ஞாயிறு, 24 டிசம்பர், 2023

கருமவினையின் நீங்குக ( ஆசிரியப்பா)

 மக்களில் பல்லோர் தக்கநல் உணவிலார்

நக்கலர் பழிக்க நைந்துகீழ் அணாவினர். 

அவர்தமை இழித்தல் வருநாள் நமக்கொரு

அவமது  உணருக  அதுநமக்கு இழுக்கிடும்

இனிவரும் பிறவியில் அதுபோல்  கிடந்துழந்

தலைந்திடல் நிகழின் கழுவாய்  உளதோ?

கருமம் இதுவென ஒருவிட  அறிந்திலார்

ஒருமந்   திரியும் ஊழலில்  விழுந்தின்று

தெருவலி காட்டுநர் புரைமகன்  ஆகவே

புரிகுற்  றத்தினுக் கடைந்தனர் சிறையை.

அயலர் மனத்தினில்  அத்துயர் விளைத்தமை

வியப்பென அல்லாத   உறுதி விளைவே.

வீண்வினை தொகுத்தல் நீங்கி

தான்விடு தலைதான்  காண்கவாழ்  வினிதே..  




அரும்பொருள்:

நக்கல் -  நகைப்பு.   நகு+ அல் > நக்கல், இங்கு ககரம் இரட்டித்தது.

நக்கலர் -நகைப்போர், ஏளனம் செய்வோர்.

நக்கு அலர் என்று பிரித்தல் இங்கு பொருந்தாது.

அவம் -  கெடுதல்.  அவமது = அவம் அது

ஒருவிட  -  விலகிட, நீங்குவதற்கு

இழித்தல் -  பழித்தல்

வீண் வினை -   தேவை யில்லாமல் கர்மா  ஆவது

கழுவாய் -- பிராயச்சித்தம்

சனி, 23 டிசம்பர், 2023

இராமபிரான்

 இராமன் என்ற நாடாள்வார் தியாகச் செம்மல்,

 அரண்காட்டில்  வனவாசம் பொறுத்து வாழந்தார்.


வியாழன், 21 டிசம்பர், 2023

அள், அன் பால் விகுதிகள். தமிழ்மொழியில்.

 பெண்மக்கட்கு ஏன் அள் விகுதி வந்தது என்பதை இங்கு ஆய்வாக்கம் செய்கிறது இந்த இடுகை.

ஆ ஈறு விளியில் ( அழைத்தல் )

ஆ எனற்பாலது பெரும்பாலும் விளியில் தோன்றும் ஒலியாகும்.

"தோழா, நான் சொல்வதைக் கேள்" என்று ஒருவனை விளித்துப் பேசுகையில் இச்சொல் (தோழா)  என்று ஆகாரம் (  ஆவன்னா அல்லது ஆ என்ற ஒலியில்) முடிவதைக் காணலாம்.

கண்ணன் என்பது எழுவாய் வடிவம்.  அதாவது, சொல்லின் தொடக்க வடிவமாகும்.  கண்ணனை அழைக்கின்ற பொழுது,  இது "கண்ணா!"  என்று ஆகாரத்தில் முடிகிறது.

அயல் மொழிகட்கு  இத்தகைய சொற்கள் சென்று வழங்கும்போது,  விளிவடிவமே வழங்குகிறது.   எழுவாய் வரவேண்டிய இடத்திலும்,  கண்ணன் என்று வாராமல் கண்ணா ( அதாவது கிருஷ்ணா) என்று வரும்.   கிருஷ்ணன் என்பதில்  அன்,  விகுதி (  தமிழுக்குரியது) .

அள் என்பதன் பொருண்மைத் தெளிவு

தமிழில்  அள் என்பதே  அன் விகுதியின் பெண்பால் வடிவம்.  ள் ஈற்றுச் சொற்கள் அல்லது விகுதிகள்  அ, இ மற்றும் உ என்ற முச்சுட்டுகளுக்கும் வராமல் அகரத்திற்கு மட்டுமே உள்ளது. அயலில் இள் விகுதியும் வருவது ஆய்வுக்குரியது.  எடுத்துக்காட்டு:  உறுமிளா ( இள் ஆ).  கண்ணுறும் தகைய அழகி என்பது.

அள் என்பதை அவள் என்பதன் சுருக்க வடிவம் என்று கொள்ளலாம். அப்படிக் கொண்டால் சுட்டு இருமுறை வந்தது என்று கொள்ளவேண்டும். அ அள் என்ற இரண்டன் கலவை வகர உடம்படுமெய்யுடன்  அவள் என்றாகும். இவ்வாறின்றி அள் என்பது ஒரு தனிவிகுதி என்று கொள்வது இடரின்றி முடியும். இது சரியானால் அன் என்பதும்  தனி ஆண்பால் விகுதி என்று முடிக்கவேண்டும்.

சுட்டு இரட்டிப்பதைக் கவனிக்காமல்  அகரச் சுட்டு இருமுறையும் வந்தது என்று கொண்டால்,  அள்,  அ அள் ( அவள் )  என்பன இரண்டும் சுட்டிலிருந்தே வந்தன என்று சொல்வது எளிது.  அவ்வாறாயின் அள் என்பதற்குத் தனிப்பொருள் கூறுதல் தேவைப்படாது.

இனி அள் என்பதற்குத் தனிப்பொருள் யாது என்று காண்போம்.

அள் -  செறிவு,  பற்றுதல் செய்வது,

அள்ளல் -  நெருக்கம்

அள்ளாடுதல் -  செறிதல்

அள்ளி - நெய்   (  உருகுதல் உடையது )

அள்ளிக்குத்து -  தெளித்தல்

அள்ளிக்கொட்டு -  பரவுதல்

அள்ளிக்கொண்டுபோதல் -  பேரளவில் எடுத்துச்செல்லுதல்

அள்ளிருள் -  செறிந்த இருட்டு

அள்ளுதல் -  செறிதல்

அள்ளுகொள்ளை -  பெருங்கொள்ளை

அள் விகுதி தரும் தெளிவு 

அள் என்ற அடியிற் பிறந்த மேற்காட்டிய சொற்களை நோக்கினால்,  பெண்ணுக்கு அள் விகுதி வந்ததன் காரணங்கள் உடன் புரியும்.   நெய் என்பதே நேசம் என்பதற்கும் அடிச்சொல்.  நெய்  ( உருகி ஒன்றாவது ),  செறிவுடையது.  பரவுதல் என்பது விரிவாவது. இவ்வாறு பொருள் பெருக்கலாம்.  

நெய்+ அம் > நேயம் முதனிலை நீண்டு விகுதி பெறுதல்

நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்னும் பாரதியாரின் தொடரையும் காண்க.

அன் விகுதியும்  அன்பு என்பதன் அடிச்சொல்லாய் உள்ளது.  அண் > அன் அணுக்கக் கருத்து.

உள் விகுதி சொல்லமைப்புக்கு உதவுகிறது எனினும் இது பால் ( ஆண், பெண் பாகுபாடு )  காட்டுவதில்லை.  காட்டும் சொற்கள் கண்ணுற்றால் ஈண்டு கருத்துரையில்  எழுதித் தெரிவியுங்கள்.   தமிழிலானாலும் பிறமொழிகளிலானாலும் இருப்பன காட்டலாம்.  நன்றி

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

மெய்ப்பு பார்க்கப்பட்டது:  23122023 1506