இன்று சேதாரம் என்பதென்ன என்று தெரிந்துகொள்வோம்..
கத்தி ஒன்று, கத்தரிக்காயை வெட்ட இயலாததாய் உள்ளது. அக்கத்தியை ஒரு கல்லில் தேய்த்தால் அது கூராகிவிடும். ஆனால் தேய்க்கும்போது, கத்தி கூராவதோடு, சிறிதளவு தேய்ந்தும்போகிறது. கத்தியைத் தேய்க்காமல் அதைக் கூராக்க முடிவதில்லை. இதைத்தான் கத்தியில் ஏற்படும் தேய்மானம் என்கின்றோம். இதைச் சேதாரம் என்றும் சொல்வதுண்டு.
நகை செய்யத் தட்டாரிடம் சென்று பேசும் காலை, செய்யும்போது ஏற்படும் தேய்மானத்தை வேறு சொற்களால் கூற முடியுமென்றாலும் பெரும்பாலும் சேதாரம் என்றுதான் சொல்வது வழக்கம்.
இதன் அடிச்சொல் " செது" என்பது இதிலிருந்து செதுக்கு என்ற சொல் ஏற்படுகிறது. ஒரு சிலையைச் செய்கையில், எல்லாக் கல்லையும் வீணின்றிச் செய்யமுடிவ தில்லை.
இதே அடிச்சொல்லில்
செது + ஆர் + அம் > சேதாரம் என்று அமைகிறது.
ஆர்தல் என்பது சூழநிகழ்தலையும் குறிக்கும். இது பரவற் கருத்து. ஓரிடத்தில் மட்டுமின்றி இத்தேய்மானம் சுற்றிலும் ஏற்படுவதுண்டு. பொன்னோ இரும்போ உருக்கப்படுகையில் எந்த இடத்திலும் செய்பொருளில் தேய்மானம் ஏற்படும்,
பரவலாக ஏற்படும் சேதம் ஆதலின், சேதாரம் என்பது நன்கு பொருளை விளக்கவல்ல சொல்.
செது + அம் = சேதமென்றும் ஆகும்.
இவை இரண்டுமே முதனிலை திரிந்து விகுதி பெற்ற சொற்கள்.
சுடு> சூடு என்பது முதனிலை திரிந்து பெயரமைதற்கு எடுத்துக்காட்டு. வினைச்சொல் அல்லாதவையும் இவ்வாறு திரியும். இவற்றை பழைய இடுகைகளில் படித்துப் பட்டியலிட்டுக்கொள்க.
பது > பதி ( வினைச்சொல்). ஆனால் பது என்பது வினையாக வழங்கவில்லை. பது +ஆம் > பாதம் ஆகும். இதைப் பதி+ அம் > -பாதம் எனினும் அதுவே.
அடிச்சொல்லிலிருந்து வினையும் தோன்றும். பெயரும் தோன்றும்.
செது என்பது அடிச்சொல்லாயினும் அது வினைச்சொல்லன்று. உரிச்சொல் ஆகும். செது என்ற சொல் எவ்வாறு தோன்றியிருக்கு மென்பதை இன்னோர் இடுகையில் கவனிப்போம்.
செய்துதருதலில் வரும் தேய்மானம், ஆதலின் செய்தாரம் > சேதாரம் எனினுமாம். செய் > சே என்றும் திரியும் ஆதலின் இது ஓர் இருபிறப்பிச் சொல்.
எ-டு: செய்தி > சேதி. குறில்முதல் நெடில்முதலாதல்.
பருவதம் > பார்வதி.
அறிக மகிழ்க
மெய்பு பின்னர்.