வெள்ளி, 12 ஜனவரி, 2024

சீத்தா என்னும் புலிவகை -- சொல்

 இந்த வகைப்  புலிகட்குத் தமிழில் சிறுத்தை என்று பெயர்.

சிறு -  சிறிய வகை.

சிறு + தை (விகுதி)  -   சிறுத்தை.

இச்சொல்லில்,  று என்பது வல்லின எழுத்து.  பெரும்பாலும் தமிழ் மூலச்சொற்கள் வேறு மொழிக்குப் போனால், வல்லின எழுத்து மறையும்.  கட்டுமரம் > கட்டமாரான் என்பது போலும் சொற்கள் இதற்கு விதிவிலக்கு.  வல்லின எழுத்து மறையவில்லை.

சிறுத்தை >  சி (று) [ த் ]  ஐ

சிறுத்தை >  சி (றுத்) தை

சி > சீ.  நெடிலாகிவிட்டது.

தை >  தா.  

ஐகாரத்தில் முடியும் எழுத்துக்களை அயலார்  ஆ என்று நீட்டி முடிப்பர்.  எடுத்துக்காட்டு:

சின்னையா >  சீ-நா-யா

சிறுத்தை என்பது சீ(த்)தா என்ற புலிப்பெயருக்கு மூலம்.

றுகரம் மறைந்த இன்னொரு பழஞ்சொல்:

சிறுசு  >  சிசு.  ( குழந்தை ).  இங்கு று என்ற வல்லின எழுத்து மறைந்தது.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

வியாழன், 11 ஜனவரி, 2024

சாதனை - சொல்

 சாதனை என்பதென்ன என்பதைக் கண்டறிவோம். எந்த மனிதனையும் அண்டாமல், எப்பொருளையும் கையாளாமல் காற்றை இழுத்து மூச்சு விட்டுக்கொண்டு முனிவர்போல் அமர்ந்துவிட்டால் அதுவே ஒரு சாதனை என்று கருதலாமேயன்றி அதிலிருந்து இன்னொரு  சாதனை  தோன்றிவிட முடியாது . ஒரு செய்கை சாதனையா அன்றா என்பது ஒரு கருதுகோள்தான். இன்னொரு சாதனைக்கு இன்னொரு செயல்பாடு அடித்தளமாகிறது. அல்லது ஆகாமலும் போகலாம். முனிவர் அடுத்து மணலைக் கயிறாய்த் திரித்தால் அந்தச் சாதனை மேலோங்கி மூச்சுச் சாதனையை உங்கள் கவனத்திலிருந்து கீழே பணித்து விடும். மூச்சுச் சாதனை நீங்கள் மாத்திரம் அறிந்த தாகிவிடுதலும் கூடும்.

இவற்றிலிருந்து  சாதனை என்பது ஒன்றன் சார்பில் எழும் ஒன்று என்பதே உண்மை. சாதனை வேறு, அதனுடன் ஒட்டி வரும் விளம்பரம் வேறு. பின்னது இல்லாத போதும் சாதனை சாதனைதான்.

சாதனை  என்ற மதிப்பீடு சார்ந்து எழுவ தொன்றாதலின் அதற்குரிய வினைச் சொல் சார் என்பதே. 

சாதனை அறிவிப்பு  என்பதன் உள்ளுறுப்புகள்:

1  செய்கை

2 சாதனை என்ற மதிப்பீடு

3 அது பற்றிய செய்திப் பரவல் அல்லது விளம்பரம். இது பின்வரவு.

 சார்+ து + அன் + ஐ -  இங்கு ' து மற்றும் அன்' என்பன இடைநிலைகள். ஐ - விகுதி யாகும். ரகர ஒற்று   வீழ்ந்தது.(கெட்டது).

மதிப்பீட்டுக்குச் செயல்களில் முன்னவற்றின் ஒப்பீடும் வேண்டும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


செவ்வாய், 9 ஜனவரி, 2024

குயின் (ஆங்கிலம்) சொல்

 "Queen" என்ற ஆங்கிலச் சொல்மூலம் இந்தோ ஐரோப்பிய மூல மொழியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஐரோப்பிய மொழிகளிலும் இதன் திரிபுகள் எனப் படும் வடிவங்கள் காணப்படுகின்றன.

ஆங்கிலோ செக்சன் மக்கள் வருகைக்குமுன் வேறு சொல் இருந்திருக்கக் கூடும்.

கோ என்பது அரசன் என்று பொருள்படும் தமிழ்ச் சொல். "அரசனின் " என்பதைக் "கோவின்"  என்று கூறலாம். யகர உடம்படுமெய் இட்டால் கோயின் என்று இ து மாறத் தக்கது ஆகும்.

ஆகவே அரசி அரசனுடையவள் என்பது இதன் பொருள் ஆகிறது.

குயின் என்பதன் மூலச் சொல்  "பெண்"  என்றே பொருள் தருவதாகச் சொல்லப்படும். இதைவிடக் "கோயின்" என்பது இன்றைய ஆங்கிலச் சொல்லுக்கு மிக்க அணிமைத்தாகவும் பொருள் பொதிந்தாகவும் உள்ள படியால், இந்தோ ஐரோப்பியமும் தமிழிலிருந்தே இதைப் பெற்றிருக்க வேண்டுமென்பது உள்ளங்கை நெல்லிக்கனி யாகின்றது. தமிழுடன் மொழித்தொடர்பை ஐரோப்பியர் வரும்பாதவர்கள் ஆவர். ஆகவே நழுவவே விரும்புவர். ஆனால் முந்தைய ஆங்கிலர் நன்னூல் முதலியன கற்று வியந்து வாயடைத்து நின்றனர். தங்கள் மொழிகளிற் பெயர்த்தும் கொண்டனர்.  அவர்களின் இலக்கண அறிவு மலையுச்சியும் தொட்டது!


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்