புதன், 23 நவம்பர், 2022

சத்துரு என்பது தமிழ்த் திரிபுச் சொல்.

 இன்று சத்துரு என்ற சொல்லைச் சிந்தித்து அறிந்திடுவோம்.

நட்புடன் நம்முடன் இருப்பவனை நாம் நண்பன் என்கிறோம்.  ஆனால் சத்துருவுடன் நட்பு என்பதோ இல்லை.  நட்பு அற்றொழிந்த நிலையில்தான்  சத்துரு இருக்கிறான் என்பது இச்சொல்லுக்குப் போதுமான சொல்லமைப்பு விளக்கமாகும்.

நட்பு அற்று ஒழிந்த நில்லையில் எதிர்ப்பு மனப்பான்மை உருவெடுத்துவிடுகிறது.

அகரத் தொடக்கத்துச் சொற்கள் சகரத் தொடக்கமாகத் திரியும். பலசொற்களை முன் இடுகைகளில் காட்டியுள்ளோம்.  ஒன்று இவண் நினைவுபடுத்திக் கொள்வோம்.  

அமண் >  சமண் > சமணர்.

இன்னொன்று வேண்டுமானால்,  அடு> சடு> சட்டி  ( சடு+ இ).

அடு என்பது அடுப்பில்வைத்துச் சூடேற்றுவது.

இனியும் ஒன்று:  அடர்-  அடை > சடை.  இது ஜடை என்று உருக்கொள்ளும்.

அடர்-  அடை முதலிய ஒரு மூலத்தில் தோன்றியவை.  அடிச்சொல்  அடு என்பது.

அடர்முடி > ஜடாமுடி. 

நட்பு அற்று உருவெடுப்பவன் :  அற்று உரு>  அற்றுரு>  அத்துரு>  சத்துரு.

இப்போது இதன் தமிழ்மூலம் நல்லபடி புரிந்துகொள்ளும் நிலைக்கு உங்களைக் கொண்டுசெல்கிறது.

இன்னொரு சொல்:  சகி என்பது.  ( தோழி).

அகம் >  அகி > சகி.

தலைவியுடன் அகத்தில் தங்கிப் பார்த்துக் கொள்பவள்:  சகி.

அகக் களத்தி >  சகக்களத்தி > சக்களத்தி.   அ - ச.

இயற்சொற்களுக்கு அடுத்து திரிசொற்களைக் கூறினார்  தொல்காப்பிய முனிவர்.  காரணம் என்ன?   திரிசொற்கள் இயற்சொற்களுக்கு  அடுத்துக் கூடுதலாக இருந்தமைதான்.

இன்று யாம் கணக்கெடுக்கவில்லை. திரிசொற்கள் பெருகி, இனமொழிகளும் தோன்றிவிட்ட படியால், திரிசொற்களே மிகுதி. 

எடுத்துக்காட்டு:  

வரு  ஓ >  ( பரு ஓ) > பாரோ    (  வருவாய், வாராய்).

இன்று, அற்று ( நட்பு அற்று) உருவெடுப்பவனே சத்துரு என்றறிக.

இந்த மாதிரித் திரிபுகளெல்லாம் இலக்கணங்களில் காட்டப்பெறா.

( மா = அளவு. திரி =  திரிக்கப்பெற்றது.   மாதிரி - அளவாகத் திரிக்கப்பட்டது.).

சத்துரு:  பிற வகையில் திரிந்ததாகவும் கொள்ளும்  இச்சொல் ஒரு பல்பிறப்பி.

"சத்துராதிப்பயல்" என்பது சிற்றூர்வழக்கு. சத்துரு என்பது சோதிடர்களுக்குப் பிடித்தமானது  ஆகும்.  சத்துரு தொல்லை என்பர்

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.



வெள்ளி, 18 நவம்பர், 2022

காரணம், காரணி சொல் புரிதல்.

 கரு என்பது ஒரு பெண்ணின் உள்ளிருப்பது. அதை வெளித்தெரியும் பிற அறிகுறிகளால் தெரிந்துகொள்கிறோம்.

கருமேகத்தில் உள்ளிருக்கும் நீர் நமக்குக் கண்ணுக்குத் தெரியவில்லை. அதிலிருந்து மழைபொழிவதால்,  நாம் நீரிருப்பதை  அடையாளம் கண்டுகொள்கிறோம்.

கரு >  கருது > கருதுதல்.

கருவுற்ற மானிடப் பிறவியும்  கருக்கொண்ட மேகமும் நம் முன்னறிவினால் அறிந்துகொள்ளப்படுவன போலுமே,  கருதுதல் என்பது மனவுணர்வினால் நடைபெறுகிறது.  கருது ( வினைச்சொல்) > கருத்து ( பெயர்ச்சொல்) noun formed from a verb.

ஒரு நிகழ்வுக்கான காரணம் காரணி எல்லாம் இத்தன்மையவாம்.

கரு என்பதிலிருந்து காரணம், காரணி என்ற சொற்கள், தமிழில் அருமையாக அமைந்தவை.  வெளியில் தெரிவன அல்ல.  சுழியனுக்குள் பாசிப்பருப்பும் சர்க்கரையும் போல.  மேலுள்ள மாவுத்தோலை நீக்க,  இனிய உள்ளிருப்பு நாவில் பட்டு இனிமை தருகிறது.

கருது என்ற வினையமைப்பை உணர்ந்து யாம்  இன்புற்றோம்.

தமிழ் என்ற சொல்லுக்கே 100 பொருள் சொன்னார் பெரும்புலவர் கிருபானந்த வாரியார்.  என்னே சொற்களின் இனிமை.

கருத்தினை அண்மி  ( நெருங்கி அணைந்து)  நிற்பன காரணம், காரணி எல்லாம்.

கரு +அண் + அம் >  கார் + அண் + அ,ம்>  காரணம்.

கருமேகங்கள் சூழ்ந்து மழைபெய் காலமே கார்காலம்.

கார்மழை  -  இவ்வழக்குகள் தெளிக.

காரணங்கள் உடன் தெரிவதில்லை.  சிந்திக்கத் தெரிவன---- கண்களுக்கு,  கருத்தும் மனத்துக்கு.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்.

போரும் மனிதனும்

 போரொன்று வருவதற்குக் காரணிகள் பலவே

போரில்லா உலகெனலோ  ஓர்கனவாம் உண்மை!


வெற்றியதும் தோல்வியதும் கோள்களினோர் தரவே

பற்றிலன்நான் என்பவனைப் பரிந்தணைத்தல் வேண்டா.


பிறர்தருதல் இன்றிவரும் பிணிநலமென் றெல்லாம்

இறைகருணை என்பார்க்கோ  ஒருதுன்பம் இலதே.


செல்வரைக்கும் பற்றிலராய்  இங்கிருப்பார் தமக்குச்

சொல்வதற்குத் துயரமிலை   சூழ்ந்திருவாழ் மனமே.


உரை:-

காரணி -   ( இதன் அடிச்சொல்:  கரு.  இதிலிருந்து வருவது: கருது-தல்..  இதனால் இது உண்டானது என்று கருதுதலே காரணம், காரணி எல்லாம்.

கரு > கார் + அணம் > காரணம்;  கார் + அணி >  காரணி.

கருதும் எதையும் அண்மி நிற்பது காரணி.  )

இந்த அடிச்சொல்: கரு, --  கருப்பு என்றும் பொருள் உள்ளது.

ஓர் தரவு - ஒரு தரவு. கவிதையில் ஓர் தரவு என்றும் வரும்.

இதற்கான அனுமதி தொல்காப்பியனார் வழங்கியுள்ளார்.

பரிந்தணைத்தல் -  இரக்கமுற்று அரவணைத்தல்

தரவு -  விளைவு.  தரப்படுவது.

பிறர் தருதல் - "மற்றவர்களால் இது வந்தது"  என்று கருதுதல்.

செல் வரை -   இறக்குமட்டும்,  சாகும் வரை

பற்றிலராய் -  யான் எனது என்ற மனத்தொடர்பு இல்லாதவராய்.

சூழ்ந்து -  ஆலோசித்து;  இரு =  இருப்பாயாக;  வாழ் -  வாழ்க.


இதன் கருத்து:

வருகின்ற போரும் நிற்கின்ற போரும் என்றெலாம் நம் செயலால் வரவில்லை, கோள்களினால் வருகின்றன என்றிருப்பவர்க்கு,  துன்பங்களிருந்து தம்மைக் கூறுபடுத்திக்கொண்ட  தன்மையதால்,  எந்தக் கெடுதலும் இல்லை. இத்தகையவனுக்கு இரத்த அழுத்தம் முதலிய துன்பங்கள் விளைவதில்லை.  இவனுக்குப் பிறர்தரும் இரக்கமும் தேவைப்படுவதில்லை. எல்லாம் இறைவன் செயல்  என்பவன் தன்  பாரத்தை வெளியில் எடுத்துவிடுகிறான்.  அவனுக்குத் துன்பமில்லை. பற்றிலனாய் இருக்க.   சொல்வதற்குத் துன்பக் கதைகள் இல்லை.  ஆய்ந்திருந்து வாழ்க என்பது இதன் பொருள்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்னர்.