அடிக்கடி அக்காள் வீட்டுக்கு போய்வருவேன். அப்போது அக்கள், வீட்டிலிருக்கும் பலகாரங்களுடன் கொழுந்து ( தே) நீரும் தருவாள். நான் போவது பெரும்பாலும் சம்பளநாள் முடிந்து மறுநாளாகவோ அதற்கு அடுத்த நாளாகவோ இருக்கும். கால்வாசிச் சம்பளத்தை அவளிடம் கொடுத்துவிட்டு வந்துவிடுவேன். அதை அவள் புருடன்1 வாங்கி, மதுவை அருந்தி மகிழ்வதாகத் தெரிந்தது. நான் பார்க்கவில்லை.
அப்பால் வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கையில் ஒரு நண்பர் எதிரில் வந்தார். அவர்பெயர் சுப்ரத். சுப்ரத் என்ன உன் அக்காளைப் போய்ப் பார்க்கவில்லையா என்று கேட்டார். இப்போதுதான் பார்த்துவிட்டு வருகிறேன் என்று அவரைத் தேற்றினேன். அவர் சொந்த அக்காளைப் பற்றிய கவலையைத் தீர்த்துகொள்வது போல பின் எல்லாவற்றையும் கேட்டறிந்துகொண்டார் சுப்ரத் ( சுப்புரத்தினம்).
பின்பு நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. வீட்டிலுள்ள வேலைக்காரி, செடிச்சட்டியில் இருந்த நீரில் கொசு வளர்ந்துகொண்டிருந்ததைக் கவனிக்காமல் விட்டுவிட்டதால், அரசுக்குத் தண்டம் கட்டவேண்டி வந்துவிட்டது. 300 வெள்ளி அதில் போய்விட்டது. அப்புறம் எனக்கும் மருத்துவரைப் பார்க்க வேண்டி ஏற்பட்டு அதில் ஒரு $120 .(வெள்ளி) போகவே, அக்காளுக்கு எந்தத் தொகையும் கொடுக்க முடியாமல் போய்விட்டது. அக்காள் புருடன், மதுவருந்தக் கிட்டும் தொகையில் குறைவு ஏற்பட்டுவிட்டது. அக்காள் வீட்டில் சண்டை என்று செவிகளுக்கு எட்டியது.
சில நாட்களில் தெருவில் போய்க்கொண்டிருந்த போது முன் பார்த்த அவரே எதிரில் வந்துகொண்டிருந்தார். வாழ்த்து வணக்கங்களைப் பரிமாறிக் கொண்டபின், அக்காள் வீட்டுக்குப் போய்க் கவனித்தாயா என்றுகேட்டார். உன் அக்காவைப் போய்ப் பார், போகாமல் இருக்காதே என்று மென்மையான எச்சரிக்கை செய்தார். அதிக வேலைகளாக இருந்ததால் அடுத்தமாதம் தான் போகவேண்டும் என்று சொல்லிப் புறப்பட்டேன்.
இவரும் என் அக்காள் புருடனும் ஒரே இடத்தில் வேலை செய்வதால், இருவரும் நண்பர்கள். ஒன்றாக மதுவருந்தும் அளவுக்கு நெருக்கம். இதை ஒரு மூன்றாமவரிடமிருந்து ஒருநாள் தெரிந்துகொண்டேன். அக்காள் வீட்டுக்குப் போய்ப் பார்த்தாயா என்று அவர் கேட்பதில் " அர்த்தம் "2 இருக்கிறதல்லவா? ஆனால் இது முதலில் எனக்குப் புரியவில்லை. இதை ஒருவர் சொன்னபின்தான் அதுவும் எனக்குப் புரிந்தது.
பின்னுரை:
மேல உள்ள எண்களைப் பின்பற்றிய உரை. இதை அடிக்குறிப்பு என்பர். ஆங்கிலத்தில் footnote.(s)
1புருடன் - புருவம் போன்றவன். கண்போன்றவன் என்ற பொருளில் வரும் சொல் கணவன். ( கண் அவன் > கண்ணவன்> கணவன் என்பது இடைக்குறை3)
2 அர்த்தம் - இச்சொல்லைப் பெரும்பாலும் அருத்தம் என்றுதான் பேச்சு வழக்கில் சொல்வார்கள். அருந்து - அருத்தம். இதேபோல் பொருந்து - பொருத்தம். அருத்தம் - அர்த்தம். சொற்கள் பொருளை அருந்திக்கொள்கின்றன. Meanings are fed into words. அதனால் அருத்தம் என்பது பொருள் என்று புரிந்துகொள்ளல் வேண்டும். அருந்து > அருத்து; இது ஒரு பிறவினைச் சொல். பொருத்து , இருத்து என்பன போல.
3 இடைக்குறை. இதுவும் தொகுத்தல் என்பதும் இங்கு வேறுவேறாகக் கருதப்படமாட்டா/[து]. நன்னூல் முதலிய இலக்கணநூல்கள் வேறுபடுத்தும்.. இலக்கண மாணவர்கள் அதுவே தொடர்க.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்