செவ்வாய், 15 நவம்பர், 2022

சொல் நடுவில் வரும் திரிபு. சொல்: செதிள்.

 அசடு என்பது இசடு என்று வரும் என்றாலும், இந்த உதாரணம் அல்லது காட்டு,  ஓர் அளவிற் பட்டதே.  ஏன் இவ்வாறு சொல்கிறோம் என்றால்  சொல்லின் முதலெழுத்தில் மட்டும் இங்ஙனம் திரிதலுண்டு என்பதை மட்டுமே இது காட்டுகின்றது. ஆதலின் இது ஓர் எல்லையுட் பட்டதே எனவேண்டும்.

சொல்லின் தலையெழுத்தில் வரும் திரிபினை இலக்கணியர், " மொழிமுதற் றிரிபு" என்பர். இந்தக் குறியீட்டில், மொழி என்ற சொல்லுக்கு,  "சொல்" என்பதே பொருள். பாசை ( பாஷை) அல்லது பேச்சு என்பது பொருளன்று.

பேசு > பாசு > பாசை > பாஷை. இதை அறிஞர் பிறரும் கூறியுள்ளனர்.

சொல்லின் நடுவிலும் ( அதாவது சொல்லிடையும் )  இகர -  அகர அல்லது அகர- இகரத் திரிபு வரும்.

இப்போது செதிள் என்னும் சொல்லைக் காண்போம்.  இது சிதள் என்றும் திரியும்.  இங்கு -  தி ( இ ) என்பது  த ( அ) என்று திரிந்துள்ளது. இரண்டும் இலக்கியத்துட் காணப்படுவன ஆதலின்,  கற்றோர் வழக்குடையது ஆகும்.

அசடு என்பது இசடு என்று வரலாம்,  வரட்டும்.  அசடு என்பது பிசடு என்றுவரலாமோ எனின்,  அது வாய்மொழியில் வருகிறது.   " அசட்டுப் பிசட்டு" என்று வரலாம்.  அசட்டுப் பிசட்டு என்று பிதற்றுகிறானெனின்,  மடத்தனமாகப் பேசுகிறான் என்பதே பொருள்.

செதிள் என்பது செதில் என்றும் வரும்.  இறுதி மெய்யெழுத்து ளகரம் லகரமாதல்.

பின்னர் செதிலென்பது  செலு என்றுமாகுமே! பின்னர் இன்னும் திரிந்து சிலாம்பு என்று இன்னொரு சொல்லாகும்.  கன்னடம்: சிலு.  ( செலு > சிலு).

திரிபுகட்கும் எல்லையுண்டோ?   உண்டு.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின் 


திங்கள், 14 நவம்பர், 2022

அசடு, இசடு கசடு முதலிய சொற்கள்.

தகர சகரப் போலியில் நாம் கவனித்துக்கொண்டிருக்கும் "இந்தச் சொல் "  (ஏதேனும் ஒன்று)  --- திரிந்திருக்கிறது என்று சொல்லுகையில், அதை இணையத்தின் மூலம் படிக்கும் ஒரு தமிழறிந்தார் தம் மனத்தினில் இதனைப் பதிவு செய்திருப்பார் என்று நாம் நினைக்கவில்லை. எனினும் எல்லா வாசிப்பாளர்களும் ஒரே மாதிரி அவ்விடுகையைக் கடந்து சென்றிருப்பர் என்று கூறிவிடவும் முடியாது.  ஓரிருவர் அதைப் பசுமரத்தாணிபோல் மனத்தினுள் அமர்த்திக்கொண்டிருப்பர். பெரும்பாலோர் இன்னொரு முறை அதைச் சந்தித்தால் ஓரளவு அது அவர்களுக்குத் தெரியவரும்.

ஒரு மனிதன் ஒன்றை 5 முறையாவது கடந்து சென்றிருக்கவேண்டும். அப்போதுதான் ஒருவன் அதை நினைவுகூரும் திறத்தினை அடைவான் என்று சொல்லப்படுகிறது.  இவை எல்லாம் பிறர்தரு ஆய்வு முடிவுகள்.

கல்விக்குப் பெரிய எதிரி எதுவென்றால் அது மறதி தான்.  கல்வி என்பது பெரிதும் நினைவாற்றலை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுகிறது.  

நினைவாற்றல் தடுமாற்றம் பள்ளிகளில் போலவே வழக்குமன்றச் சாட்சிகளிடமும் காணப்படுவதொன்றாகும். மாறுபாடுகள் எனப்படும் இவற்றையெல்லாம்  முறையாக உணர்ந்து இறுதியில் தீர்ப்பை உரைக்கும் நீதிபதிகள் பாராட்டுக்குரியவர்கள் ஆவர்.  அவர்களின் வேலை மிக்கக் கடினம்

பகர்ப்புச் செய்வதென்பது  இன்னும் எளிதானது.  இதைக் காப்பி அடிப்பது என்பர்.  காப்பி அல்லது பகர்ப்புச் செய்வோன் அறிந்துகொண்டது சொற்பமே.

இப்போது ஆய்வுக்கு வருவோம்.

இகரம் அகரமாகத் திரிவதென்பது,  தகரச் சகரப் போலியினும் குறைவான நிகழ்தலை உடையதுதான்.  இதழ் என்பது  அதழ் என்று திரிதல் போலும் நிகழ்தல்   சொற்களின் எண்ணிக்கையில் குறைவே  ஆகும்.   சில முன் இடுகைகளில் எடுத்துக்காட்டப் பட்டன.

இசடு என்பதும்  அசடு என்று வரும்  அல்லது ஒன்று மற்றொன்றாக வரும்.  அசடு என்பது மூடத்தன்மையையும் குறிக்கும்.  புண்ணின் வடிநீர் அல்லது குருதி,  மேலாகக் காய்ந்து,  நன்கு  காய்ந்த பின் எடுபட்டுப் புதிய தோல் முளைக்கும்.  இதை அசடு என்பர்.  புண்வடிகை  காய்ந்து பெயர்தல்.   

இசடு என்பது கசடு என்று திரிதல் காணலாம்.   கசடு என்பது குற்றம் குறை என்றும்  அணியியல் வகையில் குறிக்கும்.  " கற்கக் கசடற கற்பவை" என்பது ஒரு குறள் தொடர்.  

வானின்மதிபோல் மேவும் வாழ்வே  இசடே இல்லாததே"  என்று ஒரு பாடல்வரி வருகிறது.  வான்மதியில் இசடு இருந்தாலும்,  எம் வாழ்வில் அது இலது என்பதை இதன் பொருளாகக் கொள்ளல் வேண்டும்.  இங்கு இசடு என்பது களங்கம் அல்லது கசடு என்று கொள்க.

இச்சொற்களின் திரிந்தமைவை இன்னோர் இடுகையில் காணலாம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

சனி, 12 நவம்பர், 2022

சொல்: மலயம், மலயமாருதம்.

 ஐ என்ற எழுத்து தமிழில் நெடில்.  இதற்கு உரிய மாத்திரை  இரண்டு.  வேறுவிதமாகச் சொல்வதென்றால்  :  கண்ணை இருமுறை இமைக்கும் பொழுது அல்லது  காலம் ஆகும்.   ஐ என்னும் எழுத்து,  சொல்லில் முதலில் வரும்.  எடுத்துக்காட்டு:  ஐயனார்.,  ஐயா  என்பன.   சொல்லின் இறுதியிலும் வரும்:  எடுத்துக்காட்டு:  மலை,  கலை,  தொகை.   ல்+ ஐ: லை;  க் + ஐ = கை.  மெய்யுடன் கலந்து இறுதியில் ஐ நிற்கிறது.

ஒலிநூலின் படி,   ஐ என்பது குறுகி ஒலிக்கும் இடங்களும் சொல்லில் ஏற்படும். இந்த வாக்கியத்தைப் பாருங்கள்:

இவன் முன்னர் கலையையும் பழித்தான்,  பின்னர் நம் நிலையையும் பழித்தான்.

இது வாயால் ஒலிக்கும்போது,  "கலயயும்",  " நிலயயும்"  என்று உங்களை அறியாமல் குறுகிவிடலாம்.    இது ஒரு குறுக்கமே ஆகும்.  பேச்சில் குறுகுவது ஒரு பொருட்டன்று.  கவிதையில் மாத்திரை  அல்லது ஒவ்வோ ரெழுத்தையும் ஒலிக்கும் காலம் முதன்மை பெறுவதால், ஐகாரம் குறுகுவது ஐகாரக் குறுக்கம் எனப்படும்.   இவ்வாறு குறுகும்போது, இசைமுறிவு ஏற்படாமல் கவிஞன் பார்த்துக்கொள்ளவேண்டும்,    ஐகாரம் முழு அளவில் ஒலிக்கும்போதும் இதைக் கவனிக்கவே வேண்டும்.

மலை என்ற முழுச்சொல்,   அம் விகுதி பெற்று,  மலையம் என்றாகும்.   அப்போதும் மலையம் என்பதற்குப் பொருளில் ஒன்றும் வேறுபாடில்லை.  இருப்பின், அம் என்பது அழகாதலின்,  மலையழகு என்று விரித்துரைக்கலாம்.  எழுதுவோன்  மலை என்ற இடம் குறித்தானோ?  அல்லாது அதனழகு குறித்தானோ எனின்,  அழகைக் குறிக்கவில்லை,  வெறும் மலையைத்தான் சொல்கிறான் என்றுணர,   அம் என்பது வெறும் சாரியை என்று ஆகிவிடும். இது பொருள்கோள் என்பதில் கவனிக்கவேண்டியதாகும். உரையாசிரியன் சிறந்த பொருளை எடுத்துக்கூறுவது என்பதைத் தன் கடனாகக் கொண்டவன் ஆவான்.

மலை, மலையம் என்பவற்றில் மலையம் என்பது மலயம் என்று குறுகுவதுண்டு.  இவ்வாறு கவிதையிலன்றி, இயல்பாகவே பேச்சில் குறுகுவதுண்டு.  இதற்குக் காரணம் கூறவேண்டின், முயற்சிக் களைப்பு எனல் ஏற்புடைத்து. எனவே, சொல் திரிபடைந்தது.  இதுவே உண்மை.  இது ஒன்றும் பிறமொழி ஆகிவிடாது. இவ்வாறு திரிந்தபின், மாருதம் என்ற சொல்லுடன் கலந்து, மலயமாருதம் ஆகும். 

இனி இன்னொரு வகையில் சிந்திப்போம்.  மலை என்று மனிதன் மலையைக் கண்டு மலைத்து நின்றதனால் ஏற்பட்ட சொல் என்பதுண்டு.  இருக்கலாம்.  மல் என்ற அடிச்சொல் வலிமை குறிப்பதால்,  மல் > மலை என்றும் வந்திருக்கலாம். அப்படி வரவில்லை என்பதற்குக் காரணம் எதுவுமில்லை.  மல்> மல்+அ + அம் >  மலயம் என்று வந்துமிருக்கலாம்.  அ என்பது இடைநிலை;  அம் ஈறு அல்லது விகுதி.  மல்- வல் போலியுமாகும். மலயம் என்பது மலை குறிக்கும் சொல்லே. "ஓங்குயர் மலயம்" என்கின்றது மணிமேகலைக் காப்பியம். மலயம் என்பது மலை.

மலயமாருதம் என்பது அழகிய தமிழ்ச்சொல்லே. ( சொற்றொடர்  அல்லது கூட்டுச்சொல்.  மருவிச்செல்வது காற்று.  மரு+து+ அம்> மாருதம்  முதனிலை நீண்டு திரிந்த பெயர்.  மருவு என்ற வினையும் மரு எனபதனை அடியாய்க் கொண்டதே ஆகும்.  

பரத்தல் வினை:    பர >   பார் ( உலகு).   பரந்து விரிந்த உலகம் என்பது,   வியனுலகம் என்றார் தேவரும் திருக்குறளில்.  இதுவும் முதனிலை  நீண்டு திரிந்து பெயரானதே ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.