வியாழன், 25 ஆகஸ்ட், 2022

திரவியம் திரட்டப்படுவது.

 திரவியம் என்ற தமிழ்ச்சொல்லை இன்று சுருக்கமாக அறிந்துகொள்ளுவோம்.

இதனைத தமிழ் என்று மெய்ப்பித்தலும் வேண்டின்,  திரள் -  திரளுதல் என்ற வினைச்சொல்லிலிருந்து புறப்படுங்கள்.  தொடர்பும் உறவும் சொற்களுக்கிடையிலும் வெளிப்படும்படி அறிவித்தலே உண்மையான கற்றலாகும். 

திரளுதல்:

திரள் >  திரள் + வு >  திரள்வு.    (திரளுதல் ).

ஒரு -வு விகுதி சேர்க்க அகராதி ஒன்றும் தேவையில்லை.

இனி,   இ + அம் என்ற இருவிகுதிகளைச் சேர்க்கவேண்டும்.

திரள்+வு+  இ+ அம் >  திரள்வியம்.

இப்போது,  ள் என்பதைக் கெடுத்து ( எடுத்து)  விடுங்கள்.

திரவியம் ஆகிவிடும்.  இறுதி விகுதி தவிர இடைவந்த விகுதி போன்றவற்றை இடைநிலைகள் என்றலும் கூடும்.  இவை எல்லாம் பலவேறு வகைகளில் குறிக்கும் திறன்களே. பெயர்களே இல்லாவிட்டால்  அது இது என்றன்றோ குறிக்கவேண்டிவரும்.  அது இலக்கணத்தை இன்னும் கடினமாக்கி எது என்று கேட்கும் நிலையை உண்டாக்கிவிடும்.  அதனால்தான் பெயர்கள் கொடுக்கிறோம்.  வீதிகளுக்கெல்லாம் பெயரில்லை என்றால் போய்ச்சேர்வது கடினம்!!  இடைநிலைகள் என்பது சரி.  விகுதிகள் என்றாலும் மோசமில்லை.   

திரட்டப்படும் விலையுள்ளது  அல்லது மதிப்புமிக்கதுதான் திரவியம்.

சொல்லமைப்புப் பொருள் அவ்வளவே.  மழைக்காலத்தில் பஞ்சு நீரை உறிஞ்சிக் கொண்டமை போல,  வழக்கில் சொற்கள் பிற பல பொருட்பருமனை அடைந்து விளையாடல்களைச் செய்யும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர். 

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

சுயம்பு தம்பு (தம்புசாமி, தம்பையா)

 சிவபெருமானை அகண்ட சுயம்பு  என்று விளக்கியுள்ளனர்.  அவர் அம்பிகையின் ஒரு பாகன்* என்றும் சொல்வர்.

முருகனுக்கும் சிவனுக்கும் ஒரு வேற்றுமை யில்லை என்றும்  சிவனே முருகன் என்றும்  அருணகிரிநாதர்   தம் பாடல்களில்  கூறுகிறார்.  ஒரு பெரும்புலவர் சிவனைப் பாடுவேன்  ஆனால்  முருகனைப் பாடமாட்டேன் என்று மிகுந்த பிடிவாதத்துடன் இருந்தாராம்.  அப்புலவரைத் தடுத்தாட்கொண்டு,  தன் உருவைக் காட்டி,  அவரை ஆண்டருளினாராம் முருகப்பெருமான். இருவரும் ஒருவரே என்று உணராதிருந்த புலவர் அவர்.

இயற்கையின் கண்ணுறும் அழகெல்லாம் முருகனே.  முருகு எனில் அழகு.

இனிச் சுயம்பு என்ற சொல்லைக் காண்போம்.

சொந்தமாகவே தோன்றி  இருத்தலை உடையதுதான்  சுயம்பு.

சொம் என்பது அடிச்சொல்.

சொம்+ தம் >  சொந்தம்.  இங்கு தம் என்ற இறுதி வருதல் காண்க.

தம் என்பதை முன் விளக்கியுள்ளோம்.

இனியும் சிறிது சொல்வோம்.

சொ >  சொம்.

சொ + (அ )ம் >  சொம்.     சொ + அம் >  சொயம்.>  சுயம்.   யகர உடம்படுமெய்.

முதலாவது அமைப்பில்,  அகரம் தொகுந்தது.   இரண்டாவதில் யகர உடம்படுமெய் தோன்றியது.   உடம்படுமெய் அற்ற அமைப்பும்  அஃது தோன்றிய அமைப்புமே இரண்டுக்கும் உள்ள வேற்றுமை.

சொ +  து >  சொத்து.

சொம் + து > சொத்து.  இதில் மகரம் தொக்கது.

சொம்+  து + அம் >  சொம்+ தம் > சொந்தம்.

சொந்தமாகத் தோன்றுதல் என்ற வழக்கை நோக்குக.

தானே முகிழ்த்தல்: முகிழ் > மூர் > மூர்த்தி.   தி விகுதி.

சுய =  சுவ.

சுயவம்பு >  சுயம்பு.    அம் =  அழகு.  அம்+ஐ > அம்மை,  அழகு.  சுய+ அம்+ பு.

சுவயம்பு > சுயம்பு.

 சொயம்பு > சுயம்பு.

இன்னா ஓசை விலக்கியே சொல்லாக்கம் முழுமை அடையும். இது ஏன் என்று புரியவில்லை என்றால் பின்னூட்டம் செய்து கேளுங்கள்.


இனி, தம் என்பதும் தாமே தோன்றியது என்று அமைந்து,  சுயம்பு என்றே பொருள்தரும்.

தம் + பூ .  (தாமே பூத்தல்,  பூத்தலுக்கு உள்ள பொருள்களில் தோன்றுதல் என்பதும் ஒன்று.)   பூ > பூமி.

தம்பூ >  தம்பு.   (தானே தோன்றியது).   பூ என்பதை நீட்டினும் குறுக்கினும் ஒன்றுதான்.

சுயம்பு தான் தம்பு.

தம்பு என்பதும் சிவநாமமே.  தம்பையா, தம்புச்சாமி என்பனவும் அதே.


அறிக மகிழ்க.

மீள்பார்வை பின்னர்.

எழுத்துப் பிறழ்ச்சிகள் காணின் பின்னூட்டம் செய்து உதவவும்.



சனி, 20 ஆகஸ்ட், 2022

சீந்தில் எனப்படும் பெரும்புகழ் மருந்துக் கொடி

 சீந்தில் என்பது ஒரு கொடியின் பெயர்.  இது சிந்துக்கொடி எனவும் குறிக்கப்பெறுகிறது. இதற்குப் பிறபெயர்கள் சீந்தி,  சிலாந்தி, சிவேதை,  சின்னம்,சின்னாருகம், சீலம், சீவசஞ்சீவி, பரிவை, பறிவை, பாதாளமூலம், பொற்சீந்தில், நற்சீந்தில், பொற்றாவல்லி, பொன்றாவல்லி, மதி ஆம்பல் (மதுவாம்பல்)  , மதுச்சிரம், மதுபருணிகை, வச்சாதனி  ( வைத்தால் தனி), வசீகரம்,  வயமது, வபாமது, வள்ளிக்கண்டம், விசலி, அமரை, அழுதை,  அனந்தை,  ஆகாசக்கருடன், ஆகாசவல்லி, ஆகாசி  முதலிய பலவாம்.

மது என்பது ம(யங்குவ)து என்பதன் எழுத்துச்சுருக்கச் சொல். இதை முன்னர் எழுதியுள்ளோம்.

நோய்தீர்க்கும் மரஞ்செடி கொடிகள் எவை என்று கண்டறிந்து நலமாக வாழ்வது எப்படி என்பதில் முன்னோர் பெரிதும் கவனம் கொண்டிருந்ததையே இப்பெயர்கள் உணர்த்துகின்றன.  இந்த அறிதொகுப்பில் பல இப்போது இல்லை என்பது இங்கு வருந்துவதற்குரியது ஆகும்.  இப்பெயர்களில் சில, வகைப்பெயர்களாயும் சில உயர்வகை குறிக்கும் பெயர்களாயும் இருக்கின்றன.

சீந்தி என்பது ஜீவந்தி என்றும் மாறிற்று.  இது மெல்லிய வேர்களை மண்ணில் பரவச்செய்து வளர்வது ஆகும்.  சீந்தில் என்பது சீந்தி( )  என்றானது கடைக்குறை. சீவந்தி என்பது ஜீவந்தி  என்றானது மெருகூட்டல்.  ( சீனாவிலிருந்து வந்தது சீனி என்ற இனிப்புத்தூள்.  அதுபின் ஜீனி என்றும் திரிந்தது காண்க).

சில் என்ற அடிச்சொல்  சின் என்று திரியும்.   கல் என்பது கன் என்று மாறியது போலாம்.  கன்> கனம்.  ( கல்லின் தன்மை, கனமாய் இருப்பது).

சின் > சின்னம் ( சீந்தில்).

சின் + து + இல் >  சீன்+து+இல் > சீந்தில்.      இதில்  னகர மெய்யீறு,  ந்  என்று திரியும்.  முதன் நீண்டு சீ என்றாகும்.    இன்னொரு சொல் இவ்வாறு திரிந்தது:  முன் > முந்தி.  சில் > சின் > சிந்து ( சிறு பா).

முது என்பதில் தோன்றிய மூதாதை என்ற சொல்,  முன் எழுத்து நீண்டு அமைந்ததும் அறிக.  மு> மூ.  மூத்தல், மூப்பு என்ற சொற்களும் நீண்டன. நீண்டது குறுகும்; குறுக்கம் நீளும்.  பேதமில்லை.

சில் > சின்.  சில் என்ற அடிச்சொல்,  சில என்ற பொருளும்  சிறியது என்ற பொருளும்   (  இருபொருள்)  உடையது.

புணர்ச்சியில்:,  சில் + நாள் >  சின்னாள்  ( சிலநாட்கள் ).

சின் > சின்னப்பன்.  (பெயர்).

சில் > சில்+ ஆம் + தி >  சிலாந்தி.  ( சீந்தில்).

ஒப்பீடு:
சில்> சில் + அம் + தி >  சிலந்தி.  ( பொருள்:  சிறிய  பூச்சி,  எட்டுக்கால்பூச்சி).  அம் என்பது சொல்லாக்க இடைநிலை.

சிறு + வேர் + தை >  சிவேதை.  ( இடைக்குறை). ( தை விகுதி).

சின்ன + அரு( மை ) +  (அ)கம் >  சின்னருகம்.  சின்ன அரு என்பது சின்னரு என்றது புணர்ச்சி.  பிற இயல்பான ஒட்டுக்கள்.

பரிவை என்ற சொல்,  இது பரவலாகப் பயன்பாடு கண்டதைக் குறிக்கும். நோயாளிக்குப் பரிவு காட்டுவது என்ற மனப்பதிவுச் சொல்லாகவும் இருக்கின்றது..  இருபொருளால் வருகிறது.   பர்  (பர, பரி)  அடிச்சொல்.

பரிவை என்பது பறிவை என்றும்  திரிந்தது. பறித்து வருவது எனினும் ஆகும்.

பிற சொற்கள் பின்னர். இதை முடித்திடவேண்டும்.

Gulancha Tinospora  என்பது இதன் தாவரவியல் (  நிலைத்திணையியல்  ) பெயர். இன்னொரு வகை குலான்சா காவோர்டிஃபோலியா  (caordifolia)  எனப்படும் என்று தெரிகிறது.  தகலோக் மொழியில்   Makabuhay  என்று பெயர் வழங்குகிறது.  இதன் வேர், இலை, கொடி, பழம் முதலிய பகுதிகளும் பயன்படுகின்றன.  Tinospora Crispa என்ற பெயரும் உள்ளது.

முதியவர்களுக்கு வரும் உடம்புவலி, மஞ்சட் காமாலை  முதலியவை மட்டுமின்றி இது ஒரு பன்னோய் நீக்கி என்றும் கருதப்படுகிறது.

இதிலிருந்து செய்யப்படும் சர்க்கரை போன்ற தூள் " சீந்திற்சர்க்கரை"  , "சீந்திலுப்பு"  என்றும் குறிக்கப்பெறும்.  சூக்குமம், சோமவல்லி, தந்திரகம், தூறுபுட்பம், நிறைதருதூறு, பஞ்சகமம், பகன்றை,    என்ற பெயர்களும் உள்ளன.,  தூறு என்பது செடியின் தூறு அல்லது கீழ்ப்பாகம்.

தொடர்புடைய பிற பூண்டுப் பெயர்கள்:   சிவதை. பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி (குறிஞ்சிப்பாட்டு. 88). (பிங்கலந்தை.) ; நறையால் முதலியவாம். சில மேல் குறிக்கவும் பட்டுள்ளன.

பனித்துறைப் பகன்றை  (சங்கச்செய்யுள் தொடர்)  என்பதனால்,  நீர்நிலைகள் உள்ள இடங்களில் இது செழித்து வளரும் என்று தெரிகிறது. ஆம்பல் என்று முடியும் பெயரும் கருதுக.  

பூண்டு என்பது ஒற்றை குறிக்குங்கால் "பூண்டுப்பல்" என்றும் குறிக்கப்படுவதால்,  ஆம் பல்  என்பது ஒற்றைச் சீந்தில் பூண்டு என்றும் குறித்தல் உரியது.  ஆம் பல் >  ஆகும் பல்.  இதிலிருந்து பொருள் திரிபினால், "ஆம்பல்" என்று திரிதலும் உடைத்தாம்.

சங்கச் சான்றோர் நன்கறிந்த கொடி சீந்தில்.  இத்தனைப் பெயர்கள் சீந்திலைக் குறிப்பனவாய் இருத்தலால், இது விரிந்த பயன்பாடு உடைய கொடி என்பது தெளிவு.

இதை வேற்றின மக்களும் பயன்படுத்தியுள்ளனர்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

Note:

Whilst reading this, if you wrongly enter the "compose mode" ( without authority), please do not disturb the text with your mouse  or otherwise. Please exit without causing changes to the text.   Some changes were made by unknown persons.  Thank you for your compliance.

To trespasser:  text not test.  Pl do not change it.