திங்கள், 15 மே, 2023

கள்ளப்பிறர் > களப்பிரர்

 இன்று கள்ளப்பிறர் என்று நாம் கொடுத்துள்ள சொல்லையும்  களப்பிரர் என்ற சொல்லையும் ஒப்பிடுவதுடன்  தொடர்புடைய கருத்துகளில் சிந்தனையைச் செலுத்துவோம்.

களப்பிரர்  அல்லது  களப்பிறர் என்பது பொருளில் ஒன்றே  ஆகும் என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்.  எப்படி என்பதைச் சிறிது விளக்குவோம்.

ஒரு பொருளினின்று இன்னொன்று பிரிகின்றது.  பிரிகின்றது என்றால் வேறாகிறது.  

பிற என்பதும் இதுவே ஆகும்.  ஒன்றிலிருந்து  ( எடுத்துக்காட்டு:  பெண் பூனையிலிருந்து )  குட்டி பிறக்கின்றது.  பிறக்கிறது என்றாலும்,   பிரிகிறது - பிறந்தது என்றாலும் கருத்து ஒன்றுதான்.  காலவேறுபாட்டை ( நிகழ் மற்றும் இறந்த காலங்களைக்) கருதவேண்டியதில்லை .

அது  பில் > பிரு ( பிர்)  >  பிரி.   வினைச்சொல்:  பிரிதல்.

பிரு என்பதிலிருந்து வரும் சொல்:  பிருட்டபாகம்,  பிரிவுடைய உடற்பாகம்.

பில் > பிறு >  பிற   -  பிறத்தல்.

மொழிமரபு போற்றும் நாம்,  பிறர் என்பதைத் தனிச்சொல்லாய் எழுதினாலும்,  களம் என்ற சொல்லுடன் வரும்போது அதைப் பிரர் என்றே எழுதுகிறோம்.  மொழிமரபின் காரணத்தினால் களப்பிறர் என்று எழுதுவதில்லையே தவிர,  புரிந்துகொள்ள அதைப் பிறர் என்று இணைத்துசொன்னாலும்  அதுவே ஆகும்.

களப்பிரர் என்ற சொல்லில் முன் உள்ள சொல் களம் என்பதாகும். கள் (என்ற விகுதி)  -  களம்   உண்மையில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் உள்ள இடம்.  அது போர்க்களமாக இருக்கலாம்,  வேலையிடமாக இருக்கலாம். பன்மை மாந்தர் கூடி நிற்றல் எனல் குறிப்பாம்.  வழக்கில் அது பலர் ஆழ்ந்து செயலாற்றும் இடம் என்றாகிறது.

கள் >  கள்ளர் -  பலராகச் சென்று பொருள் எடுத்துக்கொள்ளுதலையே அது குறித்தது. எ-டு:  ஆநிரை கொள்ளுதல்.  போரைத் தொடங்குமுன் செய்யும் முதற்செயல்.

கள் >  களம்.  பலர் செயலாற்றும் இடம்.

களம் > களவர் > கள்வர். இச்சொல்லில் மூலச்சொல்லே  (கள்)  வந்தது.

பிர் > பிரி> பிரிவு.

பிர் > பிரர்.  பொருள்:  படைப்பிரிவினர் என்பது ஆகும்.

பிரி > பிரி+ அர் > பிரர்,  இகரம் கெட்டு அர் விகுதி ஏற்றது என்று முடிக்கவேண்டும்.

இதை இன்னொரு வகையில் காட்டலாம்:

பிறர் -  மூலப் படையிலிருந்து பிரிந்து செயல்படுவோர்.  பிரர் என்பதுமது.

கள்ளப்பிறர் >  களப்பிறர் >  களப்பிரர்.

பொருளாலும் ஒன்றே என்பது உணர்த்தப்பட்டது.

கல் > கலத்தல் என்பதும் பன்மை காட்டும்.    கல் > கள் என்னும் வடிவங்களில்,  கலி> கலித்தல் என்பன பன்மையர் என்று  பொருள்படுதலும் கொள்க.   கலி -  கலியரசன். ( களப்பிர அரசன், களப்பரன் எனினுமாம்.)  எ-டு:  இதழ் -  அதழ்,  திரிபு,


அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்னர்.


புதன், 10 மே, 2023

அபேட்சை என்பது

 இனி அபேட்சை என்பது வந்துற்ற விதம் காண்போம்.

ஏதேனும் ஓர் அவா மனத்தினுள் ஏற்பட்டுவிடுமாயின்,  அத்தகு அவாவினுட் பட்ட மனிதன் அதனால்  அலைப்பட்டு விடுகிறான்.

அவா ஏற்சித்தல்   - அவேற்சி > அபேட்சி+ ஐ >  அபேட்சை  ஆகிவிடுகிறது.

சித்தல் என்பது சுற்றல் ( சுத்தல் ) என்பதன் திரிபு.

ஏல் என்பது ஏற்றல் வினை(ச்சொல்).

வகரம் பகரமாகும் என்பதால்,  அவா என்பது  ஏல் என்பதன் முதனிலை ஏகாரத்தினோடும் கூடி, அபே என்று நின்றது காண்க.

இவ்வாறு நோக்க,  அவாவினோடும் செல்லுதல் என்ற கருத்து பெறப்படுகிறது.

இன்னொரு நோக்கில்,   அவா இச்சை என்ற இரண்டும் கூடித் திரிந்து,  அபேட்சை என்று திரிந்து நடத்தலும் இயல்வதே.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

திங்கள், 8 மே, 2023

தேர்தல் வெற்றியில் தேன்போலும் வாழ்வு

 கர்நாடகா தேர்தலில் வேட்பாளர் சிலரும் அவர்களின் தாய்தந்தையரும் கூட மக்கள்முன் தோன்றிக் கண்ணீர் வடித்துக்கொண்டு,  தங்களைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்டதாகச் செய்திகள் வந்துள்ளன.  அரசியல் களத்திலே இருப்போருக்கும்கூட,  வேலையிழப்பு,  ஊதியமின்மை என்பன இன்னல்கள் பலவற்றை உண்டாக்கிவிடுகின்றனவென்பது வெளிப்படையான உண்மையாகும். தேர்தல் வெற்றியென்றால் பல நன்மைகள் கிட்டும். சம்பளத்தோடு கிம்பளமும் கிட்டும்.  அதைக் கூறும் இப்பாடல்  வருமாறு. கிம்பளமும் அழகு என்ற சொல்லில் வைக்கப்பட்டுள்ளது.

வெண்பா:

வேட்பாள ராய்நின்று வெற்றியே பெற்றிடின்

ஆட்பட வேண்டாமே அல்லற்கு  ----   தாட்பட்டு 

மாற்றுக் குழுதன்னைத் தாம்மருவ வேண்டாமே

ஆற்றுப்  படுமா  றழகு.



வேட்பாளர் -  தேர்தலில் நிற்பவர்

ஆட்பட -  ( அனுபவிக்க)

அல்லற்கு  -   அல்லலுக்கு.

தாட்பட்டு -   பிறர் காலில் விழுந்து

மாற்றுக் குழுதன்னை  -  வேறு அரசியல் கட்சிகளில் உள்ளோரிடம்

தாம் மருவ - போய்ச் சேர்ந்து உறுப்பினராகிட

ஆற்றுப் படுமாறு  -   முறையான அரசியலாளராக வழிச்செல்லும்படியாக

அழகு  -   நலங்கள் யாவும் ஏற்படும்.


இது இயல்பான  எதிர்பார்ப்புதான்.  ஆனால் அரசியல் வாழ்விலும் பொருளிழந்தோரும் இழிக்கப்பட்டோரும் கொலைப்பட்டாரும்கூட உண்டு.

அது வேறு விடையமாகும்.

வேட்பாளர் கண்ணீர் வடிப்பது எதற்கு என்பதை இப்பாடல் கூறுகிறது.

மக்கள் சேவையே நோக்கம் என்பார்கள்.  இல்லை,  வாழ்வின் அழகே நோக்கம்.

அதாவது வேட்பாளர் மக்களிடம் வேலை கேட்கிறார்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.