அகவைபல கடந்துநடை தளர்ந்திறங்கி
ஆடியாடிச் செல்கின்ற நிலையடைந்து
முகமேதோல் சுருங்கிவலி கைகாலூர்ந்து
முடக்கமெனும் கட்டமது நேர்ந்தபோதும்
திகைப்பதுதீர் முதியர்நட மாட்டமேற்றி
தேனில்லா விடினும்நற் சருக்கரைபோல்
வகையாக வரப்போக உறவுநண்பை
வளர்விக்க இயங்கியொன்று வந்ததேபார்!
மின்னடையாற் றல்தன்னால் ஒலியெழுப்பி
மீயெனுமோர் இசைமீட்டி ஓட்டம்கூட்டும்
தன்விடுகை வண்டியிதைத் தனதாய்க்கொண்டு
தடுக்கிவிழும் முதியோரும் அங்குமிங்கும்
மின்னலைப்போல் இல்லெனினும் விரைந்துசற்று
மேனிலையில் வேலைகளைத் தீர்க்குமாற்றல்
பன்னலமும் தாம்பெறுவர் இரவுவேளை
பகல்புலர்ந்த நலம்காண வந்ததேபார்!
மேயென்றே ஓடுவதாம் ஆடுமின் வண்டிநீயே
மீயென்றே மீட்டுவிரைந் தோடு.
அரும்பதவுரை:
அகவைபல கடந்து --- முதுமை அடைந்து
தளர்ந்திறங்கி - தளர்ந்து இறங்கி, இறங்கி - வாழ்க்கை
இறங்குமுக மாகி,
வலி கைகாலூர்ந்து -- கைகால் வலி மேலிட்டு;
முடக்கமெனும் கட்டமது நேர்ந்தபோதும் - முடக்கம் ஏற்பட்டாலும்.
திகைப்பது தீர் -- திகைப்பை நீக்கிக்கொள்க;
முதியர்நட மாட்டமேற்றி ---- முதியவர்களுக்கு அவர்களின் நடமாட்டத்தை
அதிகமாக்கி;
தேனில்லா விடினும்நற் சருக்கரைபோல் ---- தேன் கிடைக்காத போது=
சர்க்கரை கிட்டியது போல;
வகையாக வரப்போக -- நல்லபடி( உறவினர் நண்பரிடை) ஈடுபாடு மிக;
உறவுநண்பை வளர்விக்க--- உறவுகளையும் நட்பையும் பெருக்க,
இயங்கியொன்று வந்ததேபார்! ---- ஒரு வண்டி வந்துள்ளது. பார்க்கவும்.
மின்னடையாற்றல் தன்னால் -- பாட்டரி வலிமையினால்
ஒலியெழுப்பி --சத்தம் ஏற்படுத்தி;
மீயெனுமோர் இசைமீட்டி -- மீ என்று ஒலியுடன்;
ஓட்டம்கூட்டும் -- ஓடுகின்ற,
தன்விடுகை வண்டியிதை --- முதியவர் தானே ஓட்டிச் செல்லும் இந்த வண்டியை;
தனதாய்க்கொண்டு -- வாங்கி வைத்துக்கொண்டு,
தடுக்கிவிழும் முதியோரும் அங்குமிங்கும்;
மின்னலைப்போல் இல்லெனினும் - அதிவேகமாய் இல்லை என்றாலும்;
விரைந்துசற்று கொஞ்சம் விரைவாக;
மேனிலையில்- நல்ல விதமாக;
வேலைகளைத் தீர்க்குமாற்றல், ~; தீர்க்கும் - முடிக்கும், ஆற்றல் - திறம்;
பன்னலமும் தாம்பெறுவர் -- பல நலமும் அடைவர்.
இரவுவேளை பகல்புலர்ந்த - வாழ்வின் இரவில் உள்ள முதியவர் கூட
பகலில் வந்துவிடும்,
நலம்காண வந்ததேபார்! என்றவாறு.
நண்பு நட்பு இருவகையாக எழுதப்படும். நட்டல் என்பதும் சரி.
அறிந்த சொற்கள் சிலவற்றுக்குப் பொருள் விடப்பட்டுள்ளது.
வண்டிகளின் படம்:
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.