செவ்வாய், 4 ஜூன், 2024

செய்வினை உலக வழக்கு.

இப்போது செய்வினை, செய்வித்தல், செபித்தல் முதலிய சொற்களை ஆய்வு செய்வோம்.

ஆக்கம்  என்பது  அவலம் எனனும் சொல்லுகு எதிர்ச்சொல் போல் பாவிக்கப்பட்டுள்ளது. நாம் செய்யும் எதுவும் பாதியில் நின்றுவிடாமல் முடிந்து பயன் தருவதாக இருக்கவேண்டும்.  செய்வினை முற்றாமல் ஆண்டு ஓர் அவலம் படுதலும் உண்டு என்று கலித்தொகை கூறியுள்ளது. 

செவ்விய தீவிய சொல்லி, அவற்றொடு
பைய முயங்கிய அஞ்ஞான்று, அவை எல்லாம்
பொய் ஆதல் யான் யாங்கு அறிகோ, மற்று? - ஐய! -
அகல் நகர் கொள்ளா அலர் தலைத் தந்து,
பகல் முனி வெஞ்சுரம் உள்ளல் அறிந்தேன்;
மகன் அல்லை மன்ற, இனி;

செல் இனிச் சென்று நீ செய்யும் வினை முற்ற,
அன்பு அற மாறி, 'யாம் உள்ளத் துறந்தவள்
பண்பும் அறிதிரோ' என்று, வருவாரை

என் திறம் யாதும் வினவல்; வினவின், 
பகலின் விளங்கு நின் செம்மல் சிதைய,
தவல் அருஞ் செய் வினை முற்றாமல், ஆண்டு ஓர்
அவலம் படுதலும் உண்டு.  

இது கலித்தொகையில் 19 ம்  பாடல்.  நாம் செய்துகொண்டிருக்கும் எதுவும் பாதியில் நின்று தடைப்பட்டு விட்டால் அதுதான் அவலம் என்று இப்பாடல் கூறுகிறது.  செய்வதை முற்றாக முடிக்க ஒரு திறமை தேவைப்படுகிறது.  இது " என் திறம் ( திறமை ) என்ன என்று கேட்காதீர்!" என்கின்றது.  அவலமாவது வலிமை அற்ற தன்மை. முடிக்கவும் ஒரு திறமை வேண்டும்.  அவலம்:  வலம் அல்லாத நிலைமை.  அ - அல்லாதது;  வலம் - வல் அம் - வலிமை நிலை.  இது நாம் செய்யும் எதிலும் ஏற்படுதல் கூடும்.  செய்யும் வினை முற்ற(வேண்டும்) என்பதும் கூறப்படுகிறது.

தானே ஒன்றைச் செய்தலும் செய்வினை எனப்படும். " ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை"  என்று தன் செயலால் ஏற்படும் எதையும் செய்வினை என்றும் குறள் கூறுகிறது.

ஆனால்  பேச்சு வழக்கில் செய்வினை என்று பிறர் கெட்டுப்போக மந்திரம் செய்வது, மற்றும் பில்லி சூனியம் வைப்பதையும் குறிக்கும்

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்



திங்கள், 3 ஜூன், 2024

மோடி முனிவர்க்கு வாழ்த்துக்கள் Rajarishi Modi

 இந்தக் கவிதை யாம் மோடிஜி அவர்களைப் பற்றி எழுதியது. இதை எழுதியபின் எம் மடிக்கணினியின் காட்சிமேடையில்(desktop) சேமித்து வைத்திருந்தோம்.. திடீரென்று காணாமற் போய்விட்டது. சேமித்தவை பலவற்றைத் திறந்து பார்த்தும் கிட்டவில்லை.  அப்புறம் கணினியின் தள்ளுக்கூடையில் ( recycle bin) தேடிப் பார்க்கவே, எழுத்துக்கள் எல்லாம் கசடுற்று  (gibberish) ஓர் ஆவணம் இருந்தது.  இதுவாகத் தானிருக்கும் என்று அதை மாற்றுரு உறுத்தியின் மூலம் மீட்டெடுக்க முயன்ற போது இயலவில்லை. மடிக்கணினியை மூடிவிட்டு துர்க்கை அம்மனிடம் வேண்டிக்கொண்டு படுத்து உறங்கி விட்டோம். மீண்டும் இன்று காலை திறந்து பார்த்தோம். மீண்டும் பழையபடி அங்குத் தோன்றியது. கசடுறைவுகள்  (gibberish) நீங்கிவிட்டிருந்தன.

அம்மனுக்கு நன்றி நவின்று அதை இங்கு மீள்படைப்புச் செய்கின்றோம்.


விசுவா மித்திர  மேதை மோடியின்

விவேகா நந்தரைப் போற்றிடு உளத்தால்

சிவாய என்றதும் செய்பவை முடிப்பார்

தவாநல் முன்னவர் தகவுறுத் தினர்காண்.


இவர்:


இராமரைப் போற்றுவார் இராமகி  ருட்டினர்

அறாத்தொடர் புடைய ஆத்தும  ஞானியர்

சிறார்சிசு கொஞ்சுவர். சீர்பல நயந்தே

தராதன தந்தவர் தகைமை சான்றவர்.


அவாய்நிற் பனவே அடைந்தன முழுமை

உவாமதிப் பூரணம்  ஓங்குக உலகில்;

சிவாஏசு  அல்லா சேர்அருள்  மண்டும்

நவைதீர் நலம்கூர் பாரினில் பரதம்.


மோடி  முனிவர் சூடும் வெற்றியால்

வாடா ஞாலமும் வகைநலம் காண்க.

மேடுபள் ளங்கள்  பரதகு  முகமே

வீடுற்  றுயர்ந்து  வேண்டுவ வெல்கவே.


ராசரி    சியாக   மறுவர வோங்கிய

மாசறு காட்சி  மன்னவர் மோடி

ஏசறு  நற்பயன் யாவினும் வென்ற

பாசறு மாட்சிப் பண்ணுறு மோலோர்.


அருஞ்சொற்கள்:

விசுவாமித்திரர் - உலக நண்பர் முனிவர்

தவா - தவறாத

அவாய் நிற்பன - முடியாது நிற்பவை

தகவு உறுத்தினர் - நேர்மை உணர்த்தியவர்

அறாத்தொடர்பு -  முடிந்துவிடாத தொடர் உறவு

வீடு - விட்டுவிடுதல்

வேண்டுவ - வேண்டியவை

ராசரிசியாக - இராஜ ரிஷியாக

மறுவர வோங்கிய - மறுபிறவி கொண்ட

பரத குமுகமே -  பாரத சமுதாயமே

வென்ற - பெற்றுவிட்ட

ஏசறு -  குற்றமற்ற

பாசறு - இலாபம் அடையும் சிந்தனைகள் இல்லாத


மோடிஜி வாழ்க

   


சனி, 1 ஜூன், 2024

மண்திறம் உரைக்கும் மந்திரி.

இவ்வினிய வேளையில் மந்திரி  என்ற சொல்லின் திறமறிதல் இனிதாகும். இச்சொல் தமிழில் நீண்ட காலமாக வழங்கி வருகிறது. இது தமிழில் தோன்றிப் பிற உடன்பிறப்பு மொழிகளில் விரவிய சொல்லாகவும் இருக்கலாம்; அல்லது அங்கொரு மொழியிற் கிளைத்தெழுந்து தமிழிலும் திறம்பெற்ற சொல்லாகவும் இருக்கலாம். நாம் ஆராயப் புகுமுன் எதுவாக இஃது  இருக்குமோவென்பதே சரியான கேள்வி ஆகும்.  ஆராய்ந்தபின் ஆய்வுக்கு ஏற்ற வாறு  நம் முடிவு இருக்கவேண்டும். ஆய்வு செய்யுமுன் ஒன்றை முடிபுகொள்ளல் வழுவாகும். தமிழருக்கும் ஏனை இந்தியருக்கும் மலாய்மொழியினருக்கும் உள்ள நீண்டகால உறவின் விளைவாக அம்மொழியிலும் இச்சொல் வழங்கிவருகிறது.,  Menteri Kewangan என்றால் நிதியமைச்சர். இங்கு Menteri என்ற சொல் அவ்வாறே ஆளப்பெறுகிறது. நிதியைக் குறிக்கும் wang என்ற சொல் சீனமொழிச் சொல். மலாய் கலவையாய் எழுந்த மொழியாதலின் பல சொற்களும் அங்கு வழங்குதல் காணலாம். பல மக்களுடனும் கலந்துறவாடியதன் விளைவாக அவர்கள் போலினீசியச் சொற்களைப் பயன்படுத்தவில்லை அல்லது மறந்துவிட்டனர் எனலாம்.

நாம் இங்கு மந்திரி என்ற சொல்லை ஆய்கிறோம். குறளில்

பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்

எழுபது கோடி உறும்  639

எனக் காண்க. 

மந்திரி என்ற சொல் இங்கு வெகு பொருத்தமானது.  அமைச்சர் என்ற சொல் அரசு என்னும் அமைப்பில் உள்ளடங்கி அரசற்குச் சூழுரை நல்கி வேலை பார்ப்பவர் என்ற பொருளைத் தருகிறது.  ஆனால் மந்திரி என்ற சொல் திறமான முறையில் அரசு செழிக்க மற்றும் நாடு செழிக்க நல்லுரைகளை வழங்கி முன்னேற்றம் அடையப் பாடுபடவேண்டியவர் என்ற அழுத்தத்தைத் தருகிறது. இப்பொருள் மந்திரி என்ற சொல்லிலே அமைந்திருக்கிறது. ஆகவே இந்த முரண்பட்ட நிலையை நன்கெடுத்துக் காட்டும் சொல்லாகும்.

மாதம்தோறும் மும்முறை மழைபொழிகிறதா என்பதை மந்திரி அரசற்குச் சொல்வார் என்று ஒரு பழைய கதை சொல்கிறது.மழை பொழிந்தாலே மண் திறம் பெறும். விளைச்சல் பெருகும்,  இவ்வாறு மழைப்பொழிவு உதவவில்லை என்றால் மந்திரி பாசனத்தின் மேம்பாட்டுக்குரிய வேலைகளை மேற்கொள்ளவேண்டும், அதுவே அவரின் முதலாய பணியாகும். இப்பொருள் மந்திரி என்ற சொல்லில் அமைந்து கிடக்கிறது.

[ அரசன், மந்திரி இருவரும் ஓர் இடத்திலே இருந்தாலும், மழைப்பொழிவு உதவாத நிலையில், மாற்று வழிகட்கு ஏற்பாடு செய்தல் மந்திரியின் கடன். (Duty Scheme, Discharge of Responsibilities). King had other responsibilities.  ]

மண் திறம் என்றால் நாட்டு விளைநிலங்களின் நிலை மற்றும் செழிப்பு, இதை மேம்படுத்தவே மண்திறம் காக்கும் மந்திரிகள் முற்காலத்தில் அமர்த்தப்பட்டனர். மந்திரி என்ற சொல்லும் இவர்களின் இந்த ஆதிகாலக் கடமையிலிருந்தே வந்தது ஆகும். Indian people were basically of agricultural societies. Taxes were paid by them to the ruling classes.

மண் திறம் > மண்+ திற+ இ >  மண்திறி >  மண்திரி >  மந்திரி  என அமைந்தது இச்சொல்.

றகரம் ரகரமாகுதல்,  ஒலியியல் மாற்றம்.

இங்குத் திற இ என்பது திரி ஆனது. இதுபோல் அமைந்த சொற்கள்:

திரிபுகளை மனத்துள் கொள்க:- [இவை சொல்லாக்கப் புணர்ச்சி முறை. உரை மற்றும் செய்யுளுக்கு உரிய புணரியல் சார்ந்தவை அல்ல]

மன்னும் திறம் >  மன் திறம் > மந்திரம்.

மன்னுதல் - நிலைபெறுதல். ஒருவன் தின்றவுடன் வாந்தி எடுக்கவேண்டும் என்று "மந்திரம்" செய்கிறான் இன்னொருவன்.  இது குறிப்பிட்ட காலத்துக்குத்  தொடரும்படி செய்யப்படும்.  இதுதான் இங்கு "  மன்னுதல்" ( நிற்றல் அல்லது நிலைபெறுதல்) எனப்படுகிறது. 

தன் திறம் >  தந்திரம்.

தண் + செய் >  தஞ்செய்.  > தஞ்சை.  ஊர்ப்பெயர்.

தண்செலும் >  தண்செல்ம்> தஞ்சம்.  ( கடுவெயிலில் நிழலை நாடுதல்போல் ஒரு துன்பத்தில் அல்லது கெடுதலினின்று காப்பான இடம் புகுதல்) . செல்ம் என்று குறுக்கும்வழி குறுக்குதல்.

திறம் என்ற இறுதி வரும் சொற்களில் முன் வேறுபதத்துடன் கூடிய பின், திறம் என்பது திரம் என்று ஆகும். மண்திறம்> மண்திரி > மந்திரி. வல்லின றகரம் சொல்லிற் புணரும் காலை தன் வன்மை குன்றிவிடும்.  இது பல சொற்களில் காணப்பெறும் திரிபு ஆகும்.  மண்ணின் அல்லது விளைநிலங்களின் மாற்றங்களை ஆய்ந்து ஆலோசனை வழங்குவோனே இவன். மண் திரி > மந்திரி எனினும் ஒப்பதே ஆகும்.

உணவு உண்டாக்குதல் ஒரு முதன்மையான கவனத்துக்குரிய வேலையாதலின் இதற்காகவே அமைந்த பதவி மந்திரி வேலை. மண்ணின் திறம் அல்லது மண்ணின் திரிபுகள் முதன்மையான கவனத்துக்குரியதாகும்.

திறம்> திறை.  வரியைக் குறிக்கும்.  திறை விதிப்பவர் என்று பொருள் கொண்டாலும், மண்திறை> மண்திரை> மண்+திர்+ இ > மண்திரி> மந்திரி என்றே வரும். திறை+காசு என்ற கூட்டுச்சொல்லில், திறை என்பது திரை என்றே மாறும். இது இவ்விளக்கத்தை மாற்றிவிடாது.  திரைக்காசு ( ரை) என்றே, வல்லினம் இடையினமாகும். மறவாதீர். இது ஒலியியல் சார்ந்த திரிபு ஆகும். இந்த ஒலிமாற்ற நுட்பத்தை அறிந்துகொள்க. ஒருசொன்னீர்மையில் ஒலி மாறும்.  அறிக. ஒருசொன்னீர்மை - formation into a single word. This pertains to contrastive relationships in speech sounds.

கரிகால் சோழன் முதலியோர் காவிரி ஆறு வெட்டி வளம் சேர்த்தது காண்க. அதனால் சோழநாடு சோறுடைத்து என்ற வரணனை எழுந்தது. பிற்காலத்தில் மந்திரிகள் பலவற்றிலும் ஆலோசனை கூறுவாராயினர். இது வேலைவிரிவு ஆகும். இது இயல்பான வளர்ச்சியே ஆகும். பிற்காலத்தில் துறைக்கொரு மந்திரி அமைந்தனர்.

மண்திறம்> மண்திரம்> மந்திரி என்பது உணர்க.

மண்டு(தல்) என்பது " மந்து " என்று மாறுதல்

மாடுகள் ஆடுகள் மண்டிய நிலையே மந்தை.  மண்டுதல் வினைச்சொல்.

மண்டு> மண்து> மந் து ஐ >  மந்தை. (கால்நடைகள் மண்டி யிருக்குமிடம்).  சொல்லை இவ்வாறு திரித்து அமைப்பதே அறிவுடைமை, மண்டு+ ஐ > மண்டை என்று அமைப்பது தலையைக் குறிக்கும் சொல்லுடன் மயங்குதலை உண்டாக்கும், அதை எப்படித் தவிர்ப்பது? ஆகவே மண்டு என்ற சொல்லில் வரும் டு என்பது உண்மையில் து என்பதே,  யாது வழிஎனின்,  சொல்லின் தாத்தாவைக் கண்டுபிடித்து, மண் து ஐ >  மந்தை என்று சொல்லமைத்தனர். சொற்களை முட்டாள்தனமாக அமைக்காமல் பிற்காலத்தவருக்குப் பொருள்மாறாட்டம் ஏற்பாடாமல் அமைத்தனர். அவர்களை வணங்குவோம். பொருள் சொல்கையில் ஆடுமாடுகள் "மண்டிடம்" என்க.

மண் - சொல்லின் விரிபொருள்

மண் என்பது நாளடைவில் நாட்டையே குறித்தது இயல்பு. மண்ணுலகு என்பது விண்ணுலகை வேறுபடுத்தி அறிய ஒர் நல்ல சொற்றொடர்.

வேறு திரிபுகள்:  மண் சிலை > மஞ்சிலை.   இங்கு ஞ் என்னும் மெய் வந்தது காண்க. மட்சிலை என்று அமைப்பது புணரியலை ஒட்டிய முறை. சொல் அவ்வாறு அமையவில்லை.  மொழிக்கு அதிகச் சொற்கள் அமையவேண்டும். அதுவே தேவை என் க.   

மண் என்பதன் வேறு பொருண்மைகள்:  1 . உயர்வு, மாட்சிமை  2 ஒப்பனை3 உலகம்.  மண்திரி> மந்திரி என்ற திரிபு, தொடக்கத்தில் வேளாண்மை மேற்பார்வை என்று பொருள்பட்டாலும் நாளடைவில் மாட்சிமைப் பொருளை எட்டிற்று.

வரி கட்டுகிறவர்கள் விளைச்சல் செய்வோரே. இதனாலும்  மண்திரி> மந்திரி என்பது பொருத்தம் ஆகிறது.  மண்+திரை+இ > மண்+திர்+ இ > மந்திரி என்றுமாகும். நிலவரி, விளைச்சல் வரி முதலியன விதிப்பவர். எவ்வாறாயினும் தமிழ்ச்சொல்லே இதுவாகும். திர் என்பதே மூலச்சொல்.  இது மூலச்சொல். திரும்பு என்ற சொல்லுக்கும் இதுவே மூலம்.

அரசனின் வேலை என்ன? மக்களைக் காப்பது.  எல்லோருக்கும் போதுமான சோறு கிடைக்கும்படி பார்த்துக்கொள்வது. மண்ணிலிருந்து விளைவனவுக்குத் திறையும் வாங்கவேண்டும். திரை என்று எடுத்துக்கொண்டாலும், மண்+திர்+இ என்று வந்து மந்திரி என்று திரிபு அடைகிறது, இது சொல்லைப்பார்த்தவுடன் தெரிந்துவிடுமா? தெரிந்துவிடுமானால் ஏன் மொழிபொருட் காரணம் விழிப்பத் தோன்றா என்று தொல்காப்பியமுனிவர் சூத்திரம் செய்யவேண்டும்? இதை புரிந்து கொள்ளவேண்டும். ( சூழ்ந்து - ஆலோசித்து, திரு - உயர்வான முறையில், அம் - அமைபெறுவது:  சூத்திரம் ). "நூற்பா".

சூழ்+ திரு+ அம் > சூத்திரம்,  ஒ.நோ: வாழ்த்து+ இயம்> வாத்தியம்.

பூசை மொழி (சமஸ்கிருதம்)  இந்தோ ஐரோப்பியம் என்பது ஐரோப்பியர் கொள்கை. அதிலிருந்து பெருவாரியான சொற்களை அவர்கள் உரோமப் பேரரசு காலத்தில் எடுத்துக்கொண்டு தங்கள் மொழி/மொழிகளைச் செழுமைப் படுத்தினர். இது (வட அல்லது மரத்தடி மொழி) நம் உள்நாட்டு மொழி.  ஐரோப்பியரிடமிருந்து நாம் பெற்றதன்று. இதைப் பிற அறிஞர்களும் கூறியுள்ளனர். இதை இப்போது தேடி எடுக்க நேரமில்லை. முன் ஓர் இடுகையில் குறிப்பிட்ட நினைவு உள்ளது, இங்குள்ள இடுகைகளில் தேடிப் பிடிக்கவும்,


அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.