புதன், 2 நவம்பர், 2022

மதியமும் ( நிலவும்) காலக்கணக்கும்.

 மாதம் என்ற சொல்லின் பொருண்மையைப் பலவாறு ஆய்ந்துள்ளனர்.  காலத்தை அளவிடற்கு பண்டையர்க்கு ஓர் அளவை அல்லது "அளவுக் கருவி" இருந்ததென்றால்  அது நிலவு அல்லது நிலா எனப்படும் மதியமே  ஆகும்.  சைவ ஏடுகளில்  மதியம்  ( மாலை மதியம்)  என்ற சொல்லமைப்பு காணப்படுகிறது. காலத்தை மதிக்க அல்லது மதிப்பீடு செய்ய மனிதற்குக் கிட்டிய கருவி அதுவாம்.

அது புவிக்குத் தெரியாமல் இருக்கும் காலம் "அமாவாசை" எனப்படுகிறது. நிலவு இல்லாமற் போய்விட்டது என்று பண்டை மக்கள் நினைக்கவில்லை. அது இருளில் மூழ்கிவிட்டது என்று அவர்கள் அறிந்திருந்தனர். அது இருட்டிடமாக மாறிவிட்டது,  ஆனால் நிலவு அங்குதான்* உள்ளது!  இந்த இடுகைகளைப் படித்து அறிந்துகொள்க.

https://sivamaalaa.blogspot.com/2016/01/blog-post_24.html

 https://sivamaalaa.blogspot.com/2018/04/blog-post_17.html 

இதற்குப் பொருள்:  அந்தப் பெரிய இருள் இடம்,   அழகிய இருள்சூழ் இடம்.  அ(ம்) என்பது சுட்டாகவுமிருக்கலாம்,  அழகுப் பொருள் படுவதாகவும் இருக்கலாம், ஏன் இவ்வாறு இருவழியிற் சொல்கிறோம் என்றால்  இவை அச்சொற்களிலே காணப்படுவதால். மா என்ற சொல்லும் பெரிது என்றும் பொருள்தரலாம்.  இருள் என்றும் பொருள்தரலாம்.  அளவு என்றும் பொருள்தரலாம். மாதம் என்ற சொல்லில் மா என்பது அளவு,  பேரளவு என்று பொருள்தரும்.  அமாவாசை என்ற சொல்,  கவிதைக்கு உரிய சொல்லாக கையாளப்படவில்லை. இதை "அம்மா வாசெ" என்றே சிற்றூரார்  ஒலித்தனர் என்று தெரிகிறது.  அமா~ என்று ஒலிப்பது பிற்காலத்தில் வந்த திருத்தம்.

அமாவாசை என்பதில் இடையில் தோன்றும் மா என்ற சொல்லும்,  மாதம் என்பதில் முதலில் வரும் மா என்ற சொல்லும்,   அளவுச் சொற்களே.  நிலக்கணக்கிலும் " மா"  என்பது "ஒரு மா நிலம் "என்று அளவே குறித்தது.  மாத்திரை என்ற சொல்லிலும் " மா" என்பது அளவுதான்.  மா என்பது பல்பொருள் ஒருசொல்.  பெருமை என்று பொருள்தரும் " மானம் " என்ற சொல்லும் அளவு, மதிப்பீடு என்பவை குறிக்கும் சொல்லே.   மதிப்பு என்ற சொல்லிலும் மதி என்பதிலும் மதி என்பது அளவு, அளவிடுதல் என்னும் பொருளதே.

மா - மதிப்பு.  மாமன் - மதிக்கப்படுபவன்,  மாமா.  பெரியோன்.

மாகக்கல் -  கானகத்தில் கிடைத்த ஒரு கனிமக்கல்.

மாக்கடு -  போற்றப்பட்ட ஒரு கடுக்காய் வகை.

மேஷர் ,  மீட்டர் என்ற பலவற்றிலும் அளவு உள்ளது.  அவற்றை இங்கு விட்டுவிடுகிறோம்.

எல்லாம் மகர வருக்கச் சொற்கள்.

மதித்தல் என்பதே இவற்றுக்கெல்லாம் உறவுச்சொல். வினைச்சொல்.

மதி -  வினைச்சொல்.  ஏவல் வினை.

மதி+ அம் =  மாதம்.  [  முதனிலை நீண்டு விகுதி பெற்ற சொல்.]

எடுத்துக்காட்டு:  சுடுதல் , வினைச்சொல். verb.  சுடு> சூடு ( முதனிலைத் திரிபு), சூடு> சூடம்> சூடன்.  காம்ஃபர் என்னும் எரிக்கத் தகுந்த வெண்பொருள்.  அம், அன் விகுதிகள்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

*அங்குத்தான் - not favoured.  வலிமிகல்

ஒரு திருத்தம்: 3.11.2022 11.17

சனி, 29 அக்டோபர், 2022

கோயிற் பூசைகளில் உள்ள நடைமுறைகள்:

2018ல் நடந்த மகாசிவராத்திரி தொடர்பான விளக்கம்: 

சிவபெருமானுக்கு ஆண்டுக்கு ஓர் இராத்திரி வருகிறது. இதை வெகுவிமரிசையாகக் கொண்டாடுகிறோம். கடந்த காலத்தில் திருமதி வனஜா அம்மையார் பற்றர் சிலருடன் சேர்ந்துகொண்டு இக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதி  முழுமையையும் எடுத்துச் சிறப்புகள் செய்ததுண்டு. இவர்தம் குழுவிற்குத் துர்க்கையம்மன் சுமங்கலிப் பெண்கள் என்று கோவில் அருச்சகர்கள் பெயர் தந்திருந்தனர். இக்குழு ஒரு நாற்பத்தைந்தாண்டுகள் பல இறைவணக்க விழாக்களிலும் பங்கு பற்றியுள்ளது. இதை இறையன்பர்கள் பலர் அறிவர்.

2218 ஆண்டு வாக்கில் இதற்கான கோயில் கட்டணம்  ( சிவராத்திரிப் பகுதிப் பூசை)   ஆயிர சிங்கப்பூர் வெள்ளிகளைத் தாண்டிற்று. இதைக் கீழ்க்கண்ட படத்திற்  காணலாம்.



20.3.2018 கோயில் கட்டணம் செலுத்தியது.

மலர்கள், மலர்மாலைகள், அம்மன் சிவன் அலங்காரங்கள்,  பிரசாதம், அன்னதானம். கோவிற் கட்டிட அலங்காரம், வரிசை எடுக்கும் பொருள்கள், எல்லாவற்றுக்கும் ஏற்பாடு செய்யும் நாம் செலவு செய்யவேண்டும். இவையும் இன்னபிறவும் கோவில் செய்வதில்லை. இது எல்லோருக்கும் தெரிவதில்லை.  நாமும் சொல்வதில்லை. நன்றி வணக்கம்.

ஐயர்கள் மந்திரம் சொல்ல மட்டும் $1450 போல் செலவு.  அன்றைத் தினம் கோயிலில் எப்போதும் வேலை செய்யும் ஐயர்கள் பற்றாமையால்,  வேறு கூடுதல் ஐயர்களும் தேவைப்படும்.  இதையும் கோயில் சமாளிக்கவேண்டும். சம்பளம் இல்லாமல் யாரும் வேலை செய்வதில்லை.  கோயில் சம்பளமே போதாமையால்,  ஐயர்களுக்குப் பூசைகள் முடிந்தபின்,  தட்சிணை ( $100 - 150), மேள தாளக்காரர்களுக்குத் தட்சிணை, சிப்பந்திகட்குத் தட்சிணை,  வேட்டி - துண்டுகள், பூசைப் பலகாரங்கள் என்று பலவுண்டு.

பூசைகள் செய்யப்போய் செலவுகள் தாங்காமல் ஓடிப்போனவர்களும் உண்டு.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

குறிப்புகள்:

விமரிசை -  https://sivamaalaa.blogspot.com/2015/08/blog-post_11.html  ( விம்மி -  மிகுந்து;  இசைதல் -  இயைதல், பொருந்துதல்.   வீங்கிள வேனிலும் - (திருமுறைகளில் உள்ள பதப்பயன்பாடு). விம்முதல் - பெருகுதல்..

வெள்ளி, 28 அக்டோபர், 2022

நிர்வாணம் - நிலை, அமைப்பும் பொருளும்.

 இன்று நிர்வாணம் என்ற சொல்லைச் சிந்தித்து அறிவோம்.

இது மிகப் பழைய சொல்லாகும்.  புத்தர்பெருமான் நிர்வாணநிலை பற்றிப் பேசினார். ஆங்கிலத்தில் "நிர்வாணா" என்று இது சொல்லப்படும்.   இதை வரையறை செய்து மதநூல்கள் விளக்கும்.

இஃது விடுதலை பெற்ற நிலையைக் குறிக்கிறது.  மறுபிறவியும் இறப்பும் இல்லையாகிவிட்ட நிலை.  அதாவது கருமம் தீண்டாத தூயநிலை.  இங்குப் பற்று இல்லை.  ஆசை இல்லை.  அதனால் துன்பமுமில்லை.  இந்து வாழ்வியல் புத்த மதத்தையும் முந்தியதாதலின்,  இக்கருத்துகளைப் புத்தர் இந்து மதத்திலிருந்து பெற்றார் என்று ஆய்வாளர் கூறுவர்.

இதனைச் சாத்தனார் மணிமேகலையில்:

பிறந்தார் உறுவது பெருகிய துன்பம்,

பிறவார் உறுவது பெரும்பே  ரின்பம்,

பற்றின் வருவது முன்னது பின்னது

அற்றால் வருவது அறிக

என்று எடுத்துக் கூறுமாறு காண்க.   குறளில்:  பற்றுக பற்றற்றார் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு  என்று அழகாகக் கூறுமாறும் காண்க.   மண்ணாசை,  பெண்ணாசை , பொருளாசை என்று மூன்று கூறுவர்.  பெண்ணாசை என்றது ஆண் பெண்மீது கொள்ளுமாசையும் பெண் ஆண்மீது கொள்ளுமாசையும் ஆகும். இதை இற்றையர்,  பாலியல் ஆசை என்று கூறுவர்.  ஆசை யாவது,  அசைவற்ற மனம் அசைந்து பற்றுதற் கான மூவாசை ஆகும்.  அசை-   ஆசை , இது முதனிலை நீண்டு திரிந்த தொழிற்பெயர்.  சுடு>  சூடு என்பது போலுமிதாம்.

பொருள் சொல்லப் புகுந்து நீண்டு விட்டது. என்றாலும் நிர்வாணம் என்பது அறிந்துகொண்டோம்.

நிர்வாணம் எனற்பாலது நிர்மாணம் என்றும் வழங்கும்.  இவ்வடிவமும் அகரவரிசைகள் இயற்றினார்க்கு அகப்பட்டுள்ளது. புத்தகராதிகளில் கிடைக்காமற் போகலாம்.  ஒரு 200 ஆண்டுகட்கு முன் வந்த பதிப்புகளிற் காண்க.

வகரமும் மகரமும்  மோனைத் திரிபுகள் எனப்படும். " மானம் பார்த்த பூமி" என்ற சிற்றூர் வழக்கில் வானம் என்பது மானம் என்று திரிந்து நின்றதும் காண்க. இத்தகைய திரிபுதான் நிர்மாணம் என்ற சொல்லில் நிகழ்ந்துள்ளது என்று அறிக.

மாட்சி அல்லது மாண்பு நின்ற நிலையே நிறுமாண்+அம்  ஆகும். இதுவே மூலம் ஆகும்.  இது திரிந்து  நிறுவாணம்> நிர்வாணம் ஆயிற்று.

முற்றத் துறந்த முனிவர்கள் எதையும் அணிவதில்லை.  இதைப் பின்பற்றியே சமணமதமும் அம்மணம் போற்றிக்கொண்டனர்.  அம்மணம். இச்சொல் இடைக்குறைந்து,   அமணம், பின் வழக்கம்போல அகரம் சகரமாகி  அமணம் > சமணம் ஆயிற்று.  அடு:( அடுதல் ) > சடு> சட்டி என்றாற்போல.  (  சடு+ இ ). டகரம் இரட்டிப்பு.

நிறுமாணம் -  நிறுவாணம் > நிர்வாணம்.

நிர்வாணம் எனின் மாட்சி நின்ற உயர்நிலை.

நின்று மாணுதல் : நிறு மாண் > நிறுமாணம் > நிர்வாணம்.

நிர்வாணா > நிப்பானா  ( பாலிமொழி)

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

மேலும் வாசிக்க:

சமணர்,  ஜெயின்:  https://sivamaalaa.blogspot.com/2021/07/blog-post_3.html