சனி, 28 ஜனவரி, 2023

பேச்சுமொழியில் சமீபம். கிட்ட, எட்ட.

 சமீபம் என்ற சொல்லை நாம் முன் கவனித்திருக்கிறோமா?  அஃது இங்கு இன்னும் உள்ளது.

சமீபம் என்ற சொல், சிற்றூர் வழக்கிலும் உள்ளது. நேரகாலத்தால் ஒன்று அணிமையில் இருப்பதும்  இடத்தொலைவினால் ஒன்று அருகினில் இருப்பதும் என்பவற்றில்  சமீபம் என்பது இருவகையாகும்.  இதுதவிர,  கிட்ட  எட்ட என்ற பேச்சுமொழிச் சொற்களும் இருந்து நம் பேச்சுத் தமிழை மிக்க வளம்பொருந்திய மொழியாக்குகிறது.

மனித வாழ்வில் எப்படித் தொலைவு ஒரு பொருண்மையுள்ள கருத்தாகத் தோன்றி உதவுகிறது?    வாழைப்பழம் உண்ண விரும்பும் மனிதன், அக் கனிதரு மரம் அருகில் உள்ளதா  என்று அறிய விரும்புவான்.  கிட்ட இருக்கிறது, போய் எடுத்துவருகிறேன்  என்று கிளம்பிடுவது இயல்பாக நடைபெறுவது.   கிட்ட -  கிடைத்திடும் தொலைவு  .  ஒன்றை  முயற்சி மேற்கொண்டுதான் அதை எட்டிப் பிடிக்கவேண்டிய நிலை இருக்குமானால்  எட்ட என்ற சிறு எச்சவினை, இதை நன்றாகக் குறிக்கின்றது.

தம் என்பதே சம் என்பதன் மூலம்.  தம் என்பது பன்மை. மகர ஒற்று அடிநாளில் பன்மைப் பொருள் தந்தது. சீனமொழியிலும் அஃது பன்மை காட்டுவதுண்டு. அப்போது மகரத்தோடு அன் கலந்து முடியும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

வியாழன், 26 ஜனவரி, 2023

அகப்பை, ஆப்பை, சட்டகப்பை , சிரட்டை.

 சட்டிக்குள் இருக்கும் குழம்பை சோற்றுக்குப் பரிமாறும் பொழுது,  சிந்திவிடாமலும் சுற்றிடத்தை அழுக்குப்படுத்திவிடாமலும் வெளியிலெடுத்துச் சாப்பிடும்  மேசைக்குக் கொண்டு  செல்லுதல் வேண்டியிருந்ததனால், ஓர் அகப்பை தேவைப்பட்டது.  பழங்காலத்தில் தேங்காய்ச் சிரட்டைகள் இதற்குத் உதவின.  அகப்பை என்பது இதற்குப் பெயர்.  குழம்பை அகப்படுத்தி ப் பின் இலையில்   பெய்யும் கருவி என்னும் பொருள் இன்னும் இதில் காணக்கிடக்கின்றது.  பெய் என்பது எடுத்தலைக் குறித்தது. எடுப்பது பெய்தற்பொருட்டு என்பது தொக்கது.

சட்டி என்பது குழம்பை  அட்டி   (சமைத்து) அணியமாக்கும்  (தயார்ப்படுத்தும்)  அடுபாத்திரம்.  அடுதல் - சமைத்தல்.  அட்டி -  சமைபானை.  அகப்பைக்குச் சட்டுவம் என்ற பெயரும் ஏற்பட்டது.   அடு> சடு> சடு+ அம் >  சட்டுவம் ஆகும். இங்கு,  சடு என்பது சட்டு என்று இரட்டித்தது.

பகு > பா என்று திரிந்தது போலுமே,  அக என்பது ஆ என்று திரிந்து,  அகப்பை என்பது ஆப்பை ஆனது.  உட்பெய்துவைக்க உதவுவது  பெய்> பை ஆயிற்று.

உடலானது,  வயிறு, கணையம்,  ஈரல், நுரையீரல்,  சிறுநீர்ப்பை இன்னும் உள்ள உறுப்புகளை உள்ளடுக்கி வைத்திருக்கும்  பெரும்பை.  உள்ளுறுப்புகளை அடுத்தடுத்து  அடுக்கி வைத்திருக்கிறது நம் உடம்பு..  அடுக்கு என்றவினைச்சொல்லிலிருந்து,    அடு> சடு> சடு+ அகம்>  சட்டகம்,  உடலைக் குறிக்கிறது.  அகர முதலாயின சொற்கள், சகர முதலாகும்.   அமண-  சமண் என்பது இதற்கு எடுத்த்துக்க்காட்டு.  உடல் என்பது ஒரு பைதான்.  சட்டகப்பை என்பது பொருந்திய அமைப்புச்சொல்லே ஆகும்.

அடு(தல்)  ( சமைத்தல் )  என்பது சடு என்றும் திரிதலால்,   குழம்பை எடுக்கும் அடுப்படியில் பயன்படுத்தும் அகப்பையும்  சட்டகப்பை எனப்படும். சில அகப்பைகள்,   தட்டு இணைக்கப்பட்டிருப்பன வாகும்..  தோசை திருப்புவதற்கு இது உதவியானது.  தட்டு அகப்பை >  சட்டகப்பை என்றுமாகும்.  

ஒன்றின் மேற்பட்ட பொருளைத் தரவல்லது சட்டகப்பை என்னும் சொல்.

ஓட்டாங்கச்சி,  கொட்டாங்கச்சி, சிரட்டைக்கச்சி, கொட்டகச்சி என்பன ஒரு பொருளன.  இரண்டாய் உடைந்த தேங்காயில்,  இரு பாகங்கள்.  ஒன்று ஒரு கைப்பக்கம், இன்னொன்று இன்னொரு கைப்பக்கம்,  என இரு பக்கங்கள் (கைப் பகுதிகள் ) எனவே,  " கை -  கைச்சி". என்று சொல்லப்படும்.  

தேங்காய் உடைத்தால் இருகைப்பாலன வாகும்.   கச்சி > கைப்பாற்று.

சிறு அடு ஐ >  சிரட்டை.   சிறட்டை என்றும் எழுதப்படும்.

தட்டு அகப்பை என்பதே சட்டகப்பை என்று திரிந்தது.  இதைச் சட்-டகப்பை என்ற படி உணர்க.   சட்ட - அகப்பை என்று பிரித்து  ஒலித்தால் இதன் பொருள் வழுவும்.

மெய்ப்பு பின்னர்.















பாகவதர்

புதன், 25 ஜனவரி, 2023

"பைண்ட்" என்ற ஆங்கிலச் சொல்லும் பந்து என்பதும்.

 தமிழ்ச்சொற்கள்  அவற்றோடுகூடச் சங்கதச் சொற்களும் ஐரோப்பிய மொழியில் பலவாறு கலந்துள்ளன என்பதையும்,  தமிழ்ப் புலவர்கள் உரோமபுரிக்கு அழைத்துச் சொல்லப்பட்டு அவர்கள் அளித்த பல்வேறு சொற்கள் எப்படித் தெரிவுசெய்துகொள்ளப்பட்டன என்பதையும் அறிந்துகொண்டால்,  தமிழ் உலக மொழிகட்கு எவ்வாறு ஊட்டம் கொடுத்துள்ளது என்பதை அறிந்து இன்புறலாம்.

சென்னைப் பல்கலைக் கழக  வரலாற்றுப் பேராசிரியர் ஒருவர் இதிலீடுபட்டு உழைத்துள்ளார் என்பதை,  மயிலை சீனி வேங்கடசாமி தம் நூலில் நினைவுபடுத்தியுள்ளார்.  இஃது முன் எவராலும் கண்டுபிடிக்கப்படாத வரலாறு அன்று.

இரண்டாயிரமாம் ஆண்டு வாக்கில்தமிழ்ச்சொற்களின்  ஒரு பெரிய பட்டியலே இணையத்தில் கிடைத்தது.  இப்போது அது மறைந்த இடம் தெரியவில்லை. இதுபோன்ற வரலாறுகளைப் பகர்ப்புச் செய்து சேமித்து வைப்பது உதவக்கூடியது ஆகும்.  ஒருவர் கண்டுபிடித்தது காணாமற் போகாமலிருப்பது முதன்மையன்றோ?

நாம் கருதுவதற்குரியது "பெந்த்"  என்ற  இந்தோ ஐரோப்பிய அடிச்சொல் ஆகும். இதனின்றே  பைண்ட் என்பது வருகிறது.

கட்டுதல் என்பது ஒன்று மற்றொன்றைப் பற்றிக்கொண்டிருக்கச் செய்வதே. பற்று என்பது அதுவன்றி வேறில்லை.

பல் > பன்  ( லகரனகரத் திரிபு  ,  அல்லது போலி).

பன் + து > பந்து.  ( பந்து என்ற கயிற்றினால் உண்டையாகக் கட்டப்பெற்றது).

பந்து   பந்தம்  -  உறவுக் கட்டு.

எ-டு  இன்னொன்று :  எல் > எல்+பு > என்பு.  (எலும்பு)

எல்லு : மலையாளம்.

எற்புச்சட்டகம்  , உடலுக்கு இன்னொரு பெயர்.     எற்பு என்பதும் எலும்பு.

எல்+பு என்பது  எல், எலும்பு,  என்பு, எற்பு என்று பல்வடிவம் கொள்தல் காண்க.  அன்பு என்பது அற்பு என்றும் வருமாறு அறிக. ( எ-டு: அற்புத்தளை)

முன் - முந்து,  பின்- பிந்து என்பவற்றில் இத்தகைய புணர்ச்சித் திரிபுகள் வரல் கண்டுகொள்க.

ஆகவே,  பந்து, >  பைண்ட் என்பதன் திரிபையும் பொருளணிமையையும் கண்டுகொள்க. 

 அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்