழ்த்துக்கூறும் ஒரு குறள்.

இதை இப்படிப் பிரித்து எழுதினாலும் யாப்பியல் பிழைபடாது.

தேடியே    போய்உதவும் சீர்த்தகவர் மோடிவிசு

வாமித் திரர்வாழ்க நீடு.

-----------------------------------------------------------------------------------------------------------------------

தேடிப்போய் வேண்டுவோருக்கு உதவுபவர் மோடி. அவர் வாழ்க என்பது இக்குறள்.

சீர்த்தகவர் = சீரான தகைமை அல்லது நற்பண்புகள் உள்ளவர்.

விசுவம் என்ற சமஸ்கிருதச் சொல்லும் விசும்பு என்ற தமிழ்ச்சொல்லும் ஒரே அடியில் தோன்றிய சொற்கள். இதை  இனி   ஓர் இடுகையி விளக்குவோம்.



பின்னுரை:

மோடி அவர்கள் தம் நீண்ட அரசியல் வாழ்வில் பலருக்கு உதவியாக இருந்து பல நன்மைகளைச் செய்திருக்கிறார்.  ஆனால் அரசியல் கட்சிகள் தேர்தலில் அவரை வெல்லும் பொருட்டுச் சிற்றூர் மக்களிடம் பல பொய்களைச் சொல்லியாவது அவரைத் தோற்கடித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி வேலைசெய்து வருவதுபோல் தெரிகிறது.  இந்திய  அரசியலில் வெளியார் தலையீடும் காணமுடிகிறது.

ஆங்கில மொழியறிவு இல்லாதவர்களை ஏமாற்றுவது அரசியலில் எளிதாக உள்ளது.  தமிழிலும் உண்மை கூறும் வெளியீடுகள் இல்லாமல் இல்லை.  ஆனால் நகரங்களிலிருந்து தொலைவில் உள்ளவர்கள் தமக்குக் கிடைக்கும் சில ஏடுகளையே அல்லது வாய்மொழித் தகவல்களையே நம்பி இருக்கிறார்கள். அவை பல சரியானவற்றை மக்களுக்குச் சொல்வதில்லை. இது காரணமாக இருக்கலாம்.

மோடிஜியின் முன்னோர்  யாரும் அரசியலில் இருந்தவர்கள் அல்லர். அவர் எந்த அரசியல் பின்புலமும் இல்லாதவர்.  நேர்மை இல்லையென்றால் இந்த அளவுக்கு வந்திருக்க இயலாது.

மோடிஜி அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள். வாய்மையே வெல்லும்.

அவர் விசுவாமித்திர முனிவரின் மறுவரவு.

நன்மைஒன்றே மோடிக்குண்   டாகத் தொழுவோமே

உண்மைஒன்றே செல்கமக்கள் பால்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்