வெள்ளி, 5 ஜனவரி, 2024

உக்கிரம், உத்கடம், உத்தண்டம் ஒப்பீடு.

தலைப்பில் கண்ட மூன்று சொற்களையும் ஒப்பீடு செய்து தமிழைச் சற்று விரித்து நுகர்வோம்.

உக்கிரம் என்பதனை முன் இடுகையில் ஓரளவு அலசியுள்ளோம். உக்கிரம் ( உக்கிரப் பெருவழுதி என்ற பெயரிலும் வரும் சொல்)  என்பதன் எல்லாப் பொருண்மைச் சாயல்களையும் அவ்விடுகையில் அலசிவிட வில்லை. சுருங்க இவண் குறிக்கலாம். (குறிக்கவில்லை)

உக்கிரம்,  இடுகை:- https://sivamaalaa.blogspot.com/2024/01/blog-post_3.html 

உத்தண்டம் என்பது  உக்கிரம் என்றே பொருள்படும்  இதனை உது + தண்டம் எனப் பிரித்து,  முன் சென்று தண்டித்தல் ( ஆய்ந்து பார்த்து முடிவு செய்யாமல் நடத்துவதுபோன்ற தோற்றம் தருதல் ) எனலாம். உத்தண்டம் செய்வோன்  முன் கூட்டியே அறிந்தவனாய் இருத்தலும் கூடும்).  உத்தண்டம் என்பதால் தகரம் இரட்டித்தது என்பதறியலாம்.

உத்தண்டத்தைத் தாஷ்டிதம் என்றும் கூறுவர்.  தாட்டுப் பூட்டென்று தாவினான் என்ற வழக்கிலிருந்து தாட்டு> தாட்டு+ இது + அம் > தாட்டிதம்>  தாஷ்டிதம் எனக் காண்க. பேச்சுவழக்குத் திரிபு.  தாண்டு> தாட்டு  (வலித்தல்).  பூட்டு(தல்), நிறுத்துதல்.

உது  அண்டு  அம் என்பன சேர்ந்தாலும் உத்தண்டம் என்றாகும்.  தகரம்  இரட்டித்தது. இவ்வாறு காணின்,  உக்கிரத்தன்மை சற்றுக்குறைந்த நிலையைக் காட்டலாம். இருந்தாலும் எதிர்கொள்ளற் கருத்தே.  அண்டுதல் - அடுத்துச் செல்லுதல். அண்டு அடு என்பன ஒருபொருளன.

உது + கடம் >  உதுகடம், உதுகடமாக என்று வரும்.  முன் நிற்கும் எல்லைகள் கடந்து எகிறுதல். இதுவும் மிகுதியாய் என்று  பொருள்படும் சொல்.  கடம்  <கட+ அம் .  ஓர் அகரம் கெட்டது,  இது உத்கடம் என்று மாறிற்று.  உதுகடம் என்பது வழக்கிறந்தது.

எனவே இவை பொதுவாய் மிகுதிப்பொருளன ஆகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

மெய்ப்பு    05012023   2209  



புதன், 3 ஜனவரி, 2024

உக்கிரம் - சொல் ( "உக்கிரப் பெருவழுதி ")

 உக்கிரம் என்ற சொல் தமிழில் வழங்கி வருகிற சொல். ஆனால் உலக வழக்கில் இல்லை அல்லது குறைவே. சங்க இலக்கியத்தில் "உக்கிரப் பெருவழுதி"  என்பது போலும் பெயர்களைக் காண்கி றோம்.  நாம் உலக வழக்கு என்பது அன்றாடப் பயன்பாட்டினை.

எப்படி அமைந்தது இச்சொல் என்பதை அறிந்துகொண்டு பின்னர் சொல்லமைப்புப் பொருளைக் கண்டறிவோம்.

உக்கிரம் என்பது  பல்பொருள் ஒருசொல். பல பொருள் எனினும் , அவற்றுள் மிகுந்த சீற்றத்துடன் ஒன்றைச் செய்வது. அதாவது போரிடுவது போலும் செய்கையில் ஈடுபடும்போது தொய்வு சிறிதுமின்றிச் செயல்படுவது   என்பதும் ஒரு பொருளாகும். பாய்ச்சல், எதிரியை விரைந்து பணிவித்தல் முதலிய செய்கைகளும் இவற்றுள் அடங்கும்.

இஃது ஒரு சுட்டடிச் சொல்.  இதில் உகரம் இருக்கிறது.  உ  என்பது முன்னிருப்பது என்று பொருள்படும்.  அவன், இவன் மற்றும் உவன் என்பவற்றில் உவன் என்பது மொழியில் இன்னும் இருந்தாலும் பல புதிய வெளியீட்டு அகராதிகளில் இல்லை. உக்கிரத்துக்கு ஒப்பானது கனல் என்று கூறப்படும்.  "கனல் தெறிக்க" என்பார்கள்.  அதுபோன்ற நடப்புதான் உக்கிரம்.

உக்கிரம் என்ற சொல்லை இரு பகுதிகளாக்குவோம்.  உக்கு + இரம்.

உ+ கிரம் என்பது பிறழ்பிரிப்பு.

இரு+ அம் > இரம். (இரு - இருத்தல்).

உகரத்துக்கு அடுத்து நிற்பது  "கு"  என்ற சொல்தான்.  இது வேற்றுமை உருபாகவும் வரும்.   மதுரை +கு,  சென்னை+ கு  என்று காண்க.  உக்கிரம் என்ற சொல்லில் உருபாக வராமல்  சொல்லினுள் ஓர் அடைவாக வந்துள்ளது. சொல்லின் உள்ளுறைவாக வுள்ளது.  முன் இணைந்திருப்பது என்பதுதான் உக்கு என்பதன் பொருள்.

அடுத்துள்ளது இரம் என்பது. கிரம் என்பது இரம் என்பதிலிருந்து பிறழ்பிரிப்பால் வந்தது காண்க. இரு+அம் என்பதே இரம் என்றாம். ருகரத்தில் பின் நின்ற உகரம், கெட்டு ( மறைந்து)  ர் மெய்யானது அகரத்துடன் இணைந்து இம்மில் முடிந்தது.

இவற்றினின்று ஒரு மனிதற்குச் சீற்றத்துடன் கூடிய செயல் திறனும் விரைவும் முன்னணியில் வைத்தற்குரிய நடவடிக்கை  என்று பண்டை மக்கள் கருதியது தெளிவாகிறது.  அரசருக்கு இத்தகைய செயற்பாடு பெருமை அளித்தது. அதனால் உக்கிரம் கொண்ட அரசனைப் போற்றிப் பாடினர். இப்போது காவல்துறைஞனாய் இருந்தாலும் மக்களைப் பணிவன்புட.ன் கவனித்தல் வேண்டும் என்பதே போதிக்கப் படுகிறது. ஒருவேளை உக்கிரமாகச் செயல்படுவது படைஞர்கட்குப் பொருத்தமான செயல்பாடு ஆகலாம். சொல் உலக வழக்கிலிருந்து பின் சென்றமைக்கு வழக்குக்கான சூழ்நிலைகள் மாறியமைந்தமை ஒரு காரணமாகும். வெளிநாடு சென்று போரிடும் வீரர்கள் உள்ளடங்கிய காலை உக்கிரம் முதலிய குணங்களைக் காட்சிப் படுத்தும் வாய்ப்பை இழந்து அண்டையிலுள்ளோருடன் கலாய்க்கவே இயலுமன்றிப்  பிறவகை வாய்ப்புகள் இலராவர்.

 பிற பின்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.



திங்கள், 1 ஜனவரி, 2024

சளி நோய்ப் பரவல்

 இலவசமாய் வந்தசளி நோய்த்தொற்றும்  இந்நாளில் 

குலவசமாய் ஆகாமல் இலவசமாய்ச் செலவேண்டும்;

சிலர்வசமாய் இதுமாறிச் சேர்த்தபணம் செலவாகிப்

பலர்வசமாய்ப் பரவுவதும் பாவமிகை பராபரமே!

பொருள்

சளி நோய் இலவசமாகததான் கிடைக்கிறது. மற்ற இலவசங்களை வீசி எறிவதுபோல் இதை வீசமுடியாமல் திணறிக் கொண்டிருக்கிறோம். ஒரு குல முழுமையும்  நோய் வசப்படுத்திக் கொள்கிறது!! மருத்துவர்களுக்கு நலல வருமானம்! நமக்குச் செலவும் முயற்சியும் வீண் அலைச்சலும். பரவி மற்றவர்களையும்  peeடித்துக்*  கொள்கிறது 

 இறைவா!  ஏன் இந்தச் சோதனை 

என்பது இப்பாடல்.

*பீ  டி த்துக்

software error.  To read as*பீ  டி த்துக்

பாவமிகை -  பாவத்தின் மிகுதி.   அதாவது இரங்கத்தக்க நிலை.