திங்கள், 17 ஜூன், 2024

பலபெயர்கள் உள்ள அசுரர்கள் அவற்றுள் தயித்தியர்.

 இன்று இதுபற்றிச் சில அறிந்துகொள்வோம்.

அசுரர்களுக்குப் பண்டைக்காலத்தில் பல பெயர்கள் இலக்கியங்களில் வழங்கின. அதில் தயித்தியர் என்பதும் ஒன்று.

தைத்தல் என்பது நீங்கள் அறிந்த சொல்தான். ஒன்றைத் தைத்தல் என்றால் இரு துண்டுகளை இணைத்து ஒன்றாக்குதல்.  வினைச்சொல் தைத்தல் தான்.

தை+ இற்று + இ + அர்

> தையிற்றியர்

> தயித்தியர்  ஆகும்.

ற்று என்று ஈரெழுத்துக்கள் இரட்டிவரும் சொற்கள், த்து என்று திரியும்  எடுத்துக்காட்டு:  சிற்றம்பலம் > சித்தம்பரம் > சிதம்பரம்.

றகர இரட்டிப்பு  த்த என்றானதும்

லகரம் ரகரம் ஆனதும் காண்க.

தை இற்றவர்கள் தை இத்தவர்கள்  தயித்தவர்.  இறு> இற்று > இற்ற> இத்த. எச்சவினைத் திரிபு,

அசுரர்கள் என்போர் சுரர்கள் என்போருடன் இணையாது பிரிந்திருந்தவர்கள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

சனி, 15 ஜூன், 2024

இலச்சை, தலக்கு என்ற சொற்கள். ( லஜ்ஜை)

 பெண்ணுக்கு முன்னெப்போதும் அடுத்துவராத ஆண்மகன் ஒருவன் அடுத்துவர நேர்ந்தால் .  நாணம் அல்லது வெட்கம் ஏற்படுகிறது.  இது அடுத்தவருதல் முன் நடவாமையினால்தான்.

அடுத்து வருதல் என்பதைக் காட்டுவது  அடுச்சை  என்ற சொல் அடுச்சை என்றால் அடுத்தலின் காரணமாக எழுகின்ற எதிர்நிகழ்வு.

அடுச்சை என்ற சொல் இடைக்குறைந்து  அச்சை என்றாகும்.  சில இடைக்குறைகள்  இப்போது முழுச்சொற்கள்போல் மொழியில் உலவுகின்றன. இதற்குக் காரணம்,  இடைக்குறை வல்லொலி இழந்து சொல்ல எளிதாக அமைந்தமைதான். இவ்வாறு வந்த சொற்களை அவ்வப்போது நம் இடுகைகளில் காட்டியுள்ளோம்.

இலச்சை என்பது இல் அச்சை.  இல் என்பது இடம்.  அச்சை என்பது அதை அடுத்துத் தொடுவதால் ஏற்படும் மறுப்புச்செயலும் அதற்குரிய மனவுணர்வும்.

இல்+ அச்சை > இலச்சை.

முதல்முறை என்பது தலை என்ற சொல்லாலும் குறிக்கப்பெறும்.  அ என்றால் அங்கு,  கு வந்து சேர்தல்.  முதல்முறையாக வந்து சேர்ந்தவன் இவ்வாறு எதிர்நிகழ்வைப் பெண்ணிடம் ஏற்படுத்துவான்.  அதனால்  தலை+ அ + கு>  தலையக்கு> தலக்கு என்ற சொல்லும் ஏற்பட்டுள்ளது.

தலக்கு என்பது தலக்கம் என்றும் வரும்.

இலச்சை, தலக்கு என்பனவின் அமைப்பு அறிக.

மெய்ப்பு பின்னர்

ஹாங்காங் கடற்கரை ஓரம்

 ஆங்காங்  கடற்கரை  ஓரம் ---- அங்கே

அமர்ந்து நலம்பல  பேசிடலாம்

ஓங்கும் இயற்கையின் சூழல் ----மலை

உச்சிக்  குளிர்ச்சியைப்  பழித்திடுமே


சில்லெனும் மெல்லிய தென்றல் --- இது

சீன மாநிலத்  தேன் தடவல்

வல்லென வந்தவை  எல்லாம்  ---- இங்கு

வழிந்து தொலைந்திட வான்மகிழும்.


உடுக்கள் சிமிட்டிடும்  கண்கள் ---- கடற்

குரிய அன்பகம் உய்த்தனவே,

படுக்கை தலையணை வைத்து ---  இராப்

பண்ணொடு தூங்கிடப்   பயன்தருமோ?

 படத்தில் :  அம்மாவும் மகளும்.

சூழல்  -  சுற்றுச்சார்பு.

வல்லென -  சற்றுக் கடினமாக

அன்பகம்  --  பாச உள்ளம்

இராப் பண் - இரவு நேரப் பாடல்

தூற்றல், கடுகி வீசும் காற்று முதலியன இல்லாமையினால் வானும் மகிழ்ந்தது என்பதறிக.

ஹாங்காங்க் என்பதை ஆங்காங்கு என்றே மாற்றுருவாக்கி யுள்ளோம்.  இது ஆங்கு+ ஆங்கு என்று வந்து பிற இடங்களையும் குறிக்கும் இரட்டுறலாகவும் வரும்.

இறுதிவினா:  கொஞ்சம் தூங்கிக்கொள்ள இடம் கிடைக்குமோ என்ற எண்ணம்.