வியாழன், 11 ஜூலை, 2024

துல் தல் அடிச்சொற்கள் பொருண்மை--- தலை என்பது என்ன?

வருதல், போதல் என்பவைபோல் வினைச்சொற்களுடன் கூடி, தல் என்பது வினைச்சொல்லின் விளைந்த பெயர்களைக் குறிக்க  ஆளப்பெறுகின்றது. இதிலிருந்து மண்டையைக் குறிக்கும் தலை என்ற சொல்லும் ஏற்பட்டுள்ளது. ஆகவே இப்பெயர் எப்படி வந்தது என்று அறியவேண்டியுள்ளது. 

தலை என்ற உறுப்பையும் குறிக்கும் சொல்லுக்கு எது மூலச்சொல் என்று இன்று அறிந்துகொள்வோம். இதற்கு வேறு பொருண்மைகளும்  பயன்பாடுகளும் உள்ளன என்பது நீங்கள் அறிந்ததே. இச்சொல்லிலிருந்து பிற சொற்களும் தோன்றியுள்ளன. எ-டு: தலையாரி, தலைச்சன்(பிள்ளை)  என்பவைபோல,  இவையும் நீங்கள் அறிந்துவைத்துள்ளவைதாம்.

சுட்டடிச் சொல் அமைப்பின்படி, தல் என்பது தலை என்பதன் அடிச்சொல். அடிச்சொல்லுக்கு ஒரு மூலம் இருக்கவேண்டும், இந்த மூலமான சொல்: துல் என்பதுதான்.

துல் என்ற அடிக்கு என்ன பொருள் என்பதை அறியவேண்டும். இதன் பொருளாவன:

சரியானது;  ஒப்புமை, எதிர், திட்டமுள்ளது, குறையில்லாதது; மறைப்பு இல்லாமை; தடையில்லாமை; இடமாய் இருப்பது அல்லது இருக்க இடம்தருவது; இணைப்பொருள்: உள்ளடங்காமல் தள்ளி இருப்பது,    முழுமை அல்லது எல்லாம் அடங்கியிருப்பது .

எல்லாம் இங்கு சொல்லிவிடவில்லை. இங்கு அகப்பட்டுச் சொல்லப்படாத பொருட்சாயல்களும் இருக்குமென்று கொள்க.

துல் என்ற அடியிலிருந்தே தல் என்பது ஏற்பட்டது.  ஆகவே வருதல் போதல் என்பன போலும் சொற்களில் இவற்றுள் ஒன்றில் உடன்பட்டுப் பொருள்தரும் விகுதியாகும்.  

இனி, து + அல் > தல் என்பதை உணர்ந்து,  இதுவே  (தல் ) உண்மையாகும், அல்லாதவை இதில் அடங்கா என்ற பொருளும் பெறப்படும்.  எனவே, அடங்கியவை, அடங்காதவை என இருபாற்கும் தல் என்பது பொதுவாகும் என்பதையும் அறிக.

காட்டாக,  தலைவன் என்ற சொல்லில் தொண்டன் உள்ளடங்கமாட்டான். அவன் அடங்கினானாகில் தலைமை என்பது ஏற்கப்படாமல் முடியும். அதுதான் சரியென்றாலும்,  தொண்டன் இல்லாமல் தலைவன் இல்லை என்பதும் உண்மை. ஆகவே, அடிச்சொல்லில் இடம் நோக்கியே தல், தலை என்பதற்கும் பொருள் இணங்குறுமாறு எடுத்துக் கொள்ளவேண்டும்.  முன் பொருள் துல்> தல் என்ற திரிபிலும் பின் பொருள் து+ அல் என்ற திரிபிலும் அல்லது திரிபமைதியிலும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு நோக்கிப் பகுத்தறிகையில்,  தல் > தலை என்பதன் பொருள் தெரிகிறது.  தலை என்றால் யாவரும் அறிய வெளியில் அறியப்பட்டு, உள்ளிலும் கீழிலும் அடங்காதது என்று பொருள். இது மனிதன் தலைக்கும் என்றும் தலைமை(த் தன்மை)க்கும்  பொருந்திவரும் என்பது அறிக. இச்சொல்லின் நுண்பொருள் தெளிவானது என்று அறிக.

ஆகவே தலை என்ற சொல்லும் தல் என்ற இடைச்சொல்லும் ஒருசேர உணர்விக்கப்பட்டன. ஆனால் புரிதல் மெதுவாக வரும் . இதைப் பலமுறை படித்தறியவேண்டும். அதுவும் வெவ்வேறு வேளைகளில் சென்றறிக.

தலை

இயல்பு நிலையில் மறைப்பு இல்லாத இடத்திலமைந்த உறுப்பு என்று இதை வரையறை ( define ) செய்தால் பொருண்மை வெளிப்படும். திருடனோ தூங்குபவனோ, குடைபிடிப்பவனோ  மறைத்துக்கொள்வான், ஆனால் இயல்பு நிலையில் மறைப்பில்லாத உறுப்பு என்பது பொருள்.  மறைப்பில்லாத, யாவரும் அறிந்த இடமும் தலை எனப்படும். எடுத்துக்காட்டு: தலையாலங்கானம்.  தலைச்சங்கோடு. குளித்தலை.

ஐ விகுதி உயர்வுப் பொருளது. தலைக்குப் பொருந்துவது ஆகும். தல் + ஐ > தலை  ஆதல்  காண்க.  ஐ மேலிருப்பதையும் உணர்த்தும்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின். 


செவ்வாய், 9 ஜூலை, 2024

சத்திரம். சாவடி

 இந்த இரு சொற்களையும் நுணுகி ஆராய்வோம்.

சத்திரம் எனற்  பால சொல்லில் மூன்று பகுதிகள் : அவை சற்று,  இரு, அம். அமைப்பு குறிக்கும் விகுதி தான் அம் என்பது.  விகுதி  என்றால் சொல்லின் மிகுதியாய் நின்று சொல்லைப் பிறப்பிப்பது.

சற்று என்பது எழுத்து மொழியில் மட்டும் உள்ள வடிவம். இது சத்து என்றுதான் பேச்சில் வரும். இதன் மூலம் சல் என்பதே.இதன் பொருள் தேர்ந்தெடுத்த இடம் என்பது. கொஞ்ச நேரத்துக்கு என்றும் பொருத்தமான பொருளைத் தருகிறது. நேரம் இடம் இரண்டுக்கும் பொதுவான சொல் இதுவாகும். சலித்தல் என்பது சல் என்பதினின்றும் கிடைக்கும் சொல்லாதலால்  பொறுக்கி எடுத்த ஓர் இடத்தில் தங்குவது என்று பொருளாகிறது.

சத்து இரு அம் >  சத்திரு அம் > சத்திரம்.

இரு அம் என்பது இரம் என்று வருதலில் ருகரத்தில் உள்ள உகரம் ஒழிந்தது. ( கெட்டது )

பல் + து > பற்று >  பத்து.  ( இது பத்து என்ற எண்ணிக்கை. )  இதிலும் பற்று என்று வராமல் சொல்லாக்கத்தில் பத்து என்றே வந்தது.  சொல்லாக்கப் புணர்ச்சியில் இவ்வாறு வருதல் பெருவழக்கு ஆகும்.

பத்து என்ற எண்ணுக்குப் பெயருண்டாக்கிய போது, பல் து என்றிரண்டையும் சேர்த்துப் பெயரமைத்தனர். அதாவது எண்ணிக்கையில் பலவானது என்பதே பொருள்.

இனிச் சாவடி என்ற சொல்:

இது கல்வெட்டில் உசாவடி என்று காணப்பெறுகிறது.  ஆகவே சாவடி என்பது  உசாவு அடி என்பதில் உகரம் குன்றிய சொல்லாகும்.  உசா வி அறிவதற்கு அடுத்திருக்கும் கூடாரம் என்பது பொருள்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்.




திங்கள், 8 ஜூலை, 2024

சல்லுதல் என்ற வினைச்சொல்.

 சல்லுதல் என்ற வினைச்சொல் ,  அதாவது சல்லு என்ற ஏவல்வினை, இப்போது வழக்கில் இருப்பதாகத் தெரியவில்லை.  அந்தப் பாத்திரத்து நீரைக் கொஞ்சம் எங்கும் சல்லிவிடு என்று சொல்லிக் கேட்கவில்லை.  இப்போது ஆங்கிலக் கல்வி மிகுந்துவிட்ட படியால், பலரும் தெளிப்பதை ஆங்கிலத்தில் "ஸ்பிங்கில்"  என்றுதான் சொல்கிறார்கள்.

பல சிறு துளைகள் உள்ள தூவு துளைத்தட்டினைக் கொண்டு தூளாய் உள்ள தானியம் எதையும் மாவு வேறாகவும் சற்றுப் பெரிய துண்டுகள் வேறாகவும் பிரிக்கச் சலித்தல் என்று சொல்கிறோம்.  சல் ( வினைச்சொல்) அப்போது சலி என்று மாறுவதை அறியலாகும்.  இது தமிழில் சொல்லமைபிற்கு உடன்பாடான திரிபுதான்,  அடு> அடி என்று மாறுவதைப் போன்ற திரிபுதான் இது.  நாம் ஆராய்தறிந்த விதிகட்கு இயைந்த திரிபு என்பதில் தெளிவுள்ளது. அடுத்துச் சென்றாலே அடித்தல் இயலும்.  நிலத்தைக் கால்கள் அடுத்தாலே அடி என்பதை வைக்கமுடிகிறது. இதை விளக்கும் பொருட்டு இங்குச் சற்று விரித்தோம்.

சல்லடை என்பது சல்லும் துணைக்கருவி ஆகும்.   சல்லும் துளைகள் அடைவாக இருத்தலான் அது சல்லடை எனப்பட்டது,  ஆதலின் சல் என்ற வினைச்சொல் முற்றும் தொலைந்துவிடவில்லை. இன்னுமிருப்பதும்  உள்ளாய்வதற்கு வசதி தருவதும் நம் நற்பேறுதான்.

சல்லடை என்பது  கல்லடை என்று திரிந்திருப்பதால்  சகர ககர மாற்றீடு மீண்டும் மேல்வரக் காண்கின்றோம்.  இதைச் சேரலம் - கேரளம் என்ற திரிபில் கண்டிருக்கிறோம். இவ்வாறு திரிதலுற்றவை பலவாகும்.

சல்லு என்பதன் மூல அடி துல்  ஆகும். அதை இங்கு யாம் விளக்கவில்லை. 

இயன்ற அளவு தமிழில் உள்ள வினைச்சொற்களைப் பயன்படுத்துங்கள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்