சுக்தம் என்ற சொல் எவ்வாறு அமைந்தது என்பதைக் காண்போம்.
இதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகள் காட்டப்படலாம். ஆதலின் இது ஒரு பல்பிறப்பிச் சொல் என்பதை மனத்தி லிருத்திக்கொண்டு, இதற்குத் தமிழிலிருந்து பொருள் கண்டுரைப்போம்.
சொக்குதல் என்பது ஒரு தமிழ்ச்சொல். அது இன்றுவரை நம்மிடம் உள்ளது. இச்சொல் " சொக்கன்" என்று அமைந்து சிவபெருமானைக் குறிக்கும். சிவபெருமான் பற்றருக்கு ( பக்தருக்கு) அவர்பால் மயங்கும்படியான ஏக்கத்தைத் தரவல்ல கடவுள் ஆவார். சிவன் ஆதிக்கடவுள் என்றும் கூறுவர். முழுமுதற் கடவுள் என்றும் கூறுவர். அவரைத் தொழுதலானது பற்றனொருவன் அவர்பால் வீழ்ச்சி பெறும் மயக்கினை அளிக்கவல்லது என்பர். அங்கிங்கெனாத படி எங்கும் பிரகாசமாய் இருப்பவர். தாயுமானவர் அவரைப் பரிபூரணானந்தம் என்பார் [.மயங்குதல். To be enchanted, fascinated, captivated, subjected to the will of another ( இங்குக் கடவுள் என்று பொருள் கொள்க).]
வேதத்தின் சொற்களுக்கும் இவ்வாறு மயக்குறுத்தும் வலிமை உண்டு என்பர். எனவே சொக்குதல் என்ற சொல்லினின்று சுக்தம் பெறப்பட்டிருத்தலும் மிக்க உயர்ந்த நிலைக்கு ஒரு மேடை அமைத்துத் தந்தது போலாம் என்பது தெளிவு.
மேலும் சொ என்ற எழுத்தும் சு என்று திரியவல்லது என்பது முன்னர் விளக்கப்பட்டுள்ளது. இதற்கு நல்ல எடுத்துக் காட்டு: சொந்தம்> சொதந்திரம்> சுதந்திரம் எனக் காண்க. சொந்தத் திறனைக் கொண்டுஒரு நாட்டை ஆளுதல் என்பதே இது.
சொக்கு + தம்< (சொக்கு+ து + அம் ) > சொக் +த்+ அம் > சுக்தம். இவ்வாறு வேதப்பாடலைக் குறிக்கவல்லது இந்தச் சொல்.
சொல்+ கு + தம் > சொற்கு தம்> > சுக்தம் எனினும் ஆகும். பற்றனின் ஒவ்வொரு வேண்டுதலுக்கும் செவிசாய்க்கும் பாடல்கள் என்று குறிக்க.
இவ்வாறு தமிழிலிருந்து பொருள் அறிய, இனிய பொருள் கிட்டுகிறது.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.