சிங்கத்தின் பெயர்கொண்டு சீர்பலவும் பெற்று
சீர்மிக்க நடைபோடும் சிங்கப்பூர் நாடு
தங்கத்தின் ஒளிபெற்றுத் தகைமேலும் உற்று
தணிவற்ற செழிப்புற்றுத் தாரணிமேல் ஓங்கி
எங்கணுமே யாவருமே போற்றுநகர் ஆகி
இப்புவியில் எவ்வளமும் இயன்றோங்க வாழ்க.
ஒன்பதுடன் ஐம்பதுசேர் அகவைத்தே சிங்கை
ஒப்பில்லா உடல்நலமே உயர்மக்கள் பெற்றே
அன்பினிலே இணைந்தோராய் அகிலத்தார் ஏற்றி
ஆதரவால் பிணைப்போடும் ஆம்தனையும் வாழப்
பண்புடனே பல்லாண்டு பகர்கின்றோம் செல்வப்
பயன்சிறந்த தேசியநாள் பார்புகழ வாழ்க.
பொருள் :
சீர்பலவும். காண்பொருள், காணாப்பொருள் ஆகிய பல்பொருள். இலாபம் என்பது வடிவம் இல்லாத பொருள். எண்ணிக்கையில் அறிவன. வீடுகள் வண்டிகள் என்பவை காண்பொருள்.
சீர்மிக்க நடை - இது அரசு இயக்கம், மக்கள் தொடர்பு என்பன போல் பிறவும் இவை இயங்குதல்.
தணிவற்ற செழிப்பு - பணவரவு, மற்ற பொருள் உணவுகள் வரவு.
ஆதரவு - பிறர் தரும் அரவணைப்பு
வளம் என்பது நன்மைகளின் மிகுதி
அகவை நாட்டின் அகவை அல்லது வயது
செல்வப் பயன் - செல்வம் வரவேண்டும். அது வீண்படாமல் பயனும் வரவேண்டும்.
மெய்ப்பு: 07082024 0637