By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022
பக்திப் பொதுநலப் பூசை
[ வரும் சுமங்கலிப் பூசையில் அன்பர்கட்கு அளிக்கவும் அம்மனுக்கு அணிவிக்கவும் வாங்கி வைத்த பொருட்கள், இவ்வன்புப் பூசை அலுவலாளர்களால் கோவிலுக்கு எடுத்துச்செல்லப்பட்டன .
இவர்களைப் பாராட்டும் முகமாக இந்தக் கவிதை வெளிவருகிறது,
படங்களுடன்]
தந்நலம் அற்ற சேவை ---- உள்ளம்
தாம்தம வென்கின்ற எண்ணங்கள் இல்லா,
பொன்னலம் மக்கள்நலம்---- என்று
புவிதனில் போற்றுநர் மேவிய பூசை.
(சுமங்கலிப் பூசை என்றால் என்ன என்பதற்கு இது விடை.)
பூசையிற் பங்குகொண்டோர் ---- தமக்குப்
பொற்கைகளால் அன்னை அற்பளிப்புத் தர,
ஆசையைக் கொண்ட அன்பர் ---- இங்கே
ஆயத்த மாயினர் ஏயநல் அன்பினால்.
(பூசையில் கலந்துகொள்வோர் அன்னையின் அருளை அவள்தன் பரிசாக
வேண்டுவர் )
சுமங்கலிப் பூசைபொன் னேபோல் சுணங்கா
நலங்கள் பலவால் இலங்க ---- வலங்கொண்டு
நன்றே நடைபெற்று நாடெங்கும் போற்றவே
மன்றே வணங்கிடு மாண்பு.
( இது நம் வேண்டுதல் )
புதன், 3 ஆகஸ்ட், 2022
சாதாரணம் பற்றிய சிந்தனை.
ஒரு வீட்டில் சாவு எப்போதுமே நடந்துகொண்டிருப்பதன்று. சாவு என்பது. எப்போதாவது நடப்பதென்பதனால் அது அரிது என்று சொல்லலாம். ஆனால் உலக முழுவதையும் ஒருசேர நோக்கினால், சாவு நடந்துகொண்டே இருக்கிறது. மதுரையில் நாலுபேர், மானாமதுரையில் ஐந்துபேர் என்று கணக்கெடுத்தால், நியூ யார்க்கிலிருந்து பெய்ஜிங் வரை அது நடவாத இடமில்லை. சாகாத குடும்பத்தில் கடுகு வாங்கிக்கொண்டு வா என்று புத்தர் அனுப்பியதுபோல, எல்லாக் குடும்பத்திலும் எப்போதாவது எமன் விருந்தாளியாக வந்துவிட்டுப் போயிருப்பான். எமன் தான் எப்போதும் நம்முடன் இருப்பவனாயிற்றே. அதனாலேயே நாம் அவனை " எம்மவன். எம்மவன்" என்று பயப்பற்றுடன் குறிப்பிடுவோம். அவன் வந்துபோகிறவன் அல்லன். நம்முடன் உள்ளிருந்து என்றோ வெளிப்படுபவன். அவனை விருந்தாளி என்றது வெறும்பேச்சுக்காகவே.
சாவைத் தரும் நிலை, சா தாரணம். ( சா- சாவதைத்; தரு - தருநிலையை, அணம்- அணவி நிற்றல் என்று, இச்சொல் தமிழாவதைக் கண்டுகொள்க.ஒரு சொல்லை ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் உள்ளுறைவுகளைப் பிரித்தாலும் அதே பொருள் புலப்படும்படியாக அமைப்பது சிறப்புக்குரியது. இச்சொற்களைப் பொதுச்சொற்கள் என்று குறித்தனர் அறிஞர் சிலர்.
சாவைத் தரும் நிகழ்வுகளும் உலகிற் பல. தண்ணீர்த் தொட்டியில் விழுந்தாலும் இறக்கிறான், படுத்துத் தூங்கும் போதும் இறக்கிறான். சோறு விக்கிக்கொண்டும் இறக்கிறான். காரணங்கள் பற்பல. இறப்புதான் இயல்புநிலை.
சாதாரணம் என்பது இயல்பான நிலை என்ற பொருளை அடைந்தது, " பெறுபொருள்" ஆகும். உறுபொருள் சாவைத் தருநிலை என்பதுதான். இன்னும் சில விளக்கங்களும் உள்ளன. வந்துழிக் காண்க. சாவைக் கண்டு கலங்கிய நிலை வந்து, உடம்பைப் பாடம்பண்ணிய நிலை மாறிப் பின் இயல்பு என்ற நிலையையும் உணர்வையும் பெற மனிதக்குலம், காலம் எடுத்துக்கொண்டதென்பதை உணர்க.
அறிக மகிழ்க.
மெய்ப்பு: பின்.