வியாழன், 10 ஆகஸ்ட், 2023

After dinner gathering,

 


விருந்துக்குப் பின்


After a  dinner,  gathering.


புதன், 9 ஆகஸ்ட், 2023

சிங்கை தேசிய தினம்


தாழிசைப்  பாடல்.


ஆசியக் கண்டத்தின்  அதிபுதுமைச் சிறப்புடனே

தேசிய தினத்தைத் தெளிந்துகொண் டாடினையே

மாசறு  நன்னாளில் மாலைவளர் மதிபோலும்

ஆசுறவே  ஏங்கலற ,  அனைத்திலும்நீ ஓங்கிடுக,


கலைஅறி  வியலிலே காசறுவ ணிகத்தினிலே,

நிலைபெறச்சேர் நிதியமொடு நேரிலாத ஒற்றுமையில்

அலைவறியா ஒப்புமையில் அணிபெறவே இனும்பெருகி

உலைவறியாத் திசைநான்கும் தாங்கிவர ஓங்கிடுக..


கட்டிடத்தில் காவலிலே ஒட்டிவளர் உறவுகளில்

கொட்டுவள மழைடனே  கூடுகுடி  நீருடனே

எட்டெனவே எண்ணும்நல் திக்கினிலும் கொடிநாட்டி

மட்டிலாத மன்பதையாய் மாநிலத்தே  ஓங்கிடுக.



அரும்பொருள்:

காசற -  மாசிலாத

ஆசுற -  காவல் முன்னணியிலாகும்   வகையில்

தெளிந்து - எப்படி என்பதை அறிந்து

நிதியம்  சிங்கப்பூர் ஒதுக்கிவைத்துள்ள நாட்டு நிதி.

ஒப்புமை -  மக்களிடையே வேற்றுமை இன்மை

அலைவு  -  அதிர்வு, துன்பம்

இனும் -  இன்னும்  ( தொகுத்தல் விகாரம்)

உலைவு  -  நடுக்கம்

ஏங்கல் -  இல்லை எனும் ஏக்கம்

திக்கு - திசை

மட்டிலாத -  எல்லை குன்றாத

மன்பதை  -  சமுகம்

மாநிலம் - பூமி


அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்


சனி, 5 ஆகஸ்ட், 2023

சேவைக்குழும்புகள் Resident Service Companies.

எழுசீர்  ஆசிரிய விருத்தம்.


சீர்சால் செயல்சேர் குழும்புகள் இல்லங்கள் வாழ்பவர் 

தம்மிடைத் தொண்டியற்றி

ஓர்மால் மனமே இலாதவர் பண்பின  ராகவே ஓங்குவர், 

மக்கள் பயன்பெறுவார் ;

நீர்மேல் வருடுநல்  தென்றலைப் போல்குளிர் செய்பண் 

புதவிகள் செய்வரன்னார்,

பார்ப்பீர் படந்தனை,  நன்மனத் தோடிணைப் புற்றுவாழ்த் 

தார்த்திட;  வாழ்கவாழ்க..



சொடுக்கிப் படத்தினைப் பாருங்கள்:

https://www.linkedin.com/posts/em-services-pte-ltd_activity-7093047898619199489-JW-L?utm_source=share&utm_medium=member_android

செயலவர்களின் தலைமை,  திருமதி சுனிதாவை படத்தில் காண்க.



பொருள்:

சேவைக்குழும்புகள்:   வீடமைப்புக் கழக இல்லங்களில் சேவைகள் செய்யும் குழும்புகள் (  கம்பெனிகள்).  இது செயல்சேர் குழும்புகள் எனப்பட்டது.  குழும்பு ="கம்பெனி."

ஓர் மால் மனமே இலாத -  ஒருவித மயக்கமும் கொண்ட மனமும் இல்லாத.  . மால் என்றால் இங்கு பணி செய்வோமா செய்யாது விடுவோமா என்ற இருமனம் இல்லாத.

பண்பினராகவே ஓங்குவர்  - நல்ல குணமுடையோராகவே சிறப்புகள் கொள்வர்.

நீர்மேல் வருடுநல்  தென்றலைப் போல்குளிர் செய்பண் புதவிகள் -   மனத்தைக் குளிர்வித்து மகிழ்வுறுத்தும் நல்ல உதவிகள்.

செய்வரன்னார்  ---  அவர்கள் செய்வர்.

நன்மனத் தோடிணைப் புற்றுவாழ்த் தார்த்திட;  வாழ்கவாழ்க..  ---- நல்ல மனத்தோடு  வாழ்த்துவீர் என்றபடி.  ஆர்த்திட - வாழ்த்தொலி எழுப்ப.

 அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்

இந்த ஆசிரியப்பா வெண்டளையில் பெரிதும் இயலுமாறு மறு வடிவமைக்கப் பட்டது.   06082023  1736