ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

அங்கி என்னும் உடை

 அங்கி என்பதன் ஆய்வும் முடிபும் வருமாறு:

இச்சொல்லில் பகவுகள் அண், கு, இ  என்பன.

அண் என்பது உடை உடலை அடுத்து நின்று மறைப்புச் செய்வதைக் காட்டுகிறது.   இதனை அணிதல் என்ற சொல்லின் பகவுகளுடன்  ஒப்பிட்டு அறிந்துகொள்வீர்.  அண் + இ > அணி.  அணி-  அணி-தல்.

அங்கு எனபதைப் பார்ப்போம்: 

கு என்பது  அண்'ணை   அடுத்து நிற்கும் பகவு.

அண்+ கு > அங்கு. 

சொல்லமைப்பில் இவ்வாறு வரும்.

இதைப்  பணி என்ற சொல்லையும் பாங்கி என்ற சொல்லையும் அவிழ்த்து அறிந்துகொள்க.

பண் > பணி.

பண்ணிலிருந்து வரும் பணி என்ற சொல் வேலையைக் குறிப்பதற்குக் காரணியாவது யாதெனின், முன்னர் பணி என்பது பாணர்களின் வேலையாய் இருந்தது. பாடப் போகிறேன் என்பதற்குப் பணிக்குப் போகிறேன் என்னும் போது பணி என்பதற்கு வேலை என்பது பொருளாகிவிடுகிறது.  பாங்கி என்னும் சொல்லும் பண்> பாண் +கு+ இ>  பாங்கி ஆகிவிடும்,

இப்போது அண்+கு:

அண்+ கு+ இ >  அங்கி  ஆகி ஆடையைக் குறிக்கும்.

அண் = அடு,   அண்முதல் ,  அடுத்தல்.

அடு>  ஆடை.  முதனிலை நீண்டு வந்த தொழிற்பெயர்.

அடு > சடு> சடு+ ஐ >  சட்டை

தாள் அடுக்கிச் செய்வது அட்டை,   இது:  அடு>  அடு+ ஐ> அட்டை.

விகாரங்களில், இது தோன்றல் விகாரம் வந்த சொல்லமைப்பு.  அடு என்பதில் உ கெட்டது  ட் இரட்டித்தது,  அழகான அட்டை வந்தது,   அடுக்குதல் அடுத்தல் இரண்டுக்கும் மூலம் அடு என்பதுதான்,

இது பற்றிக் கூறும் பழைய இடுகைகளையும் படித்தறிக.

அங்கி அறிந்தீர். 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்


சனி, 14 செப்டம்பர், 2024

உவச்சன் என்ற சொல்.

 இன்று உவச்சன் என்ற சொல்லை ஆய்வு செய்வோம். வேறு அன்பர்கள் யாரும் விளக்கியுள்ளனரா என்று இன்னும் தெரிந்துகொள்ளவில்லை. இதை முடித்தபின் நாளைக்குத் தேடிப்பார்ப்போம். எம் கருத்துகளை முன் வைப்பதே நம் வலைப்பதிவின் நோக்கம்.

உ என்பது சுட்டடிச் சொல்.  . இதைத் தெரிந்துகொள்ள ஒரு நிகண்டையோ அகராதியையோ நீங்கள் நாடுதல் நன்று.  உ என்பது  முன்னிருப்பது என்று பொருள்படும் பண்டைப் பழஞ்சொல்.  தமிழ்ப் பழம்புலவர்கள் இதனைச் சுட்டடிச் சொல் என்றனர்.  எளிதாக அறிய, உன் என்ற சொல்லைப் பாருங்கள். உன் முன்னிருத்தலை ( முன் இருப்போனுக்கு உரியதை) க் குறிக்கும்.  

அடுத்து இருக்கும் பகவு, ( உவச்சன்) என்ற சொல்லில்),  அச்சன் என்ற சொல். இது அய்யன் (  ஐயன்)  என்ற  சொல்லின் திரிபு.  அய்யன்> அச்சன்.  எப்படி என்றால்,  வாயில் > வாசல் என்பதில்  யகரம் சகரம் ஆனது; மற்று இ (யி) என்பதும் அ ( ச)  ஆயிற்று.   அயல் என்பதும் அசல் என்பதன் திரிபே. இன்னொன்று: பயங்க> பசங்க என்று பேச்சில் வரும்.  வயம்> வசம். தமிழில் போதுமான அளவு பற்பல நூல்களையும் வாசித்தவர்க்கு இது காண அகராதி தேவையில்லை.

அச்சன் என்பதும் அய்யன் என்பதும் ஒன்றே.  அச்சன் என்பது திரிபு.

  ஐயன் என்பது பல்பொருளது. என்றாலும் அதன் மையக் குறிப்பு, முன்னிருப்பவர், தந்தை, தமையன் எனவாம்.

உ+ அச்சன் > உவச்சன்.  இங்கு வகர உடம்படு மெய் வந்தது.

உ+ ஐயன்> (உவை(ய்)யன்) > உவைச்சன் > உவச்சன் என்று காட்டினாலும் ஒன்றுதான்.

இது கல்வெட்டிலும் கண்டுபிடிக்கப் பட்டுள்ள சொல்தான்.

உவச்சர் எனில் பூசையின்போது முன்னிருந்து ஓதி உதவுவோர்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

    

வெள்ளி, 13 செப்டம்பர், 2024

மீசுரம் என்ற திரிபு

 இதில் மீசுரம் என்ற திரிபின் வருகையை அறிவோம்.

மிகு + உரு + அம் >   மீகுரம்.

இதன் சொல்லமைப்புப் பொருள் மிகப்பெரிய உருவத்தை உடையது என்பதுதான்.

இங்கு  மீகுரம் என்பது மீசுரம் என்று மாற்றமடையும்.

மி என்பது மீ என்று நீள்வதும் இயல்பான திரிபுதான்.

மிகு+ து >  மீது.  ஒ நோ:  பகு தி >  பா தி.  ( பாதி)

இது சொல்லிடையிலும் வரும்  முதலிலும் வரும்.

பிற மொழித் திரிபுகளை அவ்வந் நூல்களில் கண்டுகொள்க.

சேரலம் >  கேரளம்.

ஐரோப்பியத் திரிபுகளில் ch > k  ஒலிமாறும்

மிகு உரு அம் என்பதே  மீகுரம் > மீசுரம் ஆனது.

பொருந்தும் பொருண்மை பெற்றுலவும் இச்சொல்.  தெலுங்கில் மேலானது என்று பொருளாம்.

இதை மிசை+ உரு +அம் என்றும் விளக்கலாம். மீசரம் என்பதும் திரிபே.  உகரம் அகரமானது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்